ரெண்டு பேரு இருந்தால் போதும்! யார் வேணா கட்சியை ஆரம்பிக்கலாம்! விஜய் அரசியல் குறித்து கி.வீரமணி பரபர
சென்னை: நடிகர் விஜய் புதிதாகத் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பாகத் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் பரவின. அவரது செயல்பாடுகளும் கூட அரசியலை நோக்கியே இருந்தது. தொகுதி வாரியாக அதிக மார்க் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை தருவது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது என அவரது செயல்பாடுகள் கவனிக்க வைத்தது.

இந்தச் சூழலில் தான் கடந்த பிப். 2ஆம் தேதி கட்சி தொடங்குவதாக விஜய் அறிவித்தார். அதற்குத் தேவையான ஆவணங்களை அவரது மக்கள் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் நேரடியாக டெல்லிக்குச் சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். அவரது கட்சிக்குத் தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
விஜய் அரசியல்: ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு நேரடியாக அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்திருந்தார். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்றும் 2026 சட்டசபைத் தேர்தலில் தான் போட்டி என்றும் கூறியிருந்தார். கட்சியின் கொள்கைகள் குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை.. அவை அனைத்தும் பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். விஜய் அரசியல் வருகை தொடர்பாகப் பலரும் பலவித கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே இது தொடர்பாகத் திராவிட கழகத் தலைவர் கி வீரமணி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கி வீரமணி, "கொள்கை என்னவென்று முதலில் சொல்லட்டும்.. அதன் பிறகு நாம் கருத்துச் சொல்லலாம். அவர் நல்ல நடிகர் என்பதில் சந்தேகமே இல்லை.. ஆனால், அரசியல் வேறு நடிப்பு வேறு.. இங்கே கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.
2 பேர் இருந்தா போதும்: இரண்டு பேர் இருந்தால் கூட கட்சி ஆரம்பிக்கலாம்.. ஒருவர் முன்மொழியவேண்டும்.. இன்னொருவர் வழிமொழியவேண்டும்.. அது போதும். கட்சியைத் தொடங்க அவருக்கு முழு உரிமை இருக்கிறது.. முழு வசதி, வாய்ப்பு இருக்கிறது.. அந்த கட்சிக்கு நாம் ஆதரவு தருகிறோமா இல்லையா என்பது அக்கட்சியின் கொள்கைகளை வைத்தே முடிவு செய்ய முடியும். பெரியார் தொடங்கி இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் அனைவரும் கொள்கைகளை முன்னால் வைத்து கட்சியை பின்னால் வைத்தவர்கள் தான்..
ஆனால், கட்சியை அறிவித்துவிட்டு.. அக்கட்சிக்கு என்ன கொள்கை என்பதை இரண்டு மாதங்கள் கழித்துச் சொல்வோம் என்பது இவர்கள் கொள்கையைத் தேடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. இவர்களை மக்கள் தேடுவார்களா இல்லையா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
கொள்கை என்ன: அவர் வரலாற்றைப் படித்து இருக்கலாம்.. அவர் நல்லவர் தான். தனிப்பட்ட முறையில் அவரை நான் எதுவும் சொல்லவில்லை.. ஆனால், ஒரு கட்சியை இயக்கத்தை ஆதரிக்கலாமா வேண்டாமா என்பதை மக்கள் கொள்கையை வைத்தே முடிவு செய்வார்கள். பேசும் போது என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. ஆனால், எந்தவொரு கட்சிக்கும் கொள்கை தேவை..
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வோம் இதுதான் எங்கள் கொள்கை என்று முதலில் சொல்லட்டும்.. அதன் பிறகு அவரை ஆதரிக்க வேண்டுமா அல்லது எதிர்க்க வேண்டுமா என்பதை முடிவு செய்வோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications