Good Time: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நேரத்தை பார்த்தீர்களா? இனி எல்லாமே சக்சஸ்தான்
சென்னை: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தின் எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன் எந்த நேரத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு அரசியல் கட்சியில் இணைவதால்தான் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்கிறார்கள்.
செங்கோட்டையன் மிகவும் மூத்த அரசியல்வாதி. எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏ, அனைத்திந்திய என்ற பெயர் அதிமுகவுக்கு வந்த போது அக்கட்சியின் பொருளாளராக இருந்தவர். பின்னர் 1988 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய அட்டவணையை வகுத்து கொடுத்தவர். அவருக்கு 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் இருக்கிறது.

கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் மோதல் போக்கை கொண்டிருந்தார். அவர் பிரச்சாரத்திற்கு கொங்கு மண்டலத்திற்கு சென்றாலும் அங்கு செங்கோட்டையன் செல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுக ஒன்றிணைய வேண்டும், அதற்காக பிரிந்தவர்களை கட்சியில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து அன்று மாலையே அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது.
இதையடுத்து சில காலம் அமைதியாக இருந்த நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்றிருந்த போது அவருடன் செல்லாத செங்கோட்டையன், தனியே சென்றார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், சசிகலா, ஓபிஎஸ்ஸுடன் செங்கோட்டையன் பேசினார். இது கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிரான என கூறி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்தே நீக்கிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், தன்னை நீக்கியது கட்சி விதிகளுக்கு முரணானது என கூறியிருந்த நிலையில் அவர் தவெகவில் இணைகிறார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன.
இதுகுறித்து செங்கோட்டையனிடமே கேட்ட போது கூட அவர், அதை மறுக்கவும் இல்லை, அது திட்டமிட்டு தன் பரப்பப்படும் அவதூறு என்றும் கூறவில்லை. இந்த நிலையில் இன்று காலை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய சென்றார்.
ஆனால் என்ன நினைத்தாரோ புறப்பட்ட அரை மணி நேரத்தில் வீடு திரும்பினார். இதையடுத்து 11.30 மணிக்கு மேல் மீண்டும் புறப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதாவது இன்று புதன்கிழமை 12 மணி முதல் ஒன்றரை மணி வரை ராகு காலம் என்பதால் செங்கோட்டையன் சரியாக 11.45 மணிக்கெல்லாம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இன்று நல்ல முகூர்த்த நாள், அது போல்,சஷ்டி திதியாக இருக்கிறது. சஷ்டியில் எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் செங்கோட்டையன் நல்ல நேரத்தில் நல்ல நாளில்தான் ராஜினாமா செய்துள்ளார் என்கிறார்கள்.
அது போல் நாளை அவர் தவெகவில் இணையவுள்ளார் என்கிறார்கள். நாளை முகூர்த்த நாள்தான், ஆனால் அஷ்டமி திதி வருகிறது. எனினும் இன்றே தனது அரசியல் நடவடிக்கையை செங்கோட்டையன் தொடங்கிவிட்டார்.












Click it and Unblock the Notifications