மேட்ரிமோனியல் தளத்தில் பதிவு செய்றீங்களா? உஷார்.. கேகே நகர் பெண் டாக்டருக்கு நடந்த பெரிய சம்பவம்
சென்னை: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.2¾ கோடி மோசடி செய்த நைஜீரிய ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
திருமண மோசடி என்பது இப்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. செல்வந்தர்கள், பெரிய வேலையில் உள்ளவர்கள், ஆன்லைன் மேட்ரிமோனியல் ஆப்களில் வயதை குறைத்துக்காட்டி ஏமாற்றி திருமணம் செய்வது அதிகரித்துள்ளது. இதேபோல் 10ம் வகுப்பு கூட படிக்காத சிலர் டாக்டர், என்ஜினீயர் என்று கூறி, சொகுசு கார்களில் வலம் வருவது போல் போட்டோ போட்டு திருமண ஆன்லைனில் பலரை ஏமாற்றுகிறார்கள்.

திருமண ஆன்லைன் இணையதளங்களில் வசதியான பெண்களை குறிவைத்து, கணவரை பிரிந்த பெண்கள், நடுத்தர வயது பெண்களை குறிவைத்து பல்வேறு மோசடிகள் நடந்து வருகின்றன. அப்படித்தான் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளது நைஜீரிய கும்பல்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர் , சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், நான், மாப்பிள்ளை வேண்டி பிரபல மேட்ரிமோனியல் வெப்சைட் ஒன்றில் என் விவரங்களை பதிவு செய்திருந்தேன்.
அப்போது, ஹாங்காங்கில் தான் டாக்டராக இருப்பதாக கூறி வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்டு, எஸ்எம்எஸ் அனுப்பி ஒருவர் பேசத் தொடங்கினார். தன்னுடைய பெயரை அலெக்ஸாண்டர் சான்சீவ் என்று கூறினார். பின்னர், அவர் என்னை பிடித்திருப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள விரும்புதாக கூறினார். மேலும் அவர் நம்பிக்கை தரும் வகையில் பேசினார்.. பேச்சு நம்பும்படியாக இருந்ததால் அவரை எனக்கு பிடித்து போனது. இந்நிலையில், அவர் எனக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
அதன் பிறகு டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி சுங்க வரி கட்டினால் மட்டுமே உங்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசு பொருள் பார்சல் உங்கள் கைக்கு வந்து சேரும் என்றார். இதை உண்மை என நம்பி அவர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சம் அனுப்பினேன்.
அதன் பிறகு எனக்கு பரிசு பொருள் அனுப்பிவைத்ததாக கூறிய டாக்டர் மற்றும் சுங்கத்துறை அதிகாரி என்று பேசியவர் என அனைவரது செல்போன்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.. அதன் பிறகே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்." இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் விசாரித்தனர். மோசடி கும்பல் டெல்லியில் இருந்து இந்த தில்லாங்கடி வேலையை செய்துவிட்டு, அங்கேயே பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து டெல்லிக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுபுச்சி (வயது 29), சினேடு (36) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 3 லேப்டாப்கள் மற்றும் 40 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்தனர் கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னைக்க அழைத்து வந்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்..












Click it and Unblock the Notifications