லோக்சபா தேர்தல்: 20:20தான்-வேற வழி இல்லை ராசா! கறாரா சொன்ன டெல்லி- கடுப்பான எடப்பாடி-வெடித்த அதிமுக!
சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவிடம் இருந்து 20 தொகுதிகளை தன்னிச்சையாகவே எடுத்துக் கொள்வது என்பதில் டெல்லி பாஜக மேலிடம் திட்டவட்டமாக இருப்பதாலே அக்கட்சித் தலைவர் கொந்தளித்து போய் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சிக்கின்றனர் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பேரறிஞர் அண்ணாவை முத்துராமலிங்க தேவர் மிரட்டினார்; அண்ணாவின் ரத்தத்தால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்வேன் எனவும் முத்துராமலிங்க தேவர் எச்சரித்தார் என்பதுதான் அண்ணாமலையின் பேச்சு. இந்த பேச்சுக்கு ரொம்பவும் லேட்டாகவே அதிமுக தரப்பில் இருந்து அக்னி அம்புகள் வீசப்படுகின்றன. திமுகவும் மைல்ட் டோனில் எதிர்ப்பு தெரிவிக்கிறது.

டெல்லி பயணம்: ஆனால் உண்மையில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் என்பது, அண்ணாவை மையப்படுத்தியது அல்ல.. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை மையமாகக் கொண்டது என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் கருத்து.
பறிபோன 9 தொகுதிகள்: தமிழ்நாட்டில் அதிமுகவும் பாஜக கூட்டணியில் இருக்கிறது என்பதுதான் டெல்லியின் நிலைப்பாடு. அதிமுக என்கிற கட்சி தமது கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்பது டெல்லி பாஜகவின் திட்டவட்டமான முடிவு. இதனால்தான் அறிவிக்கப்படாமலேயே ஏற்கனவே 9 லோக்சபா தொகுதிகள் எங்களுக்குதான் என அடம்பிடித்து பறித்து களப் பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டது பாஜக. இதனை அதிமுக கொஞ்சமும் ரசிக்கவில்லை.
வேறவழியே இல்லை ராசா: இந்நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது 9 தொகுதிகளை பாஜக தன்னிச்சையாக எடுத்தது பற்றி புகார் சொல்ல நினைத்திருந்தாராம் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கத்தான் வேண்டும்; அதுவும் நாங்கள் கேட்கிற தொகுதிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என்கிற டோனில் 'கறார்' பேச்சு இருந்ததாம். இதை தட்டிக் கழிக்க முடியாமல்தான் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி கொந்தளிப்பு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்குள் இருக்கும் ஸ்லீப்பர் செல்களான 'ஏக்நாத் ஷிண்டேக்கள்'தான் இந்த நெருக்கடிக்கே காரணம் என சகாக்களிடம் குமுறி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆதங்கத்தையும் ஆவேசத்தையும் நேரில் பார்த்த சகாக்கள், ஆகட்டும் பார்க்கலாம் என முடிந்த அளவுக்கு அண்ணாமலையை இறங்கி அடித்து ஆடுகிறார்களாம்.
அதிமுக தலைவர்கள் ஆவேசம்: இதை ஆவலுடன் எதிர்பார்த்ததைப் போல ஆக முடிந்தவரை அண்ணா திமுகவை அவமானப்படுத்தி மக்களிடத்தில் இருந்து அன்னியப்படுத்திவிட வேண்டும்; எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் திமுக- பாஜக என்ற நிலையை உருவாக்கவேண்டும் என்ற கனவுடன் தமிழ்நாடு பாஜக தரப்பும் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கிறது என விவரிக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications