சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் படுக்கை அறையில் தலைமை காவலர்.. ஆடிப்போக வைத்த காட்சி
சென்னை: சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த காவலர் ஜெயிலா, ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தலைமை காவலர் ஜெயிலா நேற்று காலை பணிக்கு சென்றுவிட்டு, மாலையில் படுக்கை அறைக்கு சென்றவர், திரும்ப வரவே இல்லை என்ன நடந்தது என்று பார்ப்போம்.
சென்னை, கோவை உள்பட பல்வேறு பெரிய நகரங்களில் பணியாற்றும் காவலர்கள் பணிச்சுமையை அதிகமாக எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குற்றமும் ஒவ்வொரு விதம் என்பதுடன், ஒவ்வொரு வழக்கும் ஒவ்வொரு விதமான சிக்கல்களுடன் இருக்கும். அதே நேரம் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத அளவிற்கு பணிகள் அவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாதது ஒருபுறம், உறவினர்கள் நண்பர்களின் திருமணங்களுக்கு, விஷேசங்களுக்கு செல்ல முடியாத நிலையை அவர்கள் அதிகமாக எதிர்கொள்கிறார்கள்.

அதேபோல் பணியின் காரணமாக காவலர்கள் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி சிகிச்சை பெறுவதும் நடக்கிறது. காவலர்கள் வெளியில் கம்பீரமாக சுற்றினாலும், அவர்களுக்கு வரும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் பெரிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக சில காவலர்கள் திடீரென உயிரைவிடும் சம்பவங்களும் நடக்கிறது.. சென்னை ஆர்கே நகர் காவல் நிலைய தலைமை காவலர் உயிரையே விட்டுவிட்டார். என்ன நடந்தது?
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த 44 வயதாகும் ஜெயிலா என்பவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வந்தார். இவரது கணவர் பிரபாகரன் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று காலை பணிக்கு சென்ற தலைமைக்காவலர் ஜெயிலா மாலை வீட்டுக்கு வந்து படுக்கை அறைக்கு சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டார்.
நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த கணவர் பிரபாகரன் கதவை தட்டியிருக்கிறார் கதவு தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்ற போது ஜெயிலா தூக்கில் தொங்குவதை கண்டு ஆடிப்போனார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
உயிரிழந்த தலைமை காவலர் ஜெயிலாவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வேலை பளு காரணமாக பெண் போலீஸ் ஜெயிலா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications