22 கேரட், 18 கேரட் எல்லாம் பழசு..இப்போ 9 கேரட் தங்கம் தான் புதுசு.. ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
சென்னை: தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இறக்குமதி வரியைக் குறைத்த போதிலும் அது மளமளவென உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் வாங்குவதே பலருக்கும் கனவாக மாறி வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வு குறித்துப் பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இப்போது டிரெண்டாகி வரும் ஒரு வகை தங்கம் குறித்தும் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை எப்போதும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,000 வரை நெருங்கிய நிலையில், மத்திய அரசு அதன் இறக்குமதி வரியைக் குறைப்பதாக அறிவித்தது. இதையடுத்து தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது.

உயரும் தங்கம்: ஆனால், அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. இப்போது தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நேற்றைய தினம் கூட சென்னையில் 22 கேரட் தங்கம் ரூ.22 உயர்ந்து ரூ.6720க்கு விற்பனையானது. வரும் காலங்களில் இது மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலையில், பலருக்கும் தங்கம் வாங்குவது கனவாக மாறி வருகிறது. இதற்கிடையே தங்கம் குறித்தும் தங்க விலை உயர்வு குறித்தும் பேசிய பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், 9 கேரட் தங்கம் குறித்துப் பேசியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக அவர் தனது சமீபத்திய வீடியோவில், "நமது நாட்டில் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு வேகமாகக் குறையாமல் இருப்பதை ரிசர்வ் வங்கி தடுத்து வருகிறது. அவர்கள் கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியை விற்று ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுத்து வருகிறார்கள். நாம் கேஸ், பெட்ரோல் என எல்லாவற்றுக்கும் வரி கட்டுவோம். ரிசர்வ் வங்கி அந்நிய முதலீட்டாளர்கள் அதிக லாபத்தில் பத்தை வெளியே எடுத்துச் செல்ல இதுபோல நல்ல ரூட் போட்டுக் கொடுக்கிறார்கள்.
9 கேரட் தங்கம்: இதனால் நாமும் தங்கத்தை வாங்க வேண்டும். தங்கம் விலை அதிகரிக்கப் போவது நிச்சயம். இப்போது பல நகைக் கடைகளும் 9 கேரட் நகைகளை விற்க ஆரம்பித்துவிட்டன. 22 கேரட், 18 கேரட் தங்க நகைகளை யாராலும் வாங்க முடிவதில்லை. அந்தளவுக்கு விலை அதிகரித்துவிட்டது. இதனால், 9 கேரட் தங்கத்தைப் பலரும் வாங்க ஆரம்பித்துவிட்டனர். இந்த 9 கேரட் தங்கத்தின் தரம் சரியாக இல்லை எனப் புகார்கள் வந்ததால் அதையும் ஹால்மார்க் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
அதாவது 9 முதல், 24 கேரட் என அனைத்து வகையான தங்கத்தையும் ஹால்மார்க் செய்ய மத்திய அரசு சொல்கிறது. இதன் மூலம் தங்கம் எவ்வளவு விற்பனையாகிறது என்பதும் மத்திய அரசுக்குத் தெளிவாகத் தெரியும். மேலும். ஹால்மார்க் செய்தால் தான் தரமான தங்கம் என்பதை உறுதி செய்ய முடியும்,
அடுத்து என்ன நடக்கும்: தங்கம் விலை உச்சம் தொட்டதும் பலரும் வெள்ளியை நோக்கி மக்கள் வருவார்கள் என நினைத்தனர். ஆனால், நான் முன்பே சொன்னேன் தங்கம் விலை உயரும் போது மக்கள் உடனடியாக வெள்ளியை நோக்கி வர மாட்டார்கள். தங்கத்தின் கேரட் மட்டும் இதுபோல முதலில் குறையும்.
இப்போது நாம் தங்கம் இறக்குமதி செய்யும் வேகத்தைப் பார்த்தால் அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் (4வது இடத்தில் இருந்து)இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்துவிடும் போலத் தெரிகிறது. சுமார் 750 டன்னாக தங்கம் இறக்குமதி உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதான் இப்போது டிரெண்ட்: தங்கம் விலை அதிகரிக்கும் நிலையில், செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. தங்கம் விலை அதிகரிப்பதாலும் இதுபோன்ற சம்பங்களாலும் பல தங்க நகைக் கடைகள் இப்போது 9 கேரட் நகைகளை விற்கத் தொடங்கியுள்ளன. அதற்கு நல்ல வரவேற்பும் இருக்கிறதாம். இப்போது 9 கேரட் தங்கத்தில் ஹால்மார்க் இல்லை. அதைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வரும் நிலையில், ஹால்மார்க்கை கட்டாயம் ஆக்கினால் அனைவருக்கும் நல்லது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications