அதிமுக முன்னாள் எம்எல்ஏ திநகர் சத்யா வழக்கில் ஹைகோர்ட் என்ன சொன்னது? திடீர் ரெய்டு ஏன்?
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான புகாரில் 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த ஜூலை 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தான் ரெய்டு நடந்து வருகிறது.
சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தக்க்ஷன் என்பவர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா , தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் என்ற திநகர் சத்யா, சென்னை தி.நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியிருந்தார்.
சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்துக்கணக்கை மறைத்து மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கிய சொத்துக்களை மறைத்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டோம். ஆனால் அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியிருக்கிறார்.
எனவே தனது சொத்து மதிப்பை மறைத்து சத்யா தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில் திநகர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் பத்திரிகையாளர் அரவிந்தக்க்ஷன் கூறியிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது தீர்ப்பில், புகார் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலேயே அதிமுக முன்னாள் எம்எல்ஏ திநகர் சத்யாவிற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை முழு விவரங்களை வெளியிடும் என்பதால், இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அப்போதுதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications