குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000! யாருக்கு கிடைக்கும்! யாருக்கு எல்லாம் கிடைக்காது! ரூல்ஸ் என்ன
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் திட்டம் தொடங்கப்படும் நிலையில், இதில் யாருக்கு உரிமை தொகை கிடைக்கும்.. யாருக்குக் கிடைக்காது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்தது முதலே இத்திட்டம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில், வரும் செப். முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தமிழ்நாடு நிதியமைச்சர் வெளியிட்டார். இந்தச் சூழலில் மாவட்ட கலெக்டர்கள் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார்.

முக்கிய அறிவிப்பு: அப்போது மாவட்ட ஆட்சியர்கள் மத்தியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பல முக்கிய கருத்துகளை வெளியிட்டார். இதற்கிடையே இதற்கு யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம், யார் விண்ணப்பிக்க முடியாது என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, 21 வயதை நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.. உச்ச வரம்பு இல்லை என எதுவும் இல்லை. ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதற்கு விண்ணப்பிக்க இறுதி தேதியும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
தகுதிகள்: ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இது கிடைக்காது எனச் சொல்லப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருந்து, வருமான வரியைத் தாக்கல் செய்வோருக்கு, வருமான வரி செலுத்துவோருக்கு இது பொருந்தாது.
மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியாது. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்க முடியாது: மேலும், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், அரசிடம் இருந்து பென்சன் பெறும் குடும்பங்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். 3600 யூனிட் மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது. அதாவது இரண்டு மாதத்திற்கு 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இது கிடைக்கும்.
5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தை வைத்திருக்க வேண்டும். இந்த மேல் கூறிய தகுதியின்மைகளில் வராத பெண்கள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதேநேரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித் தொகை பெறும் குடும்பங்கள் தத்தினவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திருமணமாகாத பெண்கள், திருநங்கைகள் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் அவர்களும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications