பத்திரப்பதிவுக்கு ரூ.10000 வரை கட்டணம்.. தமிழகத்தில் இனி 25 புதிய மையங்கள்.. தனியாருக்கு என்ன வேலை?
சென்னை: நிலம் அல்லது வீடு வாங்கிய பிறகு அதை நம்முடைய பெயருக்கு மாற்ற பத்திரப்பதிவு செய்வது அவசியம்... இதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்கு இனிமேல் புதிய வசதி வரப்போகிறது. ஆனால் இந்த வசதியைப் பெற ரூ.10,000 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படி என்ன மாற்றத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு?
இப்போது ஒரு சொத்தை பதிவு செய்ய வேண்டுமானால், அந்த சொத்து இருக்கும் பகுதியின் சார் பதிவாளர் அலுவலகத்துக்குத்தான் செல்ல வேண்டும். இதனால் சிலருக்கு தாங்கள் விரும்பும் இடத்தில் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்கள்
இந்த நிலையை மாற்றவே, நம்முடைய தமிழக அரசு புதிய மாதிரி பத்திரப்பதிவு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரே பதிவு மாவட்டத்துக்குள் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான மையத்தை தேர்வு செய்து பத்திரப்பதிவு செய்யலாம்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னை வடக்கு, சென்னை மத்திய, சென்னை தெற்கு, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதற்காக ரூ.7 கோடியே 84 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது... இந்த மையங்களில் சொத்து பத்திரப்பதிவு மட்டுமல்லாமல் திருமண பதிவையும் மேற்கொள்ளலாம்.
ரூ.10000 கட்டணம் ஏன்?
புதிய மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சேவையை தேர்வு செய்துகொள்ளலாம். அதற்கேற்ப 5 வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வழக்கமான சேவைக்கு ரூ.2,000, தட்கல் வழக்கமான சேவைக்கு ரூ.5,000, பிரீமியம் சேவைக்கு ரூ.5,000, தட்கல் பிரீமியம் சேவைக்கு ரூ.10,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த தொகை புதிய மையங்களில் சேவை வழங்குவதற்கான வசதிக் கட்டணம் மட்டுமே. வழக்கமாக செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களையும் தனியாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.10,000 செலுத்தினால் பத்திரப்பதிவு தொடர்பான எல்லா கட்டணங்களும் முடிந்துவிடாது.
தனியார் நிறுவனங்கள் ரோல்
இந்த புதிய மையங்களை அமைப்பது, அங்குள்ள வசதிகளை பராமரிப்பது, தினசரி பணிகளை கவனிப்பது போன்ற பொறுப்புகள் தனியார் நிறுவனங்களிடம் வழங்கப்பட உள்ளன. இதற்காக தேர்வு செய்யப்படும் நிறுவனத்துடன் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்படும்.
ஆனால் பத்திரங்களை சரிபார்த்து பதிவு செய்யும் அதிகாரம் தனியார் நிறுவனங்களுக்கு கிடையாது. அந்தப் பணியை வழக்கம்போல் சார் பதிவாளர்களே மேற்கொள்வார்கள். இதை தமிழக அரசும் தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய மையங்களில் பயோமெட்ரிக் வசதி, சுயசேவை கம்ப்யூட்டர், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
பணத்தை எப்படி பிரிப்பார்கள்?
புதிய மையங்களில் பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் வசதிக் கட்டணம் முழுவதும் அரசுக்கு மட்டுமே கிடைக்காது. அதில் ஒரு பகுதி மையங்களை நடத்தும் தனியார் நிறுவனத்துக்கும் வழங்கப்படும்.
வழக்கமான சேவை மற்றும் தட்கல் வழக்கமான சேவைகளில் வசூலாகும் பணத்தில் 80 சதவீதம் அரசுக்கும், 20 சதவீதம் தனியார் நிறுவனத்துக்கும் கிடைக்கும். பிரீமியம் சேவையில் 2 தரப்புக்கும் தலா 50 சதவீதம் வழங்கப்படும். தட்கல் பிரீமியம் சேவையில் அரசுக்கு 65 சதவீதமும், தனியார் நிறுவனத்துக்கு 35 சதவீதமும் கிடைக்கும்.
இந்த 5 மையங்களும் 180 நாட்களுக்குள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும். அவற்றின் செயல்பாடுகளை பார்த்த பிறகு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மேலும் 20 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தனியார் மயமாகிறதா?
பத்திரப்பதிவுத்துறையில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுவதால், இந்த திட்டம் தனியார்மயமாக்கலுக்கு வழிவகுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்துள்ளன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பத்திரங்களை சரிபார்த்து பதிவு செய்யும் அதிகாரம் அரசிடமே இருக்கும் என்று கூறியுள்ளது. புதிய மையங்களின் கட்டமைப்பு வசதிகள், பராமரிப்பு மற்றும் தினசரி நிர்வாகப் பணிகளை மட்டுமே தனியார் நிறுவனங்கள் கவனிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இப்படியாக புதிய மையங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யும் இடத்தை தேர்வு செய்வதில் பொதுமக்களுக்கு கூடுதல் வசதி கிடைக்க உள்ளது. அதே நேரத்தில் இந்த வசதிக்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், புதிய நடைமுறை பொதுமக்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது..!!


Click it and Unblock the Notifications
