திருச்சிக்கு நோ..விக்கிரவாண்டி ஓகே! விஜயின் எம்ஜிஆர் சென்டிமென்ட்! குட்டையை குழப்பிவிட்ட தவெக டீம்
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்துகிறார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து விக்கிரவாண்டிக்கு விஜய் மாநாட்டை மாற்ற வேண்டிய காரணம் என்ன என்பது குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்களின் முன்னணியில் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு தற்போது அரசியல் பயணத்தை தொடர இருக்கிறார். செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி அவர் நடித்துள்ள தி கோட் படம் வெளியாக இருக்கிறது.

அதற்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் இயக்கம் படத்தை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார் விஜய். தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும் போது விஜய் அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்த வைத்தது.
இது ஒருபுறம் இருக்க சொன்னது போலவே கட்சியை ஆரம்பித்து அதன் பெயர், கொடி உள்ளிட்டவற்றை வெளியிட்டு இருக்கிறார். விஜய் செப்டம்பர் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. அங்கு கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவரங்களை விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து மாநாட்டுக்கு தேவையான ஏற்பாடுகளை அவரது கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி வி-சாலை பகுதியில் இந்த மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அதற்காக காவல் துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு நிலையில் இறுதியாக விக்கிரவாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இடையே சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் மாநாட்டுக்கு இடம் பார்த்து நிலையில், இறுதியாக திருச்சியில் மாநாடு நடத்த விஜய் மிக ஆர்வமாக இருந்தார்.
குறிப்பாக எம்ஜிஆர் பாணி அரசியலை கையில் எடுக்க விரும்பிய விஜய், திருச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருந்தார். எம்ஜிஆரின் அரசியல் வரலாற்றில் பல நிகழ்ச்சிகள் திருச்சியில் தான் நடந்திருக்கிறது. குறிப்பாக அதிமுக முதல் மாநாடு, திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு நிதி திரட்டிய மாநாடு, சத்துணவு திட்டத்தை தொடங்கி வைத்தது என எம்ஜிஆரின் அரசியல் வாழ்வில் பல சம்பவங்கள் திருச்சியில் அரங்கேறி இருக்கிறது,
இதன் காரணமாகவே திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த விஜய் ஆர்வமுடன் இருந்தார். மேலும் தமிழகத்தின் மையப் பகுதியில் இருப்பதால் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும் என்பதே விஜயின் திட்டமாக இருந்தது. இதற்காக அனுமதி கேட்டு மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால் இடையில் ஒரு சில நிர்வாகிகள் திருச்சி ராசியில்லை பல அரசியல் கட்சிகள் அங்கு மாநாடு நடத்தி காணாமல் போயிருக்கின்றன என்று கிளப்பி விட விஜய் சற்றே யோசித்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் மிகப்பெரிய இடம் தேவைப்பட்ட நிலையில் முதலில் ஒப்புக்கொண்ட நிலத்தின் உரிமையாளர் அதுக்குப் பிறகு சற்றே யோகித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் பிரபல அரசியல் கட்சி ஒன்றும் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இப்படியாக தொட்டதெல்லாம் சிக்கலாக திருச்சி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் விஜய். தற்போது விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கும் காவல்துறை அனுமதி வழங்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இப்போது வரை விஜய் தரப்பில் இருந்து மாநாடு குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். தற்போது மாநாட்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வரை வருவார்கள் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என காவல்துறை அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனுமதி அளித்தால்தான் விஜயின் மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
குறிப்பாக மாநாடு நடைபெறும் இடம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருப்பதால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறையினர் யோசித்து வருகின்றனர். இப்படியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் விஜய்க்கு மாநாடு நடத்த விஜய் தேர்வு செய்தால் அதனை குழப்பி விடுவதற்கு ஒரு டீம் தனியாக இருக்கிறது என்று கூறுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.












Click it and Unblock the Notifications