அடுத்து இந்த மாவட்டங்கள்தான்.. "ரேடாரில்" தெரிந்தது என்ன? தமிழ்நாடு வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை!
சென்னை: தமிழ்நாடு வானிலை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மழை
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கரையை கடந்தது. மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்து வலிமை இழந்தது. அதி தீவிர புயலாக இருந்த இந்த மாண்டஸ் புயலாக வலிமை குறைந்தது. கரையை கடந்த பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவி வந்தது. இதன் பின் மேலும் நகர்ந்த புயல் தற்போது அரபிக்கடலை நோக்கி சென்றுள்ளது. இதனால் இன்னும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு வானிலை
இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், மாண்டஸ் புயல் அரேபியன் கடலுக்கு சென்றபின்பும் கூட தமிழ்நாட்டை நோக்கி மேகங்களை இழுத்துக்கொண்டு இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து உள்ளது. அணைகள் எல்லாம் முழு கொள்ளளவை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.

இழுக்கப்பட்ட மேகங்கள்
இன்றும் கூட பெரிய அளவில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மேகங்களை காண முடியும். திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மேகங்களை காண முடியும். இவை எல்லாம் மாண்டஸ் புயல் காரணமாக இழுக்கப்பட்ட மேகங்கள் காரணமாக இந்த மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்திற்கு மற்றொரு பரவலான நாளாக இருக்கும்.

உள் தமிழ்நாடு
பின்னர் தெற்கு உள் தமிழ்நாடு, டெல்டா மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களும் இந்த லிஸ்டில் சேர போகிறது. தென்கிழக்கிலிருந்து மேகங்கள் நகர்வதைக் காட்டும் ரேடார் படம் இங்கே உள்ளது, என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த அவர், வலிமை குறைந்த மாண்டஸ் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. தமிழ்நாட்டில் மேலும் இரண்டு நாட்களுக்கு இது மழை கொடுக்க போகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் நல்ல மழை பெய்ய போகிறது. மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட காற்று இழுவை மூலம் இந்த மழை பெய்ய போகிறது.

எங்கே?
கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கிழக்கு காற்று மூலம் கனமழை பெய்ய போகிறது. முக்கியமாக கேரளாவில் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கனமழை பெய்ய போகிறது. நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் அருகிலுள்ள வடக்கு உள்மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை நல்ல மழை பெய்யும்.
மேற்குக் காற்று இருப்பதால் தூத்துக்குடியில் வறண்ட வானிலையே காணப்படும்.












Click it and Unblock the Notifications