Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்ற காவித் துறவிகள்! - ஒரு ரீவைண்ட் ஸ்டோரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தி எதிர்ப்புக்கு தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே முன்னோடி. பெரியார் காலம் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலம் வரையில் இந்தி எதிர்ப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல் போராட்டம் தொடர்கிறது. கடந்த காலங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் காவித் துறவிகளும் பங்கேற்றதுதான் ஹைலைட்.

மதராஸ் ராஜதானியின் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரியார், 1938 ஆம் ஆண்டில் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கினார். இதனால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியது.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பைக் கண்டு கொதித்த ராஜாஜி, 'யார் இந்த நாட்டை ஆள்வது.. நானா.. இல்லை ராமசாமி நாயக்கரா? பார்த்துவிடுகிறேன்' என்றார். 'இந்தியை ஆதரிப்பதன் மூலமே தேசிய உணர்வை வெளிப்படுத்த முடியும்' என அன்றைய தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள் நம்பினர்.

 ராஜாஜி முதல் காமராஜர் வரை

ராஜாஜி முதல் காமராஜர் வரை

ராஜாஜிக்கு பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல் காமராஜர் வரை இதற்கு யாருமே விதிவிலக்குகள் இல்லை. வடமாநில மொழியான இந்திக்கு இவர்கள் அளித்த முக்கியத்துவத்தைத் தாய்மொழியான தமிழுக்கு அளிக்கவில்லை. அங்குதான், தமிழ்நாட்டுக்கு ஒரு தேசியக் கட்சியின் தேவை மறைந்து மாநிலக் கட்சியின் தேவை உருவானது. 'வேறு எந்த மொழிக்கும் சளைத்தது அல்ல தமிழ்' என்பதே திமுகவின் கொள்கையாக இருந்தது. அண்ணா முதலமைச்சராகும் வரையில், 'தமிழ் வாழ்க' என்ற முழக்கம் தமிழக சட்டமன்றத்தில் ஒலித்ததே இல்லை. 'வாழிய செந்தமிழ் நாடு' என்ற பாரதியின் பாடலுக்கு உயிர்கொடுத்த முதல் முதலமைச்சர் அண்ணாதுரைதான். 1968 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்து முதலமைச்சர் அண்ணாதுரை ஆற்றிய உரை வரலாற்றில் அழிக்க முடியாத ஆவணமாக இன்றும் விளங்குகிறது. அந்த உரையில் அண்ணா மிகத் தெளிவாக தன் பார்வையை முன்வைத்தார்.

 அண்ணா பேசியது என்ன?

அண்ணா பேசியது என்ன?

'நான் இந்த மாமன்றத்தைக் கூட்டி, 'இன்று முதல் தமிழகம் தனிநாடாக ஆகிறது; தமிழ் வாழ்க' என்று சொல்லிவிட்டு வெளியேறலாம் (பலத்த கைதட்டல்). அதிலிருந்து நான் அரசியல் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம். பொது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்படலாம். ஆனால், சரித்திரத்தில் என் பெயர் இடம்பெற்றுவிடும். ஆனால், அப்படிப்பட்ட கட்டத்தில் நாம் இல்லை. நாம் என்கிறபோது என்னையும் இணைத்துக் கொண்டுதான் இதைச் சொல்கிறேன். ஆகவே, இது பிரிவினைக்காகப் பேசப்படுகிறது என்று குற்றம்சாட்டத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என விளக்கம் அளித்தார். 'திராவிட நாடு' பிரிவினையை அண்ணா கைவிட்டபிறகுதான் 'இந்தி திணிப்பை' பேசினார். அது மாநில மொழிக்கு உரிய அதிகாரம் கேட்டு நடத்தப்பட்ட உரிமைப் போர். ஆனால் அதைக் காங்கிரஸ்காரர்கள் 'பிரிவினைப் பேச்சு' என்ற அளவில் சுருக்க முயன்றனர். இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள், இரண்டு மொழிகளை மட்டுமே அறிந்து கொண்டு அரசுப் பணிகளைப் பெறும்போது, இந்தி பேசாத மாநிலங்களில் உள்ளவர்கள் மூன்று மொழிகளைக் கற்று அரசுப் பணிக்கு வரவேண்டும் என்ற பாகுபாடு ஏற்படுத்தப்படுவதாக அண்ணா வாதம் செய்தார். ஆகவே, 'இந்தி திணிப்பு ஏற்கத்தக்கதல்ல' என்றார். அதையெல்லாம் மறைக்கும் முயற்சியில் இன்றைக்கு சிலர் இறங்கியுள்ளனர். இந்தி திணிப்பை எதிர்த்து திமுக போராட்டம் அறிவித்தால், அதற்குப் போட்டியாக திமுகவை எதிர்த்து போராட்டம் செய்ய பாஜக திட்டம் தீட்டுகிறது. ''கடந்தகாலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் என்ன பரிசை கொடுத்தார்களோ அதையே இந்த மதவாத அமைப்புகளுக்கும் தமிழக மக்கள் தரப் போகிறார்கள் என்பது உறுதி'' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்..

இந்தி எதிர்ப்பில் காவிகளின் பங்கு

இந்தி எதிர்ப்பில் காவிகளின் பங்கு

இன்றைக்குக் காவி அரசியலை முன்வைக்கும் பாஜக ஒருவிஷயத்தை மறைக்க நினைக்கிறது. 1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக மட்டும் நடத்தவில்லை. அன்றைக்கு நடந்த மொழிப் போராட்டக் களத்தில் காவித் துறவிகளும் கலந்து கொண்டனர். அதற்குச் சரியான சான்று, அருணகிரி அடிகளார். 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முப்பெரும் துறவிகளில் ஒருவரான அருணகிரி அடிகளார் பங்கேற்றார். இவர் தலைமையில் 1957 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு, 'இந்தி எதிர்ப்பு மாநாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது. அதில் அண்ணா கலந்து கொண்டு பேசினார். அந்தப் பேச்சு இன்றைய காவி அரசியல் சூழலுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியது. மாநாட்டில் இவ்வாறு அண்ணா பேசினார், 'காவிகள் கறைபட்ட காலத்திலே, காவி உடையிலேயும் நல்ல உள்ளத்துடன் நடமாட முடியும் என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டியவர், மறத் தமிழ்க்குடியிலே பிறந்தவர், மறந்தும் தமிழுக்கு இழுக்குத் தேடுபவர்களை எந்தத் திக்கில் இருந்தாலும் அவர்களைச் சாடத்தக்க வகையிலே மனவலிமை படைத்தவர் அருணகிரி அடிகளார். 1937 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் என்னைப் போன்றவர்கள் ஈடுபட்டிருந்தனர். திமுக தொடங்கப்பட்ட காலத்திலேயே இந்தி எதிர்ப்பை திறம்பட நடத்துவதற்கு மூன்று துறவிகள் பக்கத்திலே நின்றார்கள். அவர்களில் தலைசிறந்தவராக நம்முடைய நண்பர் அருணகிரி அடிகள் அந்தநேரத்திலே நின்றார். அவருடைய வெண்கலக்குரல், முதுமையின் காரணமாக இன்றைய தினம் கொஞ்சம் தட்டுப்பட்டிருக்கின்றது. ஆனால், அவருடைய வீர உணர்ச்சி குறைந்துவிடவில்லை. 'என்ன மடமை, இந்த ராசகோபாலாச்சாரிக்கு' என்ற இவர் பாடலை இந்த தெருக்கோடியிலே கிளப்பினால் மறு தெருக்கோடியிலே உள்ளவர்கள் கேட்டு வருவார்கள். அப்போது எல்லாம் ஒலிபெருக்கிகள் இல்லாத காலம்" என்றார். இந்தப் பேச்சு முன்வைக்கும் உண்மை என்ன தெரியுமா? காவிகளையும் உள்ளடக்கி நடைபெற்றதுதான் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது. அதில் 1968 ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய தமிழ்நாடு 70 உயிர்களை இழந்தது.

 காங்கிரஸ் கற்றுக் கொண்ட பாடம்

காங்கிரஸ் கற்றுக் கொண்ட பாடம்

காங்கிரஸ், 'தமிழ் உணர்வை வெறும் உணர்ச்சி நிலை' என்ற மனோநிலையில் அணுகியது. அது உணர்ச்சி சம்பந்தமானது அல்ல; உரிமை சம்பந்தமானது என்பதை அடுத்து வந்த தேர்தல் முடிவுகள், காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தியது. ஆம்! ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போனது காங்கிரஸ். அன்றைக்கு விழுந்த அந்தக் கட்சி இன்றுவரை தமிழ்நாட்டில் தலைதூக்க முடியாமல் போராடி வருகிறது. தொடக்ககாலங்களில் இருந்தே இந்தி மொழியை திமுக எதிர்க்கவில்லை. அதன் திணிப்பையே எதிர்த்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'இந்தியைத் திணிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து இந்தக் கடிதத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ளார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்தியுள்ளது. 'இது நமது அரசியலமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானவை என்றும் நமது தேசத்தின் பன்மொழிக் கட்டமைப்புக்குத் தீங்கு விளைவிப்பதாக அமைந்திடும். இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கையைவிட இந்தி அல்லாத மொழிகளைப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம்' என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதன்மூலம் இந்தி மொழி தொடர்பான விவாதம் தமிழ்நாட்டில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ''திமுகவின் மொழி உரிமை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?'' என்று எழுத்தாளர் 'ஆழி' செந்தில்நாதனிடம் பேசினோம்.

 இந்தி நுழைக்கப்படுவது ஏன்?

இந்தி நுழைக்கப்படுவது ஏன்?

"இந்தி எதிர்ப்பில் திமுக தொடர்ந்து சரியாகவே செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஒரு விஷயத்தை நான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். நாம் இன்னும் மொழி பிரச்சினையைப் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பான பிரச்னையாக மட்டுமே சுருக்கி பார்க்கிறோம். ஒரு மொழியைப் படிப்பதா? வேண்டாமா? என்ற வாதத்துடன் மட்டுமே இதை முடிச்சுப் போட்டுப் பார்க்கிறோம். இதனால், திராவிட இயக்கங்கள் முன்வைத்த முக்கியமான காரணிகள் குறிப்பாக 90 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் குறைந்துவிட்டது. ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளலாமா.. வேண்டாமா? என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால், திராவிட இயக்கம் மொழி உரிமை சார்ந்த பிரச்னையாகவே இந்தி எதிர்ப்பை முன்வைத்து. ஒரு மொழியை கற்றுக் கொள்வதற்கு இடையூறாக திமுக என்றும் செயல்பட்டதே இல்லை. 1920 ஆம் ஆண்டுகளில் இருந்து இரண்டு இயக்கங்கள் தமிழ்நாட்டில் இணையாக உருவானது. ஒன்று திராவிட இயக்கம். இரண்டாவது, தனித்தமிழ் இயக்கம். இந்த இரு இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் வட இந்தியர்களின் ஆதிக்க எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு, சம்ஸ்கிருத ஆதிக்கம் ஆகியவற்றை வலிமையாக எதிர்த்தே வந்துள்ளனர். இதன் மொத்த வடிவமாக இந்தி நுழைக்கப்படுகிறது. இந்தப் போராட்டங்களின் தடுப்பு அரணாக 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா கொண்டு வந்த இருமொழி சட்டம் இருந்தது. இதுதான் தமிழ்நாட்டுக்கு தமிழும் ஆங்கிலமும் என்பதை உறுதிப்படுத்தியது.

வலுப்பெறும் மொழிப் பிரச்னை

வலுப்பெறும் மொழிப் பிரச்னை

1963 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சி மொழிகள் சட்டம் வந்தது. அப்போது நடந்த விவாதத்தில், 'ஆங்கிலத்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்' என முடிவு செய்கிறார்கள். இதன்பின்னால் 1976 ஆம் ஆண்டில் இந்திராகாந்தி அரசு, 'அலுவல் மொழி விதிகள்' என்ற ஒன்றை உருவாக்கியது. அந்த விதிகளை உருவாக்கியபோது, This applies whole of india except state of tamilnadu எனக் குறிப்பிட்டனர். அதாவது, அலுவல் விதிகள் சட்டத்தின் முதல் பத்தியிலேயே, 'இந்த விதிகள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும், ஆனால் தமிழ்நாடு நீங்கலாக' எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. 1963 ஆம் ஆண்டில் மொழிச்சட்டம் வந்தது. 1976 ஆம் ஆண்டில் அலுவல் மொழி விதிகள் சட்டம் வந்தது. இது அண்ணாவின் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றிதான். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த காலம் முதலே மிகத் தெளிவாக இந்தியை முன்வைத்துச் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை வரையில் அது தெளிவாக வெளிப்பட்டு வருகிறது. ஆனால், பேசும்போது, 'நாங்கள் அனைத்து மொழிக்கும் சமஅளவில் இடம் கொடுக்கிறோம்' என்பார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. தமிழ்நாட்டில் இரண்டாவது எழுந்த மொழிப்போராட்டத்தின் 50ஆவது ஆண்டு 2015 ஆம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் இருந்து மோடி இந்தியை மிகத் தீவிரமாகத் திணிக்க ஆரம்பித்தார். அதையொட்டி இந்தி பேசாத மற்ற மாநிலங்களிலும் போராட்டக் குரல் வலுப்பெற்றது. இதனால் மொழி பிரச்னை மீண்டும் வலிமை பெற்றுள்ளது. இப்போது இந்திமொழி திணிப்பை மிகத் தீவிரமாக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார். இது ஆரோக்கியமான போக்கு" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

மு.க.ஸ்டாலினும் இந்தி எதிர்ப்பும்

மு.க.ஸ்டாலினும் இந்தி எதிர்ப்பும்

திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, "1937 ஆம் ஆண்டுகளில் மெட்ராஸ் பிரசிடென்சி எனச் சொல்லப்பட்ட காலத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது மிகத் தீவிரமாக நடைபெற்றது. அப்போது திமுக உருவாகவே இல்லை. ஆனால் அதன் வேராக திராவிட இயக்கம் இருந்தது. மாணவராக இருந்த அண்ணா, அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். அதன்பின் ஆட்சியில் அமர்ந்த திமுக 1967 ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்பில் தீவிரமாகப் போராடியது. அன்றைக்கு திமுகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இருந்தனர். ஒருவர், திருவண்ணாமலையில் இருந்த தேர்வான தர்மலிங்கம், மற்றொருவர் சென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர். நாடாளுமன்றத்தில் இந்தியை எதிர்த்து சம்பத் பேசினார். பிறகு சம்பத்தை, தனது தீன்மூர்த்தி வீட்டுக்கு நேரு அழைத்தார். 'இந்தியைத் திணிக்கமாட்டோம் என எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்தால் உங்களைச் சந்திப்பேன். இதனை எங்கள் தலைவர் அண்ணா சொல்லிவிட்டார்' என சந்திக்க மறுத்தார் சம்பத். ஆனால், நேருவுடன் சம்பத்தைச் சந்திக்க வைக்கப் பிரதமரின் செயலாளரே அவரது டெல்லி வீட்டுக்கு வந்தார். ஆனால், 'வீட்டில் சம்பத் இல்லை' என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். பின்னர், சம்பத்துக்கு நேரு ஒரு கடிதமே கொடுத்து அனுப்பினார். அதனை ஏற்றுக் கொண்டு அண்ணாவின் சார்பில் நேருவுக்கு சம்பத் நன்றி கூறினார். இதன்பிறகு தமிழகம் திரும்பிய சம்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பை அண்ணா அளித்தார். அதன்பின் நேரு மறைந்துவிட்டார். பிறகு லால்பகதூர் சாஸ்திரி ஆட்சிக்கு வந்தார். இந்த விவகாரத்தில் சாஸ்திரி எந்தப் பதிலையும் கூறாமல் அமைதி காத்தார். அப்போது தமிழ்நாட்டில் பெரிய போராட்டம் வெடித்தது. கலைஞர் மு.கருணாநிதியைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதுவே கடந்தகால வரலாறு. அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி.. திமுக ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது. இந்தியை யாரும் படிக்கலாம். தடை இல்லை. சென்னையில் 1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தி பிரசார சபா இயங்கி வருகிறது. அதற்கு யாரும் தடை போடவில்லை. ஆனால், ஒரு மொழியை வைத்து மற்றொரு மொழியை ஆதிக்கம் செய்யக் கூடாது. அதைத்தான் இப்போது அமித் ஷாவும் மோடியும் செய்கின்றனர். 'இந்தி படித்தால் மட்டுமே வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்தி தெரிந்தால் மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்படும்' என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை மிகக் கடுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கிறார். இந்தி ஆதிக்கத்தை முன்னின்று தடுப்பார். அதில் எந்த சமரசமும் இல்லை" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+