சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் அடுக்குமாடியில் மின்வெட்டால் நின்ற லிப்ட்.. 6வது மாடியில் விபரீதம்
சென்னை: சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் மின்வெட்டால் லிப்டில் சிக்கிய 52 வயது முதியவர், ஆறாவது மாடியில் இருந்து இறங்க முயன்ற போது, நடக்கக்கூடாத சம்பவம் நடந்தது.
சென்னை புளியத்தோப்பு கேபி பார்க்கில் தமிழ்நாடுநகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2016-ம் ஆண்டு சுமார் 112 கோடி ரூபாய் செலவில் 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்றதாக இருப்பதாக அந்த குடியிருப்பில் உள்ள மக்கள் பெரிய அளவில் குற்றம்சாட்டினார்கள்.

இதையடுத்து புதிதாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஐ.ஐ.டி நிறுவனம் அங்கு ஆய்வு மேற்கொண்டதில் தரமற்ற கட்டுமானப் பொருள்களைக் கொண்டுதான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டதாக கூறப்பட்டது. இது அப்போது பெரும் விமர்னங்கள் எழுந்தது. இதையடுத்து சில பராமரிப்பு பணிகள் அப்போது மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கேபி பார்க் அடுக்குமாடி குடியிருப்பின் ஜி பிளாக் பகுதியில் 52 வயதாகும் கணேசன் என்பவர் வசித்து வருகீறார். இவரது மனைவி மலர். கணேசனும் மலரும் அப்பகுதியில் டிபன் சென்டர் ஒன்று நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சங்கீதா, சதீஷ்குமார் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் கணேசன் வெளியே சென்று விட்டு தனது வீட்டிற்கு ஜி பிளாக்கில் உள்ள பத்தாவது மாடிக்குச் செல்வதற்காக லிப்ட்டில் சென்றிருக்கிறார். அப்போது ஆறாவது மாடியில் லிப்ட் பழுதாகி நின்றுள்ளது. எனவே, உடனடியாக வாட்ச்மேன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் மேலே சென்று பார்த்துள்ளார்கள்.
அதற்குள் கணேசன் பதற்றத்தில் கீழே இறங்க முயற்சித்துள்ளார். அப்போது, அவர் கால் இடறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேசின் பிரிட்ஜ் போலீசார், கணேசனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
இந்நிலையில் இந்த லிப்ட் விபத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பு முறையாக பராமரிக்காமல் இருந்ததே காரணம் என கேபி பார்க் குடியிருப்பில் வாழும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லிப்ட் முறையாக இயங்கவில்லை என்றும், அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.












Click it and Unblock the Notifications