மிஸ்சான ஜனவரி.. பிப்ரவரியில் கன்ஃபார்ம்! துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: உதயநிதி துணை முதல்வர் ஆகிறார் என்பதுதான் தமிழ்நாட்டின் இப்போதைக்கு ஹாட் நியூஸாக இருக்கிறது.
கடந்த ஒருவருடமாகவே இந்தச் செய்தி அடிப்பட்டுக் கொண்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்னதாக உதயநிதியிடம் இதை நேரடியாகக் கேட்டபோது அவர், 'அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன்' என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.

உண்மையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்னால் அந்தத் தகவல் உதயநிதிக்கே நகைச்சுவையாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், இப்போது அது சீரியசான செய்தியாக மாறி இருக்கிறது.
ஆங்கில ஊடகம் ஒன்று வரும் பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின், வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதற்கு முன்னதாக உதயநிதி துணை முதல்வர் பொறுப்பில் அமர்த்தப்படுவார் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே ஆளுநருக்கும் திமுகவுக்கும் ஒரு மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில் துணை முதல்வர் பதவியை அவர் ஏற்பாரா? எனச் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அமைச்சரை மாற்றத்தான் ஆளுநர் அனுமதி தேவை. துணை முதல்வராக உதயநிதியை அமர்த்த முதல்வர் அதிகாரமே போதும். ஒரே ஒரு அரசாணை வெளியிட்டுவிட்டால், All problems will be solved. அப்படித்தான் சட்டம் சொல்கிறது.
ஏற்கெனவே மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது ஆளுநர் அனுமதி கேட்கவில்லை. அரசாணை மூலமே அதைச் செய்து முடித்தார்கள்.
ஆக, வழி மிகத் தெளிவாக உள்ளது. எந்தச் சட்டச் சிக்கலும் இல்லாமல் துணை முதல்வராக உதயநிதியால் அமர முடியும்.

இந்த விவகாரத்தில் திமுகவினர் ஒரு கதையை முணுமுணுக்கிறார்கள். மு.கருணாநிதி தனது மகன் ஸ்டாலினுக்கு எந்தப் பதவியையும் எளிதாக வழங்கிவிடவில்லை. காலந்தாழ்த்தித்தான் தந்தார். அதைப்போல் என் மகனுக்கு நடக்கக் கூடாது என்பது தளபதி உறுதியாக இருக்கிறார். எனவே இந்த ஆட்சியில் உதயநிதி துணை முதல்வராவது உறுதி என்கிறார்கள்.
இதற்குள் இன்னொரு கதையும் சேர்ந்தே ஓடுகிறது. ஸ்டாலின் சிகிச்சை எடுப்பதற்காகத்தான் வெளிநாடு செல்கிறார். அதற்காகத்தான் இந்த அவசரம் என்றும் சொல்கிறார்கள்.
நேற்று அயலகத் தமிழர் தினம் 2024 விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எனக்கு உடல்நலம் சரியாக இல்லை. உற்சாகமாக நான் இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் செய்தி பார்த்தேன்.
அதைப் படித்தபோது எனக்குச் சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை? தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்?" என்று பதிலளிக்கும் விதமாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

உதயநிதி துணை முதல்வராக பதவி ஏற்கப்போகிறார் என்பது ஒரு வருடமாக அடிப்படும் செய்தி. ஆனால், இப்போது முன்பைப்போல் இல்லாமல் அதில் ஒரு பரபரப்பை உணர முடிகிறது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பே இந்தத் தகவல் தவறானது என்று உதயநிதி மறுத்திருந்தார். 'அந்தத் தகவலே தப்பு. அந்த மாதிரியான தகவல் எங்கிருந்து வந்தது என்பது எனக்குத் தெரியாது" என்று கூறியிருந்தார்.
உதயநிதி பிறந்தநாள் விழாவை ஒட்டி அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று அறிவாலயம் வாசலில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அது குறித்து அவரிடமே செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, 'எங்கே போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். நான் பார்க்கவே இல்லையே?' என்று வலையில் சிக்காத மீனாக நழுவினார் உதயநிதி.
இதே பிறந்தநாள் விழாவை ஒட்டி அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்த நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதியிடம் ''அடுத்த பிறந்தநாளின் போது நீங்கள் துணை முதல்வராகப் பொறுப்பேற்று விடுவீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'அது முதலமைச்சரின் முடிவு. அதை நான் எப்படிச் சொல்ல முடியும்?' என்று புன்னகையோடு அக்கேள்வியைக் கடந்தார்.
ஒருநாள் முன்னதாக இதே கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்த உதயநிதி, 'ஆமாம் ஆமாம். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்குத் துணையாக இருக்கப் போகிறோம்' என்று பஞ்ச டயலாக் பேசிவிட்டு நகர்ந்தார்.
இந்த ஒட்டுமொத்த பரபரப்பு குறித்து திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

"துணை முதல்வர் வந்தால் நல்லதுதான். இன்னும் அரசு சார்ந்த பணிகளை வேகப்படுத்தலாம். ஆனால், உதயநிதி ஸ்டாலினே அந்தக் கருத்தை மறுத்துள்ளார்.
ஆகவே அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைக்கு உதயநிதியின் கையில் மூன்று துறைகள் உள்ளன. இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, திட்ட அமலாக்கத்துறை ஆகிய மூன்றையும் அவர் சிறப்பாகச் செயல்பட வைத்துள்ளார்.
அப்படிப் பார்த்தால் உதயநிதியின் உழைப்பு என்பது முன்பு இருந்ததைவிட 300% அதிகரித்துள்ளது. நானே அதைக் கண்கூடாக அருகிலிருந்து கவனித்து வருகிறேன். ஆக, அவரது வேகத்திற்கு இணையாகக் கூடுதல் பொறுப்புகள் தருவது தவறாக இருக்காது என்றே நான் கருதுகிறேன்.
துணை முதல்வர் என்பது ஒரு லேபிள்தான். அது ஒன்று முக்கியமானதல்ல. அமைச்சர் உதயநிதி கையில் திட்ட அமலாக்கத்துறை உள்ளது. அதுவே மிகப் பெரிய பொறுப்புதான்.
அந்தத் துறை அனைத்து துறையில் செய்யப்படும் செயல்திட்டங்களையும் ஆய்வு செய்யக்கூடிய அதிகாரம் பொருந்தியது. ஏறக்குறைய துணை முதல்வரை விட அதிக பொறுப்புள்ளது.

எனவே துணை முதல்வர் என்று ஒரு பதவியை அவருக்கு வழங்கும் போது Government protocol ஒரு கூடுதல் கவனம் கிடைக்கும். ஆகவே இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி வந்தால் ஒன்றும் தவறில்லை என்றுதான் சொல்வேன்" என்கிறார்.
கட்சியின் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர் இவரே உறுதியாக மறுக்கவில்லை என்பதுதான் இதில் நாம் கவனிக்க வேண்டி உள்ளது.
இன்றைக்குத் தனியே சென்று பிரதமரைச் சந்திக்கும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் அதற்காகத்தான். ஒரு காலத்தில் திமுக டெல்லி அரசியலை முரசொலி மாறன் தான் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அது பிறகு ஆ.ராசா மற்றும் கனிமொழி கைக்கு மாறியது. இன்றைக்கு டெல்லி அரசியலை உதயநிதி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் நேரடியாக மோடியை எதிர்த்து வருகிறார். எதிர் துருவமாக அவர் நிற்கிறார். ஆக, தமிழ்நாடு சாந்த நலத்திட்டங்களைப் பெறவேண்டிய மோடி- ஸ்டாலின் சந்திப்புகள் நடந்தால் அதில் ஒரு சுமுக தன்மை இருக்காது. அதற்காகவே உதயநிதி முன்னிறுத்தப்படுகிறார் என்றும் சொல்கிறார்கள்.
இந்த திமுக இளைஞரணி மாநாடு டாஸ்க் உதயநிதிக்கு வழங்கப்பட்டதே துணை முதல்வர் பதவிக்கு அவரை உயர்த்தத்தான் என முணுமுணுக்கிறது கட்சி வட்டாரம். இயற்கை சீற்றத்தால் அந்த மாநாட்டை 2 முறை தள்ளித்தள்ளி வைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது.
மாநாடு திட்டமிட்டபடி டிசம்பரில் நடந்திருந்தால், ஜனவரியில் அவர் துணை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார். அதுதான் உண்மை என்று அடித்துச் சொல்கிறார்கள் நம்மிடம் பேசிய உடன்பிறப்புகள்!












Click it and Unblock the Notifications