"106".. எடப்பாடி வீட்டுக்கே போயிட்டாங்க.. இதான் மேட்டர்.. மிஸ் பண்ணின பன்னீர்.. கலையுது "கலர்கனவுகள்"
ஓ பன்னீர்செல்வம் மீது அதிருப்தி கொண்ட நிர்வாகிகள் எடப்பாடியிடம் சென்று ஐக்கியமாகி உள்ளனர்
சென்னை: கூடாரம் மெல்ல மெல்ல காலியாகி கொண்டிருக்கும்நிலையில், அடுத்து என்ன செய்வதென்ற ஆலோசனையில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறாராம்.. அத்துடன், ஓபிஎஸ் மீதான அதிருப்திகளுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த முறை இடைத்தேர்தலில் தமிழக பாஜக போட்டியிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், போட்டியிடாமல் ஒதுங்கிவிட்டது.. ஆனால், பாஜக நினைத்திருந்தால் நிச்சயம் களமிறங்கியிருக்க முடியும் என்கிறார்கள்.
டிடிவி தினகரன் + ஓபிஎஸ் + வாசன் + பாரிவேந்தர் + கிருஷ்ணசாமி + ஏசி சண்முகம், + ஜான்பாண்டியன், பூவைமூர்த்தி, சசிகலா இப்படி பலரையும் இணைத்து என்றோ இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்..

பவர் டெல்லி
இத்தனை பேர் தங்களுக்கு ஆதரவாக இருந்தும்கூட, போட்டியிடாமல் ஒதுங்க காரணம், எடப்பாடி பழனிசாமி மீது, மாநில தலைமைக்கு இருக்கும் பாசம்தான் என்றும், அதற்காகவே, "இடைக்கால பொதுச்செயலாளர்" என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாகவும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறுமையிழந்த நிலையில்தான், மாநில தலைமை மீதான புகாரை, ஓபிஎஸ்ஸே டெல்லிக்கு கொண்டு சென்றாராம்.. அப்படி இருந்தும், நினைத்து எதுவுமே கடைசிவரை நடக்காமல் போய்விட்ட வருத்தத்திலும், அதிர்ச்சியிலும் ஓபிஎஸ் டீம் ஆழ்ந்துவிட்டதாக தெரிகிறது..

ராதாகிருஷ்ணன்
இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜக தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து வருகிறதாம்.. இந்த இடைத்தேர்தல் விவகாரத்தில், தமிழக பாஜக தங்களை நடத்திய விதம் சரியில்லை என்பதை குறிப்பிட்டு, அண்ணாமலைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்ற துணிந்தது ஓபிஎஸ் டீம்... கடந்த வாரம், ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சிபி ராதாகிருஷ்ணனுக்கு கமலாலயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது..

பூவை மூர்த்தி
இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிலையில், ஓபிஎஸ்ஸை அழைக்கவில்லை என்றார்கள்... இத்தனைக்கும் கூட்டணியில் இருக்கும் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு மட்டும் எந்த அழைப்பும் போகவில்லையாம்... டெல்லி பாஜக நம்மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கும்போது, மாநில தலைமை நம்மை இப்படி உதாசீனப்படுத்துகிறதே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொரும தொடங்கியதுடன், ஓபிஎஸ்ஸை நம்பி இனி எதுவுமே செய்ய முடியாது என்று அவர் தரப்பு நிர்வாகிகள் சிலருக்கு அவநம்பிக்கை தென்பட்டுள்ளதாம்..

செங்குந்தர் முதலியார்
அதனால்தான், ஓபிஎஸ் தரப்பில் சில புள்ளிகள், அங்கிருந்து விலக போவதாகவும், எடப்பாடி தரப்பில் இணையபோவதாகவும் கடந்த வாரமே செய்திகள் பரபரத்தன.. அதிலும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள்தான் ஓபிஎஸ் மீது கடும் கொந்தளிப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.. இதற்கு காரணம், வேட்பாளர் திடீர் வாபஸ் பெறப்பட்டதால் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லையாம்.. ஓபிஎஸின் இந்த திடீர் முடிவால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் குழப்பத்திலும், அப்செட்டிலும் இருப்பதாக சொல்லப்பட்டது.

வாய்ஸ் மெசேஜ்
வேண்டுமானால், வாட்ஸ்அப்களில் "குரல்பதிவு" மூலம் வாக்குசேகரிக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.. அதனால்தான், எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் பிரசாரத்திற்கோ அல்லது வாக்கு சேகரிப்புக்கோ யாரும் செல்லக்கூடாது என்று நிர்வாகிகளுக்குள் முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. சின்னம் கிடைக்காமல், ஒருவேளை 2 அணிகளும் சுயேட்சையாக களத்தில் நின்றிருந்தால், அது எடப்பாடிக்கு ஒருவகையில் பின்னடைவாக இருந்திருக்குமாம்.. மேலும், தற்போது எடப்பாடி நிறுத்தியுள்ள வேட்பாளர் தென்னரசு கொங்கு சமூகத்தை சேர்ந்தவர்..

முதலியார் வாக்கு
ஆனால், இந்த தொகுதியில் செங்குந்த முதலியார் சமூகத்தினரின் வாக்கு வங்கி பிரதானமாக உள்ளது.. இதை கணக்கு செய்துதான், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த செந்தில் முருகனை வேட்பாளராக நிறுத்தியிருந்தார் ஓபிஎஸ்.. அந்த முதலியார் வாக்குகளை, நிச்சயம் ஓபிஎஸ்ஸால் கணிசமாக பெற்றிருக்க முடியும், அதையும் ஓபிஎஸ் தவறவிட்டுவிட்டாரே என்று நொந்து கொண்டார்களாம். இந்நிலையில்தான், ஈரோடு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் 106 பேர் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.. அத்துடன் தங்களது கடிதத்தை ஓபிஎஸ்ஸுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்..

கையை பிசையும் டீம்
இன்றைய தினம் சேலத்தில் எடப்பாடியை சந்தித்து அவரது அணியிலும் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சிக்கு தொடர்பில்லாத நபரை வேட்பாளராக அறிவித்தும், அறிவித்த வேட்பாளரையும் திரும்ப பெற்றதால் அதிருப்தி என்பதாலேயே இவர்கள் விலகியதாக கூறப்படுகிறது.. மேலும், செலவிட்ட தொகையை தர மறுப்பதாகவும் இன்னொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது... முருகானந்தம் தவிர, மேலும் சிலர், அதாவது இன்னும் 106 பேர் ஓபிஎஸ் டீமில் இருந்து விரைவில் விலகக்கூடும் என்றும் முருகானந்தம் உறுதிபட தெரிவித்துள்ளார்.. இப்படியான அடுத்தடுத்த விலகல்கள், கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும்நிலையில், அடுத்து என்ன செய்வது என கையை பிசைந்து நிற்கிறதாம் ஓபிஎஸ் டீம்..!!

சரியும் கூடாரம்
இதையடுத்து, எடப்பாடி தரப்புக்கு பலம் கூடி வரும்நிலையில் ஏகத்துக்கும் குஷியாக இருக்கிறதாம்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெறும் வாக்குகளை மிகவும் முக்கியமானதாக எடப்பாடி கருதுகிறார்... இதை வைத்து அடுத்தடுத்த அரசியல் ரீதியாக காய்களை நகர்த்த திட்டமிட்டு வருகிறார்.. இந்த இடைத்தேர்தலில் தமாகாவுக்கு ஒதுக்காமல், தானே நேரடியாக இறங்கி களமிறங்கியதற்கு 2 காரணங்கள் சொல்லப்பட்டன. ஒன்று இந்த தேர்தலின் வெற்றி எம்பி தேர்தலின்போது, கைகொடுக்கும் என்று நம்புகிறாராம். மற்றொன்று, ஓபிஎஸ்ஸின் குடைச்சலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தாராம். அந்தவகையில், ஓபிஎஸ்ஸின் கூடாரம் சரிந்து வருவதுடன், எடப்பாடியின் பலமும் கூடிவருவதாக அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications