மதுசூதனன் மறைவு... அடுத்த அதிமுக அவைத் தலைவர் யார்? பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் அணி தீவிரம்
சென்னை: அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் காலமானதைத் தொடர்ந்து புதிய அவைத் தலைவர் யார் என்பது தொடர்பான விவாதம் களைகட்டியுள்ளது. அவைத் தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் ஓபிஎஸ் அணிகள் தீவிரமாக உள்ளன.
Recommended Video
எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்து அதிமுகவின் வடசென்னை முகமாக உயர்ந்தவர் மதுசூதனன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர். ஜெயலலிதாவால் அமைச்சராக்கப்பட்டு பின்னர் ஓரம்கட்டப்பட்டார்.
2007-ம் ஆண்டு அதிமுக அவைத் தலைவர் பதவியை மதுசூதனனுக்கு கொடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது, மதுசூதனனும் அந்த அணியில் ஐக்கியமானார். இதனால் அப்போது அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்த சசிகலா, மதுசூதனனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

அப்பல்லோவில் மதுசூதனன்
பின்னர் சசிகலா சிறைவாசம் அனுபவிக்க எடப்பாடி பழனிசாமியுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது. அதிமுக அவைத் தலைவர் பதவியில் தொடர்ந்தார் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் மதுசூதனன். அண்மையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு போய் மதுசூதனன் உடல்நலம் குறித்து சசிகலா விசாரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா நேரில் அஞ்சலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் நேற்று காலமானார். அவரது உடலுக்கு அதிமுகவின் தலைவர்களான ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் மு.க. ஸ்டாலினும் மதுசூதனன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அதிமுக தலைவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். சசிகலாவும் அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதாவின் காரில் சென்று மதுசூதனன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக புதிய அவைத் தலைவர் யார்?
இப்போது மதுசூதனன் வகித்து வந்த அதிமுகவின் அவைத்தலைவர் பதவி யாருக்கு என்பதில் மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் மோதத் தொடங்கிவிட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களான பொன்னையன், செங்கோட்டையன் என பலரது பெயர்களும் இந்த பதவிக்கு அடிபடுகின்றன. ஆனால் ஓபிஎஸ் தரப்போ எப்படியாவது அவைத் தலைவர் பதவியை தமது அணி பெற்றுவிட வேண்டும் என தீவிரமாக உள்ளது.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் மோதல்
அதிமுகவின் சட்டசபை குழுத் தலைவர் பதவி - எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டது. தமக்கே அதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஈபிஎஸ் கைப்பற்றிவிட்டார். இதனால் ஓபிஎஸ் கடும் ஏமாற்றமடைந்தார். இதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஏற்க முடியாது என அடம்பிடித்தார் ஓபிஎஸ். அதிமுகவில் இன்னொரு தர்ம யுத்தம் வருமோ என்கிற நிலைமை இருந்தது. ஆனால் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து பேசி சமாதானப்படுத்தி அந்த பதவியை ஏற்க வைத்தார் ஈபிஎஸ்.

இரு அணிகளின் பிரச்சனை என்ன?
இந்த நிலையில் தற்போது அவைத் தலைவர் பதவியை எளிதாக ஈபிஎஸ் அணிக்கு விட்டுக் கொடுக்க ஓபிஎஸ் அணி தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. அதிமுகவின் பொதுக்குழு உள்ளிட்ட முக்கிய கூட்டங்களை கூட்டும் அதிகாரங்கள் அவைத் தலைவரிடம் இருக்கிறது. அதனால் இந்த பதவியையும் தம் வசமே வைத்துக் கொள்ள விரும்புகிறது ஓபிஎஸ் அணி. ஆனால் ஈபிஎஸ் தரப்பே ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என 2 பதவிகளையும் ஓபிஎஸ் வைத்திருக்கிறார். அப்படி அவைத் தலைவர் பதவியும் ஓபிஎஸ் அணிக்கு போனால் என்னதான் எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தாலும் அதிமுக- ஓபிஎஸ் கட்சியாகவே அடையாளப்படுத்தப்படும் என நினைக்கிறது ஈபிஎஸ் அணி.

யார் யாருக்கு வாய்ப்பு?
தற்போதைய நிலையில் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் அக்கட்சியின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என பலரும் இருக்கின்றனர். ஜெயலலிதாவால் 2 முறை அவைத்தலைவராக்கப்பட்டவர் முன்னாள் அமைச்சர் பொன்னையன். அதிமுகவின் மிக மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி அமைதியாக இருக்கிறார். தேமுதிகவில் இருந்து விலகி 2014-ம் ஆண்டு அதிமுகவுக்கு திரும்பினார் பண்ருட்டி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். திண்டுக்கல்லில் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் இடையேயான கோஷ்டி பூசலால்தான் அந்த மாவட்டமே 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இப்போது அவைத் தலைவர் பதவிக்கும் 2 மாஜி அமைச்சர்களும் முட்டி மோதுகின்றனர். அதிமுகவின் பொருளாளர் பதவியில் இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அதனால் நத்தம் விஸ்வநாதனைவிட திண்டுக்கல் சீனிவாசனுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகளாக பிளவுபட்ட போது அதிமுக அவைத் தலைவராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டிருந்தார். அதனால் செங்கோட்டையனுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்












Click it and Unblock the Notifications