வடசென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் கருத்து கேட்பு: அதானி குழுமம் சொல்வது என்ன? எதிர்ப்பு ஏன்?
சென்னை: வடசென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. காட்டுப்பள்ளி துறைமுகத்தை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
காட்டுப்பள்ளி துறைமுகம்: இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள், 217 சிறிய துறைமுகங்கள் உள்ளன. சிறிய துறைமுகங்கள் 217-ல் 68-ல் சரக்குகள் கையாளப்படுகின்றன. திருவள்ளூர் மாவட்டம் காட்டுப் பள்ளியில் கப்பல் கட்டும் தளம் மற்றும் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தம் 15-4-2008 அன்று திமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும் இணைந்து 3,068 கோடி ரூபாய் முதலீட்டில் அந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுவிட்டன. இந்த நிறுவனத்துக்கு நீண்ட்கால குத்தகை அடிப்படையில் 3,000 ஏக்கர் நிலம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம், காட்டுப்பள்ளி துறைமுகத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

அதானி குழுமம்: காட்டுப்பள்ளி துறைமுகமானது சரக்கு பெட்டக முனையம், கப்பல் கட்டும் தளம், கடல்சார் கட்டுருவாக்க வசதி மற்றும் துறைமுக கிடங்குகள் என 4 துணை நிறுவனங்களைக் கொண்டது. இதன்பின்னர் 2018-ல் காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் அதானி துறைமுகம்-சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் கையகப்படுத்தியது.
எதிர்கால திட்டங்கள்: தற்போது தென்னிந்தியாவின் அதிநவீன மிகப் பெரிய துறைமுகமாக, பல கோடி டன் சரக்குகளை கையாளக் கூடிய திறன் பெற்றதாக வடசென்னை காட்டுப்பள்ளி துறைமுகம் உருவெடுத்துள்ளது. காட்டுப்பள்ளி துறைமுகம் மூலம் நேரடியாக, மறைமுகமாக சுமார் 15,000 வேலைவாய்ப்பு பெறுகின்றனர். காட்டுப்பள்ளி துறைமுகமானது மொத்தம் 6,110 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படுகிற போது மிக மிக பெரிய துறைமுகமாக தமிழ்நாட்டின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாக திகழும். இத்துறைமுகத்தில் 34 சூரிய மின்சக்தி திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. 320 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளக் கூடியதாக உருவெடுக்க இருக்கிறது. தமிழ்நாட்டின் இதர துறைமுகங்களை ஒப்பிடும் போது காட்டுப்பள்ளி துறைமுகமானது 4 மடங்கு அதிகமான சரக்குகளை கையாளக் கூடியதாக மாறும். இதில் கணிசமான பகுதி நிலக்கரி கையாளக் கூடியதாக இருக்கும். அப்போது தமிழ்நாட்டில் மின்வெட்டு என்கிற பேச்சுக்கே இடமில்லாத நிலைமை உருவாகும். அத்துடன் அதிவிரைவு எட்டுவழி சாலை, ரயில் பாதை திட்டங்கள் காட்டுப்பள்ளி துறைமுகங்களுடன் இணைகின்றன. இத்தகைய விரிவாக்கத்தினால் ஒட்டுமொத்த வடசென்னையின் முகமே மாறக் கூடிய சாத்தியம் இருக்கிறது என்கின்றனர் துறைமுக தரப்பினர்.
எதிர்ப்பு ஏன்?: காட்டுப்பள்ளி துறைமுக எதிர்ப்பு என்பது ஒரு நிலையானதாக இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளைக் கொண்டதாக இருக்கிறது. சென்னை பெருவெள்ளத்தை சந்திக்கும் வகையில் முகத்துவாரங்கள் அடைபட்டுப் போகும்; மீன்பிடி வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்கிற கருத்துகள் ஒரு பக்கம்; அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடற்படை கப்பல்களை பழுது பார்த்தலுக்கு உதவக் கூடாது என்கிற அரசியல் கோரிக்கைகள் ஒரு பக்கம் முன்வைக்கப்படுகிறது. இதன்பின்னணியில்தான் செப்டம்பர் 5-ந் தேதி காட்டுப்பள்ளி துறைமுகம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துவதை முன்வைத்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.












Click it and Unblock the Notifications