சென்னை பக்கம் திரும்பிய "போகஸ்".. மாண்டஸ் புயல் எங்கே கரையை கடக்கும்? எப்போது கடக்கும்? பின்னணி
சென்னை: அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடலில் உருவான ‛மாண்டஸ்' புயல் எங்கே செல்லும்.. எப்போது கரையை கடக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் ஒருவழியாக புயல் உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதில் இருந்தே வங்கக்கடலில் எப்போது புயல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவவில்லை. வங்கக்கடலில் நிலவிய வெப்பநிலை, வறண்ட காற்று போன்ற காரணங்களால் புயல் உருவாகாமல் இருந்தது.
மிரட்ட வரும் மாண்டஸ்! பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்! எங்கெங்கே தெரியுமா?

புயல்
வடகிழக்கு பருவமழையின் முதல் வாரம், வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்தது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கை நிலப்பகுதிக்கு மிக அருகில் இருந்தது. இதனால் ஏற்பட்ட காற்று காரணமாக முதலில் சென்னையில் மழை பெய்தது. ஆனால் இது புயலாக மாறவில்லை. அதற்கு அடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று வங்கக்கடலில் உருவானது. இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனாலும் இது நிலத்திற்கு மிக அருகில் இருந்தது. இதனால் இதுவும் புயலாக உருவெடுக்கவில்லை.

தாழ்வு பகுதி
பின்னர் மீண்டும் வங்கக்கடலில் தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த தாழ்வு பகுதி வறண்ட காற்று காரணமாக பாதிக்கப்பட்டது. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும். வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இதன் காரணமாக மூன்றாவது காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாமல் மறைந்து போனது.

தாழ்வு மண்டலம்
இந்த நிலையில்தான் தற்போது தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் முதலில் டெல்டா அருகே கரையை கடக்கலாம் அல்லது ஆந்திரா அருகே கரையை கடக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இது சென்னை அருகே கரையை கடக்க உள்ளது. இதுதான் இந்த வடகிழக்கு பருவமழை சீஸனின் முதல் புயல் ஆகும். அந்தமான் அருகே தென்கிழக்கு வங்க கடலில் உருவான ‛மாண்டஸ்' புயல் எங்கே செல்லும்.. எப்போது கரையை கடக்கும் என்று சென்னை ரெயின்ஸ் (chennairains.com) வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது. சென்னையில் இருந்து 50 கிமீ தூரத்தில் 9ம் தேதி மாலை இந்த புயல் கரையை கடக்கலாம் என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட வானிலை கணிப்பில் தெரிவித்துள்ளது. ஆனால் இது கரையை கடக்கும் போது எவ்வளவு வலிமையோடு இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

வானிலை மையம்
இதில் 50:50 சான்ஸ் உள்ளது. அதாவது தீவிர வலிமையோடும் கரையை கடக்கலாம். ஒரு எலும்புக்கூடு போலவும் வலிமை இன்றி கரையை கடக்கலாம். எனவே எதற்கும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாளை காற்று வேகம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டெல்டா பெல்ட் வரை 60-70 km/h வேகத்தில் இருக்கும். கடலோர மாவட்டங்களில் 50 கிமீ பகுதிக்கு பெரும்பாலும் காற்று வேகம் 40-50 km/h என்ற அளவில் இருக்கும், என்று சென்னை ரெயின்ஸ் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் புயலாக இது நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று டெல்டா, சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.