ஆஸ்கரை தட்டிச் சென்ற ஊட்டி பெண்.. தமிழர்களுக்கு பெருமை சேர்த்த கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ்! யார் இவர்?
தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் எனும் தமிழகத்தில் எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த படத்தை இயக்கிய கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் யார் ?
சென்னை: தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை காட்டில் எடுக்கப்பட்ட தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் எனும் குறும்படம் ஆஸ்கர் பெற்ற நிலையில் அதை இயக்கிய இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் யார் என்பதை பார்ப்போம்.
தாயை பிரிந்து தவித்த இரு குட்டிகளை முதுமலை காட்டில் வைத்து தம்பதி வளர்த்து வந்தனர். அந்த குட்டிகளை தங்கள் குழந்தைகள் போல் வளர்த்து வந்த நிலையில் அதை இரு ஆண்டுகளாக அவர்களுடன் இருந்து தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்தை இயக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதால் இந்தியா மட்டுமில்லாமல் தமிழகமே பெருமை கொண்டுள்ளது. இந்த குறும்படத்தை இயக்கியவர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ். இவர் யார் என்பதை பார்ப்போம்.

புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிப்பாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பொம்மன் பெள்ளி தம்பதி. இவர்கள் 2017ஆம் ஆண்டு தேன்கனிக்கோட்டை பகுதியில் தாயை பிரிந்த ஆண் குட்டி யானையையும் 2018ஆம் ஆண்டு தாயை பிரிந்து சத்தியமங்கலம் பகுதியில் சுற்றித் திரிந்த பெண் குட்டி யானையையும் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு வளர்த்தனர்.

இரு குட்டி யானைகள்
இந்த யானைகளுக்கு ரகு, அம்மு என பெயரிடப்பட்டது. இந்த யானைகளை வளர்க்கும் பொறுப்பு பொம்மன், பெள்ளி தம்பதிக்கு கொடுக்கப்பட்டது. இவர்கள் இந்த யானையை குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர். ஒரு நாள் பொம்மன், ரகு யானையுடன் சாலையில் நடந்து சென்ற போது ஊட்டியை சேர்ந்த இயக்குநர் கார்த்திகி போன்ஸ்லேவ்ஸ் பார்த்துள்ளார்.

அட்டகாசம்
அந்த யானையை பார்த்தவுடன் அதன் துருதுரு அட்டகாசங்களை பார்த்ததும் கார்த்திகிக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே அந்த யானையை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ரகு தண்ணீரில் பொம்மனுடன் விளையாடியதை பார்த்தும் அந்த யானைக்கும் பொம்மனுக்கும் இருக்கும் பாசத்தை கார்த்திகி கண்டுள்ளார். உடனே இதை குறும்படமாக இயக்க முன் வந்துள்ளார்.

2017 இல் படம்
இதையடுத்து தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற பெயரில் 2017 இல் குறும்படமாக இயக்கத் தொடங்கினார் கார்த்திகி. இந்த குறும்படத்தை எடுத்து முடிக்க அவருக்கு 5 ஆண்டுகள் ஆகின. மொத்தம் 450 மணி நேரம் இந்த படத்தை படமாக்கினார். இவருக்கு இயற்கையின் மீதான காதலே இந்த அளவுக்கு ரசித்து இந்த குறும்படத்தை பொறுமையாக எடுக்க வைத்துள்ளது. கார்த்திகியின் தாய்க்கு விலங்குகள் என்றால் பிரியம். அது போல் கார்த்திகியின் தந்தை ஒரு போட்டோகிராபர். இவர்களிடம் இருந்து இயற்கை மீதான பாசத்தையும் அதை அழகாக எடுக்கும் விதத்தையும் கார்த்திகி கற்றுக் கொண்டார்.

ஊட்டி பெண்
கார்த்திகி பிறந்து வளர்ந்தது எல்லாம் ஊட்டியில்தான். இவர் ஊட்டியில் உள்ள செயிண்ட் ஹில்டாஸ் பள்ளியில் படித்தார். பின்னர் கோவையில் உள்ள ஜிஆர்டி எனும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி விஸ்காம் படித்துள்ளார். பின்னர் போட்டோகிராபியும் படித்துள்ளார். இதையடத்து புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த கார்த்திகி குறும்படங்களையும் இயக்கி வந்தார். கார்த்திகிக்கு இயற்கையை ரசித்தபடியே பயணிப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.

18 மாத குழந்தையாக கார்த்திகி
கார்த்திகி 18 மாத குழந்தையாக இருக்கும் போதே அவருடைய பெற்றோர் அவரை வனப்பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். இவருடைய பாட்டிக்கும் இயற்கை மீது அதீத ஆர்வம் இருந்தது. இவர் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதிலும் வல்லவர். இயற்கைக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த படத்தை எடுத்துள்ளதாக கூறுகிறார் கார்த்திகி. மேலும் இவருக்கு சுற்றுச்சூழல், இயற்கை, வனவிலங்குகளின் வாழ்க்கை உள்ளிட்டவைகளின் மீது ஈடுபாடு அதிகமாம்.












Click it and Unblock the Notifications