மதுரையே குலுங்குது.. சட்டென கிளம்பிய தகவல்..அதிமுகவில் "அவர்" சேரப்போறாரா? உச்சக்கட்ட டென்ஷனில் களம்
சென்னை: மதுரை அதிமுக மாநாட்டின் உச்சக்கட்ட பரபரப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஒரு முக்கிய தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. இது அதிமுக கூடாரத்தை இன்னமும் பரபரப்பாக்கி உள்ளது.
சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறாரே தவிர இதுவரை அப்படி ஒரு சந்திப்பை நடத்தவில்லை.. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை..

ஆனால், சசிகலா தரப்பில்தான், இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஓபிஎஸ் மீதான நம்பிக்கையும், ஆதரவும் சசிகலா தரப்புக்கு நிறையவே இருக்கிறது என்பதால், எப்போது வேண்டுமானாலும், அவர் தங்கள்பக்கம் வந்துவிடக்கூடியவர் என்பதிலும் உறுதியாகவே இருப்பதாக தெரிகிறது. ஆனாலும், சசிகலாதான், ஓபிஎஸ்ஸை சந்திப்பதை தவிர்த்து வருகிறார். இதற்கு என்ன காரணம்?
சாதி முத்திரை: அதிமுக என்ற கட்சி தன்கையில் வந்து ஒருநாள் கண்டிப்பாக சேரும் என்ற நம்பிக்கை சசிகலாவுக்கு இப்போதுவரை இருக்கிறது.. எந்த ஒரு கட்சிக்கும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், தங்கள் மீதான "சாதி முத்திரை" படியாமல், அனைவருக்கும் பொதுவான தலைவராக விளங்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.. அதனால்தான், ஓபிஸ்ஸை சந்திப்பதிலும் தயக்கம் காட்டி வருகிறாராம் சசிகலா..
அதனால்தான், ஓபிஎஸ் நடத்திய திருச்சி மாநாட்டில்கூட அழைப்பு விடுத்தும் பங்கேற்கவில்லையாம். மூத்த தலைவர் வைத்திலிங்கம் வீட்டு விஷேசத்திலும் பங்கேற்கவில்லையாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணக்கம் காட்டாமல் இருப்பதற்கும் இதே காரணம்தான் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இதற்கெல்லாம் பின்னணியில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் பங்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி: அதாவது, எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமான போக்கை திவாகரன் கொண்டிருப்பதாலும், ஓபிஎஸ் + தினகரன் விவகாரத்தில் சசிகலா பச்சைக்கொடி காட்டாமலேயே இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதற்கேற்றவாறு, பேட்டிகளை தந்தாலும்சரி, அல்லது அறிக்கைகளை வெளியிட்டாலும்சரி, ஓபிஎஸ், தினகரன், எடப்பாடி என யார் பெயரையும் குறிப்பிட்டும், சாடியும்கூட சசிகலா பேசுவதே கிடையாது. மாறாக, மொத்த டார்கெட்டையும் திமுக மீதே செலுத்தி வருகிறார்.
சசிகலா பிறந்தநாள்: இந்த நேரத்தில் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அமமுகவின் பொதுச்செயலாளராக தினகரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சசிகலா வாழ்த்து அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.. அதேபோல, நேற்றைய தினம் அதாவது ஆகஸ்ட் 18ம் தேதி, சசிகலாவின் பிறந்தநாளுக்கு, தினகரனும் வாழ்த்து சொல்லவில்லை என தெரிகிறது.
இதை பற்றி செய்தியாளர்களே தினகரனிடம் கேட்டிருக்கிறார்கள்.. "சித்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையே, ஏதாவது கருத்து வேறுபாடா? என்று கேட்டனர். அதற்கு தினகரன், "சித்திக்கு மட்டுமல்ல, என்னுடைய அப்பாவுக்கும் இன்றுதான் பிறந்தநாள். இந்த கூட்டத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறாததற்கும் முடிச்சு போட வேண்டாம்" என்று பதிலளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: ஆனால், இவ்வளவு விஷயத்தையும், எடப்பாடி பழனிசாமியும் கவனிக்காமல் இல்லை.. ஓபிஎஸ்ஸை சசிகலா இதுவரை சந்திக்காமல் இருப்பதையும், தினகரனுக்கு ஆதரவு தராமல் இருப்பதையும் உற்றுகவனித்து வருகிறார்.
எடப்பாடியை பொறுத்தவரை, தனக்கு பெரும் தலைவலியாக நினைப்பது, ஓபிஎஸ் மற்றும் தினகரனைதானே தவிர, சசிகலா மீது எந்த அதிருப்தியும் கிடையாது. சசிகலாவை வைத்து தினகரன் அதிமுகவுக்குள் வந்துவிடக்கூடும், ஓபிஎஸ்ஸை வைத்து, பாஜக "அதிகாரத்தை" செலுத்திவிடக்கூடும் என்பதே, மிகப்பெரிய கலக்கமாக எடப்பாடிக்கு இருந்து வருவதாக தெரிகிறது.
யோசனை: விரைவில் எம்பி தேர்தல் வரும்நிலையில், முக்குலத்தோர் வாக்குகளையும் எடப்பாடி பழனிசாமி பெற்றாக வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது..
மற்றொருபுறம், பாஜகவின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.. எந்த காரணம் கொண்டும், ஓபிஎஸ் + தினகரனை சேர்த்து கொள்ளக்கூடாது என்பதில் தொடர்ந்து உறுதியுடன் எடப்பாடி இருந்து வரும்நிலையில், சசிகலாவை மட்டும் அதிமுகவில் இணைத்து கொள்ளலாமா? என்ற யோசனைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
முக்குலத்தோர்: இதனால், முக்குலத்தோர் வாக்குகளை பெறுவதுடன், பாஜகவின் நெருக்கடியில் இருந்தும் தப்பிக்கலாம் என ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க திட்டமிடுவதாக சொல்கிறார்கள். ஆனால், இதற்கு சசிகலா முடிவு என்ன? பாஜக என்ன நினைக்கிறது? ஓபிஎஸ் + தினகரன் இல்லாத கூட்டணி உருவாகுமா? என்றெல்லாம் தெரியவில்லை.. மதுரை மாநாட்டுக்கு பிறகே இதெல்லாம் தெரியவரும் என்கிறார்கள்.
ஒருவேளை, எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் இணைக்க நேர்ந்தால், இத்தனை காலமும் சசிகலாவின் அமைதி நடவடிக்கைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே அது கருதப்படும்.. அத்துடன், அவரது பொறுமைக்கும் ஒரு அர்த்தமும் கிடைத்தது போலாகிவிடும்.. என்னதான் நடக்க போகிறது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications