உட்பிரிவு பட்டா.. சர்வேயர் தவறால் பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டாவில் இடம் அதிகமானால் என்ன செய்வது?
சென்னை: வீட்டு மனைகளை வாங்குவோர் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை பட்டாவில் அளவு மாறுவது தான்.. பத்திரப்பதிவு செய்த பின்னர் பட்டாவிற்கு விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பிக்கும் போது, பட்டாவிற்கு அளவு மாறி உள்ளதாக கூறி பட்டா தர மறுப்பார்கள். விசாரித்து பார்த்தால், பக்கத்து இடத்தில் உள்ளவர்களுக்கு தவறுதலாக சர்வேயர் அதிக இடத்தை அளந்து பட்டா கொடுத்து விடுவார். அப்படிப்பட்ட சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையில் ஏதேனும் சட்ட ரீதியாக சிக்கல்களை சந்தித்தால், உடனே வழக்கறிஞர்களின் உதவியை நாடுங்கள். அதுவே பல பிரச்சனைளுக்கு தீர்வாக இருக்கும். வில்லங்கமான நிலத்தை வாங்கி அவதிப்படுவது, தண்ணீர் தேங்கும் இடத்தில் இடம் வாங்கி அவதிப்படுவது, அரசு நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்களிடம் நிலத்தை வாங்கி ஏமாறுவது, பஞ்சமி நிலங்களை வாங்கி ஏமாறுவது, நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் நிலத்தை வாங்கி சிக்கலுக்கு உள்ளாவது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, நிலம், வீட்டு மனை வாங்குவோர் கவனமாக இருக்க வேண்டும்.

அதேநேரம் எல்லாம் சரியாக இருந்து வீட்டு மனை வாங்குகிறீர்கள் என்றால், பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டா வாங்கிவிடுங்கள். உட்பிரிவு இல்லாத பட்டா என்றால், பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டா கிடைத்துவிடும். ஆனால் வீட்டுமனை முதல் முறையாக பிரித்து விற்கப்பட்டிருக்கும் போது, உட்புரிவுடன் கூடிய பட்டா தான் வழங்குகிறார்கள். உட்புரிவு பட்டாவை பொறுத்தவரை லேஅவுட் போட்டவர்கள் வீட்டு மனைகளை பிரித்திருப்பார்கள். அந்த வீட்டு மனைகளை வாங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் பத்திரப்பதிவு செய்த உடனேயே பட்டாவிற்கு விண்ணப்பித்து விடுங்கள்.. அப்படி செய்தால் உடனே பட்டா கிடைக்கும். அதேபோல் சிக்கல்கள் ஏதும் பின்னாளில் வருவதற்கு வாய்ப்பு குறைவு.
எனினும் உட்புரிவு பட்டாவை பொறுத்தவரை, உங்கள் இடத்தின் அளவும், பக்கத்து இடத்தின் அளவும் பத்திரத்தில் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். அடுத்ததாக பத்திரத்தில் அளவுகள் சரியாக இருந்தாலும், சர்வேயர்கள் செய்யும் சில தவறுகளால் பட்டாவில் சிலருக்கு அளவு அதிகமாகவும், சிலருக்கு அளவு குறைவாகவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உதாரணத்திற்கு உங்கள் பக்கத்து இடத்தில் உள்ளவர் உங்களுக்கு முன்பு இடம் வாங்கினார் என்று வைத்துக் கொள்வோம். அந்த இடத்திற்கு அவர் பட்டா வாங்க விண்ணப்பித்திருப்பார். அப்படி பட்டாவிற்கு அவர் விண்ணப்பிக்கும் போது, சர்வேயர் பத்திர அளவுப்படி சரியாக அளந்து பட்டா அளிக்க வேண்டும்.
மாறாக அங்கு ஊண்டப்பட்டிற்கும் கல் அளவை தவறாக கணக்கிட்டு உங்களது ஐந்து அடி அல்லது ஆறு அடி நிலத்தை சேர்த்து அளந்து அவருக்கு பட்டா வழங்க வாய்ப்பு உள்ளது. பட்டா வாங்கியவர் இதனை கவனிக்காமல், தனக்கு பட்டா கிடைத்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சியுடன் சென்றுவிடுவார். ஆனால் நீங்கள் பட்டா வாங்க விண்ணப்பிக்கும் போது தான், சர்வேயர் தவறாக அளந்து கொடுத்த விஷயமே தெரியவரும். சர்வேயர் தவறாக அளந்து பட்டா அளவை குறிப்பிட்டு பக்கத்து வீட்டில் உள்ளவருக்கு பட்டா கொடுத்துவிட்டால், நீங்கள் குறிப்பிடும் அளவிற்கு பட்டாவை சர்வேயர் அளந்து தர முடியாது.
ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்ட இடம் இன்னொருவர் பெயரில் பட்டா வழங்கப்பட்டிருக்கும். இதனால் அளவை மாற்றி குறைந்த அளவு இடத்திற்கே உங்களுக்கு பட்டா கிடைக்கும் என்று சர்வேயர்கள் கூறுவார்கள். அதாவது ஆளுக்கு 1200 சதுர அடி நிலம் வாங்கியிருக்கும் போது, பக்கத்து வீட்டுக்காரருக்கு 1500 அடியாக பட்டா வழங்கி விட்டால், உங்களுக்கு வெறும் 900 அடிக்குத்தான் பட்டா அவர்களால் வழங்க முடியும். இப்படியான சிக்கலை சந்தித்தால், ஏற்கனவே பட்டா வாங்கியவரை அழைத்து பேசி பிரச்சனையை கூறுங்கள். இருவரும் சேர்ந்து மனு அளித்தால், பழைய பட்டாவை ரத்து செய்து, புதிதாக இருவருக்கும் பட்டா வழங்க தாசில்தார் உத்தரவிடுவார்.
அதன்பிறகு இடத்தை சரியாக அளந்து சர்வேயர் அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் இருவருக்கும் பட்டா வழங்கப்படும். ஒருவேளை பட்டா பெற்றவர், அதற்கு சம்மதிக்காவிட்டால், நீங்கள் அவருடைய பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்ய வேண்டும்.
அதன்படி வட்டாட்சியர் ஆய்வு செய்து, சர்வேயர் செய்தது தவறு என்று தெரியவந்தால், பழைய பட்டாவை ரத்து செய்து புதிய பட்டாவை இருவருக்கும் அளிப்பார். இதுவே இப்போது உள்ள நடைமுறையாகும். எனவே பட்டா விவகாரத்தில் பத்திர அளவும், பட்டா அளவும் ஒரே மாதிரி உள்ளதா என்பதை உடனே பார்த்துவிடுங்கள். வீடு கட்டிவிட்டால், அல்லது கட்டிடம் எழுப்பிவிட்டால் இருவருக்குமே சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம் ஆகும்.












Click it and Unblock the Notifications