"துணை முதல்வராக உதயநிதி?" வந்து விழுந்த கேள்வி.. டென்ஷனான அமைச்சர் நேரு.. என்ன செஞ்சார் பாருங்க
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக்க மூத்த அமைச்சர்கள் முன்மொழிந்து வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் நேரு டென்ஷனாகிவிட்டார்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலம் முழுக்க அவர் பிரசாரம் செய்தார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு அவருக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
திமுக இளைஞரணி சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட பிறகு அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. 2019 ஜூலை மாதம் அவர் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

உதயநிதி
அதைத் தொடர்ந்து 2021 சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற சமயத்திலேயே உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பார் எனச் சொல்லப்பட்டது. இருந்த போதிலும், அவர் அப்போது அமைச்சராகப் பதவியேற்கவில்லை. இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இருப்பினும், அப்போது எதுவும் நடக்கவில்லை.

அமைச்சர் பதவி
இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றே சில வாரங்கள் தான் ஆகும் நிலையில், அவரை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்த. இந்த கோரிக்கையை முதலில் திமுகவின் கேரளா பிரிவு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.

துணை முதல்வர்
இதற்கிடையே சமீபத்தில் திருச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், சிறப்புத் திட்ட செயலாக்க துறையை நிர்வகிப்பது என்பது கிட்டதட்ட துணை முதலமைச்சர் பொறுப்பைக் கையாள்வதற்குச் சமமானது எனக் கூறியிருந்தார். இதற்கிடையே அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்ட சிலரும் இதேபோன்ற கருத்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பாக மூத்த அமைச்சர் நேருவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் டென்ஷன் ஆகிவிட்டார்.

அமைச்சர் நேரு
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக மாபெரும் வெற்றி பெறும்.. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு அருமையாக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நன்றாகச் செயல்பட்டு வருகிறார்" என்று பாராட்டிப் பேசினார்.

என்ன செய்தார்
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக மூத்த அமைச்சர்கள் முன்மொழிவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குக் கோபமடைந்த அவர் கோபத்தில் சத்தமாக "நகருங்கள்" என்று சொல்லிவிட்டு காரின் கதவை வேகமாகத் திறந்து காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications