ஒரு பக்கம் முதல்வர்.. மறுபக்கம் முருகன்.. இதுல "அவர்" யாரு.. என்ன நடக்கிறது கூட்டணிக்குள்?
அதிமுக பாஜக கூட்டணிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன
சென்னை: ஒருபக்கம் முதல்வர் எடப்பாடியார், தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினால், மற்றொரு பக்கம் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மேலிடம்தான் அறிவிக்கும் என்கிறது தமிழக பாஜக. என்ன நடக்கிறது இந்த கூட்டணிக்குள்?!
அமித்ஷா வந்ததுமே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியானது.. இறுதியானது.. ஆனால் சீட்தான் எத்தனை என்று முடிவாகவில்லை.. அதை பற்றி தங்களுக்குள் கலந்து பேசிவிட்டு சொல்வதாக அதிமுக தலைமை அமித்ஷாவிடம் உறுதி தந்ததாக சொல்லப்பட்டது.
முன்னதாக, ஓபிஎஸ்சும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டதால், அதிமுகவுக்குள் இருந்த பூசலும் ஒருவழியாக முடிவுக்கு வந்ததையடுத்து, முதல்வர் எடப்பாடியார் தன் பிரச்சாரத்தை துவக்கினார்.

பாஜக தலைமை
ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் பேச்சு சற்று அதிமுக தலைமைக்கே அதிர்ச்சியை தந்தது என்றே சொல்லாம்.. அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.. "முதல்வர் வேட்பாளரை அதிமுக எப்பவோ அறிவித்துவிட்டது... அதனால், முருகன் சொன்ன கருத்து ஏற்கத்தக்கதல்ல" என்றார்.

எல்.முருகன்
ஆனால், மறுபடியும் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், "அதிமுக முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.. தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்... முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் கட்சித் தலைமைதான் அறிவிக்கும்" என்றார்.

நிலைப்பாடு
இது போதாமல் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்புவும் இதையேதான் சொன்னார்.. ஆக, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அதிமுக - பாஜக இடையே ஒருமித்த கருத்து இல்லை.. ஏன் இந்த நிலைப்பாடு? என்ன நடக்கிறது கூட்டணிக்குள்? என்று ஒரு சில பாஜக நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

தவறில்லை
"கடந்த நாடாளுமன்ற தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில்தான் சந்தித்தோம்.. அதுமாதிரியே இந்த சட்டமன்றத் தேர்தலையும் இதே பெயரில்தான் சந்திக்க உள்ளோம்.. இந்த கூட்டணிக்கு பாஜக தலைமை தாங்க உள்ளதால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தலைமை அறிவிக்கும் என்று முருகன் சொல்கிறார்.. இதில் என்ன தவறு இருக்கிறது? முருகன் பொறுப்புக்கு வந்ததில் இருந்து தமிழக பாஜக பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.. ஏராளமானோர் அக்கட்சியில் இணைந்தும் வருகிறார்கள்.. அந்த முக்கியத்துவத்தை அறிந்துதான் முருகன் சொல்கிறார்.. அதனால் அதில் தவறேதுமில்லை.. தேர்தல் முடிந்தபிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்தால் போதும்" என்கின்றனர்.

50 சீட்டுக்களா?
அதிமுக தரப்பில் இதை பற்றி சொல்லும்போது, "பாஜக 60 சீட் கேட்டது.. குறைந்தபட்சம் 50வது வேண்டும் என்று கேட்கிறார்கள்.. மேலும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளிலெல்லாம் பூத் கமிட்டி ஆட்களை நியமிக்கும் வேலையிலும் இறங்கிவிட்டனர்.. ஆனால், 50 சீட் தரும் அளவுக்கு அதிமுக இல்லை.. வேண்டுமானால் 20 சீட் தரப்படலாம்.. எங்கள் முதல்வர் அறிவித்தபடி பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்.. எங்களுக்கு சொல்ல பல சாதனைகள் உள்ளன.. அவைகளை முன்னிறுத்தி வாக்கு கேட்டு வருகிறோம்" என்கிறார்கள்.

பிரச்சாரம்
ஆனால், அரசியல் நோக்கர்கள் இதை பற்றி சொல்லும்போது, "இதுல 2 விஷயத்தை நாம கவனிக்கணும்.. முதல்வரின் இந்த பிரச்சாரத்தை துணை முதல்வர் ஓபிஎஸ்தானே உற்சாகத்தோடு பிரச்சாரத்தை துவங்கியிருக்கணும்? ஏன்னா அவர்தான் முதல்வர் வேட்பாளரை அறிவித்தவர்.. முதல்வர் பிரச்சாரத்தின்போது, அவர் ஏன் தேனியில் இருந்தார்? அவர் சம்மதத்துடன் இந் பிரச்சாரம் நடந்ததா? என்பதை கவனிக்க வேண்டி உள்ளது.

அதிருப்தி
மற்றொரு பக்கம், முதல்வர் பிரச்சாரத்தை துவங்கியவுடன், பாஜக இப்படி சொல்வது அதிருப்தியைதான் வெளிப்படுத்துவது போல உள்ளது.. ஒருவேளை முருகன் இப்படி சொன்னால், முதல்வர் தரப்பு அதை எதிர்த்து ஏன் கருத்து சொல்லவில்லை? ஒருபக்கம் தேனியில் ஓபிஎஸ் இருக்கிறார், இன்னொரு பக்கம் பாஜக இப்படி சொல்கிறது என்றால், அவர்களுக்கு பிரச்சனை எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர் என்பதால் இருக்கலாம்.. அதாவது பாஜக தரப்பு எடப்பாடியை ரசிக்கவில்லை என்றே தெரிகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications