அதானி-செபி கனெக்ஷன்.. ஹிண்டன்பர்க் ரிப்போர்ட்டில் இருப்பது என்ன? ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்!
சென்னை: ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய ரிப்போர்ட்டை தொடர்ந்து பங்குச்சந்தை இன்று காலை சரிவுடனேயே வர்த்தகத்தைத் தொடங்கியது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விளக்கியுள்ளார். இதில் உள்ள குற்றச்சாட்டுகள் என்ன.. இதில் என்ன கூறப்பட்டுள்ளன என்பதை எளிமையாக விளக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த வருடம் அதானி குழுமம் குறித்து சில பகீர் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தது. அது அப்போது மிகப் பெரியளவில் பரபரப்பைக் கிளப்பியது.

புதிய ரிப்போர்ட்: இதற்கிடையே இப்போது ஹிடன்பர்க் நிறுவனம் மீண்டும் ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதில் செபி எனப்படும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவர் மாதபி புச்சுக்கு முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாடுகளில் உள்ள அதானி நிறுவனங்களில் பங்குகள் இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.
இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இன்று பங்குச்சந்தை தொடங்கிய உடனேயே மார்கெட் சரிந்தன. சுமார் 11 மணிக்கு பிறகே பாசிட்டிவானது. நண்பகல் 12 மணியளவில் நிஃப்டி 42 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
ஆனந்த் சீனிவாசன்: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகும் முன்பு சந்தையில் பல வதந்திகள் உலா வந்தன. சிலர் இது முகேஷ் அம்பானி குறித்து இருக்கும் என்றும் சொன்னார்கள். ஆனால், அவை எல்லாம் தவறு. இந்த ரிப்போர்ட்டில் ரிலையன்ஸ் பற்றி எதுவும் இல்லை. இதுவரை ஹிண்டன்பர்க்கிற்கும் ரிலையன்ஸுக்கும் சம்பந்தமே இல்லை. எனவே, அந்த வதந்தியை நம்ப வேண்டாம்.
கடந்த 2015ல் இப்போது செபி தலைவராக உள்ள அந்த மேடமும் அவரது கணவரும் சேர்ந்து ரூ.56 கோடியைச் சிங்கப்பூரில் முதலீடு செய்துள்ளனர். இதில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி முக்கிய பங்கு வகித்துள்ளார். இந்த நிதியை வைத்தே அதானி பங்குகளை வாங்கி விற்றுள்ளனர் என்று அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் சொல்லிய பல விஷயங்கள் குறித்து லண்டனைச் சேர்ந்த பிரபல செய்தி நிறுவனமும் டாக்குமெண்ட்களை வெளியிட்டுள்ளது.
நிலக்கரி, அது சார்ந்த கருவிகள் வாங்கியதில் அதானியை சேர்ந்தவர்கள் விலை அதிகமாகக் காண்பித்து பணத்தை எப்படி வெளிநாடுகளுக்கு அனுப்பினர் என்பதை இந்த ஹிண்டன்பர்க் ரிப்போர்ட் விளக்குகிறது.
டாக்குமெண்ட்கள்: செபி தலைவரும் அவரது கணவரும் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள அந்த நிறுவனத்தில் அவர் இன்னுமே 99% பங்குகளுடன் ஓனராக இருக்கிறார். சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தின் பங்குகளை அவர் செபியில் சேர்வதற்கு முன்பே வேறு ஒருவருக்கு மாற்றிவிட்டார். செபி உள்ளேயே இருக்கும் ஒருவரே இந்த டாக்குமெண்ட்களை கொடுத்ததாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
மேடம் ஓனராக இருக்கும் அந்த இந்திய நிறுவனத்திற்கு 2022- 2023 ஆண்டில் அவரது சம்பளத்தை விட நான்கு மடங்கு அதிக நிதி வந்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்கிறார்கள்.
கேள்விகள்: இவரது கணவர் பிரபல நிறுவனம் ஒன்றில் சப்ளை செயின் பிரிவில் உயர் பதவியில் இருந்தவர். ஆனால், அவருக்குப் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் அனுபவம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், மேடம் செபி தலைவரான பிறகு அவரது கணவர் பிரபல முதலீட்டு நிறுவனத்தின் தலைமை ஆலோசகராகச் சேர்ந்துள்ளார். அவர்கள் இந்தியாவில் ரீட்கள் எனப்படுவதில் முதலீடுகளைச் செய்துள்ளனர்.
இப்போது ஹிண்டபர்க் கேள்வி என்னவென்றால் முதலீட்டு நிறுவனத்தின் ஆலோசகராக இவரது கணவரை எப்படி நியமிக்கலாம்.. 2015இல் திடீரென எப்படி ரூ.56 கோடி வந்தது என்பதே ஹிண்டன்பர்க்கின் சந்தேகங்கள் ஆகும். ஏனென்றால் எனக்குத் தெரிந்து சம்பளம் மட்டுமே வாங்குவோரிடம் ரூ.56 கோடி இருக்க வாய்ப்பு இல்லை. இதுவே சந்தேகங்கள் ஆகும். இது குறித்து விசாரணை நடந்தால் மட்டுமே இது உண்மையா இல்லையா என்பது தெரிய வரும்.
அதேசமயம் பல இடங்களில் மேடம் ரீட்கள் தான் எதிர்காலம்.. ரீட்கள் சூப்பர் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.. எனது கணவர் இந்தியாவில் ரீட்களில் முதலீடு செய்யும் நிறுவனத்தில் ஆலோசகராக இருக்கிறார் எனச் சொல்லி, அவர் ரீட்கள் குறித்துச் சொல்லி இருக்க வேண்டும். அந்த வெளிப்படைத்தன்மை தேவை.
விசாரணை தேவை: செபி என்பது இவருக்கு முன்பும் இருந்தது.. இவருக்கு பிறகும் இருக்கும். 1993 வரை இருக்கும் அமைப்பு. எனவே, இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால் பங்குச்சந்தை சரியவும் வாய்ப்பு இருக்கு.. ஆனால், எவ்வளவு சரிந்தாலும் இவை சில காலத்தில் சரியாகிவிடும். கடந்த காலங்களிலும் ஹர்ஷத் மேத்தா, 2008 சரிவு, கொரோனா போதும் இதே தான் நடந்தது. சிஸ்டம் கிளீன் பண்ண டைம் ஆகுமே தவிர, இது சிஸ்டத்தை பாதிக்காது. எனவே, பங்குச்சந்தை சரிந்தாலும் அச்சம் வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications