ஜோதிமணி போராட்டத்தின் நோக்கம் என்ன?- அரசுக்கு எதிராக எம்.பி போராட்டம்: சங்கடத்தில் காங்கிரசார்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்கான முகாம்களை நடத்தாமல் தடுப்பதா? என ஆட்சியருக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. அரசுக்கு எதிராக செயல்படும் கூட்டணிக்கட்சி எம்பியின் நோக்கம் என்ன எனக் கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைமை மவுனமாக இருக்கும் காரணம் என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுகவுடன் சேர்ந்து கோட்டையைக் கைப்பற்றிய ஜோதிமணி
கரூர் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்த நிலையில் காங்கிரஸில் திடீரென சமூக வலைதளங்கள் மூலம் அப்பகுதியில் பிரபலமானவர் ஜோதிமணி. மக்கள் போராட்டங்களில் நேரடியாக ஈடுபடுவதன் மூலம் நேரடியாக அரசின் கவனத்தையும், சமூக ஊடகங்களின் கவனத்தையும் கவர்ந்தவர் ஜோதிமணி. 2019 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் தேறாது என ஒதுக்கப்பட்டு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி கரூர்.

அதிமுகவின் கோட்டை வீழ்ந்தபோது வென்ற ஜோதிமணி
ஆனாலும் இத்தொகுதியில் செல்வாக்குமிக்க தம்பிதுரையை எதிர்த்து இளம் தலைவரான ஜோதிமணியை நிற்க வைக்க நேரடியாக ஆர்டர் போட்டார் ராகுல். உடன் செந்தில்பாலாஜியின் பிரச்சார உதவியும் சேர தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக அடித்த பெரிய அலையில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் வென்றது. மிகப்பெரிய வேட்பாளரான தம்பிதுரையை வீழ்த்தி வெற்றிப்பெற்ற ஜோதிமணி ஊடகவெளிச்சத்தில் பிரபலமானார்.

கரூர் ஆட்சியருக்கு எதிராக செந்தில்பாலாஜியுடன் இணைந்து போராட்டம்
கடந்த அதிமுக ஆட்சியில் இதேபோல் கரூர் ஆட்சியர் அன்பழகனுக்கு எதிராக ஜோதிமணியும், செந்தில் பாலாஜியும் இணைந்து போராட்டம் நடத்தினர். ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் என்பதால் திமுக, காங்கிரஸ் இணைந்து போராட்டம் நடத்தினர்.

தற்போதும் ஆட்சியரை எதிர்த்து போராட்டம்
கரூர் மக்களவைத் தொகுதியில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. அந்த இடங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் தெரிவித்து, முகாம்கள் நடத்தப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களுக்கு பயன் கிடைத்துள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தன்னை அலட்சியம் செய்கிறார் மத்திய அரசின் உதவியை மக்களுக்குச் செல்லவிடாமல் தடுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார் ஜோதிமணி.
Recommended Video

காங்கிரஸ் என்றாலே இப்படித்தானா?
2021 தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்தாலும் திமுகவின் நம்பகம் மிக்க தோழமைக்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. மத்திய அரசை எதிர்க்கும் திமுகவுக்கு பக்க பலமாக காங்கிரஸ் உள்ளது. இதுவரை திமுக அரசை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் விமர்சிக்கவில்லை. ப.சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்கள் ஒருபடி மேலேச்சென்று பாராட்டுவதைக்காண முடிகிறது.
ஆனால் திடீரென ஜோதிமணியின் போராட்டம் திமுக தரப்பில் எரிச்சலையும், காங்கிரஸ் தரப்பில் சங்கடத்தையும் உருவாக்கி உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். கூட்டணிக்கட்சியின் எம்.பி என்றாலும் அரசோடு நல்ல நட்புறவுடன் இருக்கும்போது எதிர்க்கட்சிகளின் வாய்க்கு தீனி போடுவதுபோல் அரசை எதிர்த்து கூட்டணிக்கட்சி எம்.பியே போராட்டத்தில் ஈடுபடுவது காங்கிரஸில் மட்டுமே நடக்கும், இதற்கு தலைமையின் அனுமதி உள்ளதா? அனுமதியை ஜோதிமணி பெற்றாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் திமுக தரப்பில்.

காங்கிரஸ் தலைவர்களின் மவுனம் சங்கடத்தாலா? சம்மதத்தாலா?
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக நிர்வாகிகள் சிலர் ஜோதிமணி ஏதோ மிகப்பெரிய தவறு நடந்துவிட்டதுபோல் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதும், அதை ட்விட்டரில் எடுத்து போடுவதும், ஆட்சியரை லஞ்சப்பேர்வழி போல் சித்தரிப்பதும் ஆட்சியருக்கு எதிரான போராட்டமா? அரசுக்கு எதிரான போராட்டமா? தமிழக காங்கிரஸ் தலைமை 2 ஆம் நாளாக மவுனமாக இருப்பது சம்மதத்தாலா? சங்கடத்தாலா? எனக்கேள்வி எழுப்புகின்றனர்.

திமுகவுக்கு சவாலாக உள்ள கொங்கு மண்டலத்தில் இந்த மோதல் என்ன பலன் தரும்
ஜோதிமணியின் போராட்டத்தில் உள்ள நோக்கம் என்ன? ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி என்கிற முறையில் இதை சம்பந்தப்பட்ட அமைச்சர், தலைமைச் செயலர் ஏன் முதல்வர் கவனத்திற்கும் கொண்டுச் சென்று அனுமதி வாங்க வழி இருக்கும்போது எதிர்க்கட்சி போல் போராட்டத்தில் ஈடுபடுவது திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள உறவை பாதிக்கும். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக உள்ள இடத்தில் கூட்டணிக்கட்சி எம்பி ஆளும் அரசின் ஆட்சியரை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அது செல்வாக்கை பாதிக்காதா? இதுபோன்ற போராட்டத்தை நடத்த தலைமையின் அனுமதியை பெற்றுள்ளாரா? அல்லது வழக்கமான காங்கிரஸ் பாணியா? என்கிற கேள்வி அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications