ஒடிசா ரயில் விபத்துக்கு இதுவே காரணமாக இருக்கும்.. தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் பகீர் தகவல்
சென்னை: ஒடிசா ரயில் விபத்துக்கு என்ன காரணம் என்று தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் பிரபல தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். தண்டவாள பராமரிப்பு சரியாக நடக்காமல் இருந்தது இந்த விபத்து நடந்திருப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்றார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் பிரபல தமிழ் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம்.
காயமின்றி தப்பியவர்களை சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். பயணிகளின் முன்பதிவு விவரங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே துறை விரிவான விசாரணை நடத்தும். ரயில் தடம்புரண்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.

தண்டவாளம் பராமரிப்பு பணியில் கவனம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டிலும் காலியிடங்கள் அதிக அளவில் இருப்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
அதேபோல் தான் இந்த டிராக் பராமரிப்பு விஷயத்திலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கணிப்பாக இருக்கிறது. ஏனெனில் மெக்கானிக்கல் ரீதியாக தவறுகள் இல்லை. அப்படி இருந்திருந்தால் ரயிலை உடனே நிறுத்திவிடுவார்கள். சிக்னல் பிரச்சனையும் கிடையாது அல்லது நாசவேலையும் கிடையாது.
அப்படி இருக்கும் போது இதை தவிர ( தண்டவாள பராமரிப்பு ) வேறு வாய்ப்பு இருக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.இதனை நாங்கள் யூகத்தில் தான் சொல்கிறோம். முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்பு தான் என்ன காரணம் என்பது முறைப்படி அறிவிக்கப்படும். ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் வாரியாக விசாரணை நடக்கும்.
டிராபிக் தொடங்கி, மெக்கானிக்கல், சிக்னல், தண்டவாள பராமரிப்பு வரை எல்லா துறையிலும் விசாரணை நடக்கும். இதில் தண்டவாளம் தான் மிக முக்கியமான விஷயம். ஏதேனும் ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் ரயில் தடம் புரள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே எல்லாவிதமான விசாரணைக்கும் உட்படுத்துவார்கள். அப்போது நிச்சயமாக விபத்திற்கான உண்மையான காரணம் தெரிந்துவிடும்.
தண்டவாள பராமரிப்பு பணி என்பது தொடர்ச்சியாக டிராக்கில் உள்ள ஜல்லிகளை முறையாக பராமரிக்க வேண்டும். அதேபோல் தண்டவாளத்தில் ஏதேனும் விரிசல் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். கோடைக்காலத்தில் மிக கடுமையான வெப்பத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதை பார்த்துவிட்டு தண்டவாளத்தை உடனடியாக மாற்றுவார்கள் அல்லது அதனை சரிசெய்வார்கள். இரண்டு தண்டாவளத்தை இணைக்கக்கூடிய பகுதியில் டிஸ்பிளேட் உடைந்திருந்தால் உடனடியாக அதனை சரி செய்வார்கள். இதெல்லாம் சரி செய்யாமல் இருந்திருந்தால் தடம் புரள வாய்ப்பு இருக்கிறது" இவ்வாறு தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications