"ஒரு வாரத்தில் ரூ.6000 நிவாரண தொகை.." உறுதியளித்த அமைச்சர் உதயநிதி.. டோக்கன் எப்போது வழங்கப்படும்?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது எப்போது முதல் வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் உதயநிதி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சென்னை உட்பட அண்டை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே வந்த போது ஞாயிறு இரவு ஆரம்பித்த மழை செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை கொட்டியது.

இதனால் சென்னையில் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியது. மழை நின்ற பிறகு நிவாரண பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது. முக்கிய சாலைகளில் நீர் வடிந்துவிட்ட போதிலும், இன்னும் சில உட்புற சாலைகளில் நீர் இருக்கவே செய்கிறது.
மிக்ஜாம் புயல்: இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும், சென்னை இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதற்கிடையே மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த தொகை ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த புயல் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் எப்போது இந்த தொகை வழங்கப்படும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
உதயநிதி: இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி இன்னும் ஒரே வாரத்தில் நிவாரண தொகை வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் குறைகளைச் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அதைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் புயல் வெள்ள நிவாரண பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்
ஒரு வாரத்தில் நிவாரண தொகையைக் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம். முதல் வாரத்தில் டோக்கன் வழங்குவோம். அடுத்து நிவாரண தொகையை வழங்க ஆரம்பித்துவிடுவோம். சில இடங்களில் ரேஷன் கடைகளிலேயே தண்ணீர் தேங்கி இருக்கிறது. அதேபோல சில பொருட்களும் சேதமடைந்துள்ளது. அந்த நீரை அகற்றிவிட்டு, சேதங்களைச் சரி செய்துவிட்டு நிவாரண தொகை வழங்குவோம்.
எப்போது வழங்கப்படும்: முதலில் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பிறகு ஒரு வாரத்தில் நிவாரண தொகை வழங்குவோம். இவ்வளவு மழை பெய்த பிறகும் 3 நாட்களில் மின்சாரம் வழங்க முடிந்துள்ளது... பல இடங்களில் நீர் வடிந்துள்ளது என்றால் அதற்குக் காரணமே நாங்கள் மேற்கொண்டு மழை நீர் வடிகால் பணிகள் தான். இல்லையென்றால் நிலைமை மோசமாக இருக்கிறது.
ஏற்கனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னைக்கு வந்து நிலைமை பார்வையிட்டார். புயலால் ஏற்பட்ட தேசத்தை முதல்வரே நேரடியாக மத்திய அமைச்சரிடம் விளக்கினார். அவர்கள் முதற்கட்டமாக ஒரு தொகையை வழங்கியுள்ளனர். விரைவில் அடுத்தகட்ட நிதியைக் கொடுப்பார் என நம்புகிறோம்.
களத்தில் உள்ளனர்: அனைத்து இடங்களில் அமைச்சர்கள், கவுன்சிலர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டே வருகிறார்கள். அதேநேரம் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பெருமழை பெய்துள்ளது. இதனால் மக்களிடையே ஒரு சிறு அதிருப்தி இருக்கத்தான் செய்யும். நாங்கள் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம். முதல்வர், மேயர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என அனைவருமே களத்தில் இறங்கி வேலை செய்துள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications