La Ganesan: அரசுப் பணியை உதறிய ஆர்எஸ்எஸ்காரர்.. தமிழக பாஜகவுக்கு அடையாளம் கொடுத்த மூத்தவர்! யார் இந்த இல.கணேசன்?
சென்னை: பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் அடையாளமாக திகழ்ந்த இல.கணேசனின் பயணத்தை இதில் பார்க்கலாம்.
பாஜகவையும், அந்தக் கட்சியின் தாமரை சின்னத்தையும் தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்றவர் இல.கணேசன். தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்ட இல.கணேசன், ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது சிறுவயதிலேயே பற்றுக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு இல.கணேசனுக்கு வருவாய் ஆய்வாளர் பணி கிடைத்தது. ஆனால் அந்தப் பணியை உதறிவிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேரம் பிரச்சாரகராக செயல்பட்டு வந்தவர்.

இந்தியாவில் எமர்ஜென்சி அமலுக்கு வந்த பின், இல.கணேசன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அப்போது தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நட்பில் இருந்துள்ளார். அப்போது இல.கணேசன் எழுதிய பாடல்கள் ஆர்எஸ்எஸ் முகாம்களில் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து இல.கணேசனுக்கு 1991ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னரே இல.கணேசனின் அரசியல் பயணம் தொடங்கியது என்று சொல்லலாம். பாஜகவில் பொறுப்பு கிடைத்த பின், தமிழ்நாடு முழுவதும் இருந்து பாஜகவில் இளைஞர்களை சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். என்னதான் பாஜகவில் ஆளுமையாக மாறிவிட்டாலும், தேர்தல் அரசியலில் இல.கணேசன் இதுவரை எந்த வெற்றியையும் பெற்றதில்லை.
2009, 2014 லோக்சபா தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு இரு முறையும் தோல்வியடைந்தார். இதன்பின்னர் 2016ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்தப் பதவி ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அதேபோல் இல.கணேசனின் தேர்தல் செயல்பாடுகள் எப்போதும் பாஜகவினரால் வியந்து கூறப்படும்.
ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாக பாஜக வெற்றிக்காக வாக்கு சேகரிப்பார். 2011ஆம் ஆண்டு திருச்சியில் பல கோடி பணம் பிடிபட்ட போது, காந்தி படம் போட்ட நேரு பணம் என்று இல.கணேசன் அளித்த பதில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தமிழக பாஜகவின் இன்றைய முகமாக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்டோரை தலைவராக மாற்றியவர் இல.கணேசன் தான்.
இவரது காலத்தில் தான் தமிழக பாஜகவிற்குள் வரும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதனை இன்றளவும் பாஜகவினர் கடைபிடித்து வருகின்றனர். அதேபோல் தமிழக பாஜகவில் இருந்தாலும், திமுக மற்றும் இடதுசாரிகளுடன் நல்ல நட்பில் இருந்தவர். தமிழ்நாட்டில் அனைத்து கட்சியினர் மத்தியிலும் இல.கணேசனுக்கு நல்ல மரியாதை இருந்தது.
திமுகவினர் மத்தியில் கூட இல.கணேசன் அழைத்தால் உடனடியாக கருணாநிதியிடம் இருந்து பதில் வரும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட காலம் உண்டு. இதன்பின் 2021ஆம் ஆண்டு மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டர். அதன்பின் இல.கணேசனின் ஆளுநர் பயணம் தொடங்கியது. அளுநராக இருந்த போதும் அடிக்கடி தமிழ்நாடு வரும் வழக்கம் கொண்ட இல.கணேசன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாகவே இல.கணேசனுக்கு அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பாஜகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications