அகிலேஷ் யாதவை வழியனுப்பிய கட்சியினர்.. ஏர்போர்ட்டில் மோதல்.. தமிழக அரசின் முத்திரை வாகனம் பறிமுதல்!
அகிலேஷ் யாதவை வழியனுப்ப சென்றபோது கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை வந்த அகிலேஷ் யாதவை, மீண்டும் வழியனுப்ப சென்றபோது கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, தமிழ்நாடு அரசின் முத்திரை பதித்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னையில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இந்தப் பொதுக்கூட்டம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்தது.

அகிலேஷ் யாதவ் பேச்சு
இந்த பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் ஒரு நாத்திகவாதி. ஆனால் அவர் எந்த மதத்திற்கும் எதிரானவர் இல்லை. முதலமைச்சராக பதவியேற்ற ஒரு ஆண்டிலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார்.

புத்தகம் பரிசு
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் மு.க.ஸ்டாலின் என்று பேசி இருந்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்களை தமிழிலேயே பேசியது திமுக தொண்டர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் சென்னை வந்த அகிலேஷ் யாதவிற்கு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய புத்தகத்தை மு.க.ஸ்டாலின் பரிசளித்தார்.

கட்சியிடையே மோதல்
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பின் அகிலேஷ் யாதவ், மீண்டும் சொந்த மாநிலம் புறப்பட சென்னை விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது தமிழ்நாடு அரசின் முத்திரையிட்ட வாகனத்தில் சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருடன் திமுகவினர் சிலரும் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அகிலேஷ் யாதவை வழியனுப்ப வந்த கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் முத்திரை வாகனம் பறிமுதல்
இதனிடையே சம்பவ இடம் வந்த விமான நிலைய காவல்துறையினர், தமிழ்நாடு அரசின் முத்திரை இட்ட வாகனம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள அகிலேஷ் யாதவுடன், தமிழ்நாடு அரசின் முத்திரை பதித்த காரில் வந்தவர்கள் யார் என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications