பெரிய பொறுப்பாச்சே! இந்த துறைதானா? அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு வழங்கப்படும் இலாக்கா என்ன தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட உள்ள நிலையில் அமைச்சரவையில் சேர்க்கப்படும் டிஆர்பி ராஜாவிற்கு என்ன துறை கொடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக கோட்டை வட்டாரங்கள் முக்கியமான சில தகவல்களை தெரிவித்து உள்ளன.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் யாரும் பொதுவெளியில் தவறாக பேச கூடாது. பொது இடங்களில் பேசும் போது கவனமாக பேச வேண்டும், என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வலம் வர தொடங்கி உள்ளன.

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் மீண்டும் அமைச்சரவை மாற்றம் விரைவில் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாற்றம்: அந்த வகையில் முதல் மாற்றமாக நேற்று அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டார். ஆவடி நாசர் மீது பல்வேறு புகார்கள் சர்ச்சைகள் இருந்தன.
ஆனால் அவரை நீக்குவதற்கு இந்த புகார்கள், சர்ச்சைகளை தாண்டி அவரின் செயல்பாடுகள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆம்.. அவர் பால்வளத்துறையை மிக மோசமாக நடத்தியது. பால் தட்டுப்பாட்டை தவிர்க்க தவறியது, பால் உற்பத்தியில் நவீனங்களை புகுத்த தவறியது என்று மேற்கொண்ட சில செயல்பாடுகள்தான் இதற்கெல்லாம் காரணம்.
இந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டு உள்ளார். அவருக்கு புதிய அமைச்சரவையில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படாது.
இன்னொரு பக்கம் அமைச்சர் பதவியில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் கடந்த 2 வருடமாகவே அமைச்சராக வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போதே இவருக்கு அமைச்சரவை கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அப்போது இவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இவர் அமைச்சராகிறார். நாசர் பதவி நீக்கத்தால் இவருக்கு பால் வளத்துறை கொடுக்கப்படும் என்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் இவருக்கு பால்வளத்துறை கொடுக்கப்பட வாய்ப்புகள் இல்லை. மாறாக டி ஆர் பி ராஜாவிற்கு தொழில்துறை கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அடுத்தவருடம் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலீடுகளை ஈர்க்கவும், இங்கே நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார். மு.க.ஸ்டாலின் மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம் மேற்கொள்கிறார்.
அங்கிருந்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வர முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு ஜன. 10 மற்றும் 11ம் தேதிகளில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பான பணிகளை மேற்கொள்ளவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் டி ஆர் பி ராஜாவிற்கு தொழில்துறை கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அடுத்தவருடம் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு கனிமவளத்துறை அமைச்சர் அல்லது நிதித்துறை அமைச்சராக மாற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சர் ஆனால், ஐடி துறை அமைச்சர் பிடிஆருக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications