டாஸ்மாக்கில் தினமும் வசூல் ஆகும் பணம் எங்கு போகிறது? அதிமுக சொன்ன திடுக்கிடும் புகார்
சென்னை: டாஸ்மாக் மூலம் தினமும் வசூல் ஆகும் தொகை கருவூலத்தில் சேர்க்கப்படுகிறதா? என்பதை தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. அதேநேரம் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்துள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச்செயலாளர் இன்பதுரை கொடுத்த மனுவில்," கடந்த மார்ச் 16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பொதுமக்களின் ஓட்டுகளை பெறுவதற்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது புகார் கொடுத்துள்ளோம்.முதல்வர் ஸ்டாலின் தனது 'எக்ஸ்' வலைதளத்தில், கோவையில் தேர்தலுக்கு பிறகு கிரிக்கெட் மைதானம் கட்டித்தரப்படும் என்று அறிவித்து, அந்த பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 2-வது சர்வதேச மைதானமாக கோவை கிரிக்கெட் மைதானம் திகழும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசின் கொள்கை முடிவை அறிவிப்பது, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது ஆகும். இந்த தேர்தலில் மக்கள் எதிர்ப்பு அலை வீசுவதால் இதுபோன்ற வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார். இது தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக மீறும் குற்றமாகும்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் களத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது என்பதுதான் தேர்தல் நடத்தை விதிகளின் நோக்கம். ஆனால் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர். எனவே 48 மணி நேரத்தில் அவர்களிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோர வேண்டும்" இவ்வாறு அதில் இன்ப துரை கூறியுள்ளார்.
இந்த புகார் பற்றி இன்பதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முதல்வர் ஸ்டாலினே தேர்தல் விதிகளை மீறுகிறார். எதற்காக தேர்தல் விதிகள் உள்ளன?. முன்பு இதுபோன்ற சம்பவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அதுபோல முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் விளக்கம் கேட்க வேண்டும்.
விரைவில் 40 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை அளிப்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு குறித்தும் புகார் அளித்துளளோம். தேர்தல் கமிஷனின் காதில் சங்காக ஊதி இருக்கிறோம். முதல்வர் மீதான புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்திவிட முடியும். நீதிமன்றமும் இந்த விஷயத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம். இங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் வரை செல்வோம். டாஸ்மாக் மூலம் தினமும் வசூல் ஆகும் தொகை கருவூலத்தில் சேர்க்கப்படுகிறதா? என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஆனால் அந்தத் தொகை கருவூலத்தில் செலுத்தப்படாமல் தேர்தல் செலவுக்காக ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வந்திருக்கிறது" என்று இன்பதுரை கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.












Click it and Unblock the Notifications