அடிமடியிலேயே "கை".. பறந்து வந்த "டெல்லி" போன்.. தலைவருக்கு செம டோஸாமே.. அப்ப அவர்தான் அடுத்த தலைவரா?
தமாகா தலைவர் வாசனுக்கு அழகிரி அழைப்பு விடுத்ததால், காங்கிரஸ் மேலிடம் கோபமாக இருக்கிறதாம்
சென்னை: தமாகா தலைவர் வாசனுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, அழைப்பு விடுத்துள்ளார்.. இந்த விஷயம் டெல்லி வரை சென்றுள்ளதுடன், அதுகுறித்த தகவல்கள்தான் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளன. என்ன நடக்கிறது காங்கிரஸ் கூடாரத்தில்?
அந்தந்த மாநில தலைவர் பதவிகளை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரே தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை மாற்றப்பட உள்ளதாக செய்திகள் அடிக்கடி வெளியாகி கொண்டே வருகிறது. ஒருமுறை இதுகுறித்து செய்தியாளர்கள் கேஎஸ் அழகிரியிடமே கேட்டனர்..

அத்தைக்கு மீசை
அதற்கு அவர், "அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த பேச்சு மீண்டும் சத்தமாக ஒலிக்க துவங்கி உள்ளது.. அழகிரியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியும் கதர்களை சுற்றி கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில்தான் அழகிரி மீதான அதிருப்திகள் சத்தியமூர்த்தி பவனில் வெடித்து கிளம்பின.. அழகிரிக்கு எதிராக பலர் ஓரணியில் திரண்டனர். அதனை வெளிப்படுத்தும் வகையில், அழகிரி தலைமையில் நடந்த நிகழ்ச்சிகளை புறக்கணிக்கவும் செய்தனர்.. பிறகு, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனகார்கேவை சந்தித்து புகார்களை தந்தனர்..

கனல் கங்குகள்
அழகிரி பதவியேற்றது முதல், கட்சியில் என்னென்ன ஊழல்கள் நடந்துள்ளது என்பதையும் ரிப்போர்ட்டாக தந்தனர்... இந்த ரிப்போர்ட்களின் அடிப்படையில் 2 மாதங்களுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம், கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார்.. அப்போது அடுத்த தலைமை பதவி குறித்த பேச்சும் எழுந்துள்ளதாக தெரிகிறது.. இதற்கு நடுவில், மாநிலங்களில் நடந்த தேர்தல்கள் காரணமாக, தமிழக தலைவர் பதவி குறித்த விஷயம் தள்ளிப்போடப்பட்டது. இப்போது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது.. இதற்கு காரணம் சாட்சாத் கேஎஸ் அழகிரியேதான்..

வாசன் வலை
சமீபத்தில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அழகிரி, "ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்ப வேண்டும். அவரது தலைமையின் கீழ் பணியாற்ற தயாராக இருக்கிறோம்" என்று பேசியிருக்கிறார்.. இந்த விஷயத்தை அப்படியே மொழிப்பெயர்த்து மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளது ப.சிதம்பரம் கோஷ்டி. இதைக் கேள்விப்பட்டு அழகிரியை தொடர்புகொண்டு கார்கே கடுமையாக கடிந்து கொண்டாராம்.. இதுகுறித்து ப.சிதம்பரம் ஆதரவாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள் நம்மிடம் சொன்ன கருத்துக்கள் இவைகள்தான்:

ப சி மகன்
"தமிழக தலைவரான அழகிரியை மாற்றிட வேண்டும் என்ற முடிவை எப்போதே ராகுல் எடுத்துவிட்டார். ஆனா, புதிய தலைவருக்கு பொருத்தமான ஆளை தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தபடியே இருந்ததால் அழகிரியின் பதவி தப்பித்துக் கொண்டே இருக்கிறது. முக்கியமான பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு முடிவு எடுக்காமலே இருக்கிறார்கள்... தலைவர் பதவி குறித்து விவாதம் நடந்தபோது, புதிய தலைவராக கார்த்தி (ப.சி.யின் மகன்) அல்லது விஷ்ணுபிரச்சாத்தை நியமியுங்கள். பின்னால் இருந்து நான் உதவுகிறேன் என்று சொல்லியுள்ளார்.

விஷ்ணு பிரசாத்
கடந்த காலங்களில் இதுவரை, தனது மகனை தலைவராக்குங்கள் என ப.சிதம்பரம் சிபாரிசு செய்ததே இல்லை. முதல்முறையாக சிபாரிசு செய்துள்ளார். ஆனால், இது குறித்து இன்னும் சோனியாவும் ராகுலும் முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில்தான், ப.சி.யின் சிபாரிசை அறிந்த கே.எஸ். அழகிரி, கார்த்தி அல்லது விஷ்ணு பிரசாத் தலைவராக வந்தால் நமக்கான அரசியல் சுத்தமாக இருக்காது. காங்கிரசிலிருந்து தூக்கி எறியப்படுவோம் என யோசித்த அழகிரி, மேலிடத்தை குழப்புவதற்காகவே, வாசன் மீண்டும் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் என்று பேசி வருகிறாராம்.

வேண்டாம் வாசன்
இதனை மேலிடத்துக்கு கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் அனுப்பி வைக்க, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சில உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.. அதனையடுத்து, அழகிரியை தொடர்புகொண்ட அவர், காங்கிரசிலிருந்து பிரிந்து சென்றவர்களில் வாசனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் காங்கிரசுக்கு மீண்டும் வரலாம். வாசன் கூடாது என்பதுதான் ராகுலின் முடிவு. இது உங்களுக்குத் தெரிந்தும் அவரை அழைப்பது ஏன்? என்று கோபம் காட்டியுள்ளார் கார்கே. இதற்கு அழகிரி பல விளக்கமளித்தாலும் அதனை கார்கே ஏற்கவில்லை என்கிறார்கள் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்.

அடிமடியிலேயே
இந்த இடத்தில் ஒரு நிகழ்வை நாம் குறிப்பிட்டு காட்ட வேண்டி உள்ளது.. கடந்த நவம்பர் 16ம் தேதி, கார்த்தி சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கதர்களின் அடிவயிற்றை கலங்கடித்துவிட்டது. "தம்பி வா தலைமையேற்க வா" என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. "தலைமையேற்க வா" என்றால், எந்த பதவிக்கு இவரை அவரது ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள்? என்ற சந்தேகம் கிளம்பியது.

தம்பி வா
போதாக்குறைக்கு, அந்த போஸ்டரில் ப.சிதம்பரம் போட்டோ இடம்பெற்றதுடன், "தமிழகத்தின் எழுச்சி நாள்" என்று கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருந்ததால், தங்களின் அடிமடியிலேயே வாரிசு "கை" வைத்து விடுமோ? என்ற கலக்கம் சீனியர்களை அப்போது சூழ்ந்திருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமல்ல, 2 நாட்களுக்கு முன்புகூட, செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், மாநில தலைமை பதவியை தந்தால், அதை ஏற்க தயார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.. ஆக, விரைவில் தமிழக தலைமை மாற போகிறது போலும்..!!!












Click it and Unblock the Notifications