ஆதார் எண் வேற- தமிழக அரசின் மக்கள் ஐடி தனித்துவமானது.. மாஸான ப்ளான் எப்போது நடைமுறைக்கு வரும்?
சென்னை: தமிழக அரசின் மக்கள் ஐடி என்கிற திட்டம் தனித்துவமானது; மத்திய அரசு வழங்குகிற ஆதார் எண்ணுக்கும் மக்கள் ஐடி-க்கும் எந்த தொடர்பும் இல்லை; மக்கள் சேவையை ஒழுங்குபடுத்தக் கூடிய ஒரு ரெக்கார்டுக்கான ஐடி அவ்வளவுதான் தமிழக அரசின் மக்கள் ஐடி என்கின்றன அரசு வட்டாரங்கள்.

தமிழகத்தில் ஆதார் எண் போல மக்கள் ஐடி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் ஐடி திட்டம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்ட நிலையில் அதனை ஒழுங்குபடுத்தி சீரமைக்கவே தற்போதைய திமுக அரசு கையில் எடுத்திருக்கிறது. ஆனால் ஆதார் எண், மக்கள் ஐடி இரண்டையும் சில தரப்பு ஒன்றாக எண்ணி குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆதார் எண், ஆதார் அடையாள அட்டை வழங்குதல் என்பது மத்திய அரசின் செயல்பாடு. நாட்டின் குடிமகனின் முகவரி, கருவிழி அடையாளம், கைரேகை ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஆதார் எண் வழங்கப்படுகிறது. ஆதார் எண் ஒரு அட்டையாகவே பொதுமக்களிடம் வழங்கப்படுகிறது. அதனை பல்வேறு இடங்களில் பயன்படுத்த முடியும்.
மேம்போக்காக பார்த்தால் இந்த ஆதார் எண்ணை வைத்தை தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தலாம் என்கிற கருத்து சொல்லப்படுகிறது. உண்மையில் ஆதார் எண் விவரங்களை கையாளக் கூடிய அதிகாரம் மாநில அரசுக்கும் இல்லை- ஆதார் தரவுகளை மாநில அரசுகள் வசம் மத்திய அரசு ஒப்படைப்பதும் இல்லை. ஆதார் எண் என்பது முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழானது. அதனை வைத்து மாநில அரசால் எதுவுமே செய்ய முடியாது. இதற்கான முயற்சிகளை ஏற்கனவே தமிழக அரசு மேற்கொண்டுவிட்டது. திமுக அரசின் புதிய திட்டமும் அல்ல இது.
மக்கள் ஐடி என்பது தனிநபர் மற்றும் குடும்பங்களுக்கான ஒரு அடையாளக் குறியீடு. இது அரசாங்க பதிவுகளில்தான் இருக்கும். ஆதார் அட்டை போல எங்கேயும் எப்போதும் சுமந்து கொண்டிருக்க தேவை இல்லை. ஆதார் அட்டையைப் போல தனியாக ஒரு அட்டையும் வழங்கப்படாது. மாநில அரசின் பதிவேடுகளில் உங்கள் ஐடியை கிளிக் செய்தால் உங்கள் விவரங்கள், உங்கள் குடும்ப விவரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்கும். இதனடிப்படையில் நீங்கள் மாநில அரசின் உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு சரியான நபரா? இல்லையா? என்பது ஒழுங்குபடுத்தப்படும். அதாவது மக்கள் நலத் திட்டங்கள் என்பவை யாருக்காக வகுக்கப்படுகிறதோ அந்த நபர்கள் சரியாக அடையாளம் காணப்பட்டு கொண்டு சேர்க்கப்படும். இதனைத்தான் பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் நீண்டகாலமாக வலியுறுத்துகின்றனர்.
தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டே இத்தகைய நடவடிக்கையை தொடங்கியது. அதாவது தேசிய மக்கள் பதிவு ஆணையம் வழியாக குடிமக்களின் தகவல்கள் பெறப்படும்; தனிநபர்களின் இத்தரவுகளுடன் ஆதார் எண் இணைக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த விவரங்கள் அடிப்படையில் மாநில குடியிருப்போர் அல்லது குடிமக்கள் மையம் உருவாக்கப்படும் என்பதுதான் 2013-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இதற்காக தனி இணையதளம் தொடங்கினார்.
மாநில குடியிருப்போர் அல்லது குடிமக்கள் மையத்தில் உள்ள ஒவ்வொரு நபர் குறித்த விவரங்களுக்கும் ஒரு எண் வழங்கப்பட்டிருக்கும். அந்த எண் தான் மக்கள் ஐடி எனப்படும். தமிழக அரசின் நலத் திட்டங்கள் தொடர்பாக அரசிடம் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பும் போது, மக்கள் ஐடி எண்ணை குறிப்பிட்டாலே போதும்.. ஆதார் எண்ணில் இருந்து அத்தனை விவரங்களும் வந்துவிடும். இதுவரை பெற்று வருகிற நலத் திட்ட உதவி விவரங்களும் அதில் இடம்பெற்று விடும். ஆகையால் ஆதார் எண் வேறு.. தமிழக அரசின் நிர்வாக வசதிக்கான மக்கள் ஐடி என்பது வேறு.. இரண்டையும் குழப்புதல் கூடாது என்கின்றன தமிழக அரசு வட்டாரங்கள். அதேநேரத்தில் ஆதார் எண், மக்கள் ஐடி இரண்டுக்குமான வேறுபாடுகளை பொதுமக்களிடம் மேலதிகமாக விளக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு இருக்கிறது; ஆதார் எண்ணைப் போல பொதுமக்களுக்கும் இந்த எண் வழங்கப்படுமா? அல்லது ஆவணங்களில் மட்டுமே இருக்குமா? என்கிற குழப்பங்களையும் தீர்க்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications