கவிஞர்.. பேரூராட்சி தலைவி.. 2006ல் சட்டமன்ற வேட்பாளர்.. இனி ராஜ்யசபா எம்.பி.. யார் இந்த சல்மா?
சென்னை: திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கவிஞர் சல்மா. திமுகவில் நீண்டகாலமாகச் செயலாற்றும் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா, 2006 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 2500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டவர்.
ரொக்கையா பேகம் என்ற சல்மா, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தவர். இவர் தொண்ணூறுகளில் தொடங்கி கவிதைகள் எழுதி வருகிறார். 13 வயதில் தனது தோழிகளுடன் தியேட்டருக்குச் சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் அவரது குடும்பத்தார் அவரை தொடர்ந்து பள்ளி செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் படிப்பு பாதிக்கப்பட்டது.

யார் இந்த சல்மா?
பின்னர் அப்துல் மாலிக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அப்துல் மாலிக் திராவிட பாரம்பரியம் கொண்டவர். திருமணத்துக்குப் பின் தீவிரமாக கவிதைகள் எழுதத் தொடங்கினார் சல்மா. தொடர்ந்து, அரசியல் ஆர்வத்தால் மக்கள் பணி செய்யத் தொடங்கினார்.
சல்மா பொன்னம்பட்டி பேரூராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்,
சல்மா, திமுகவில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகப் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து தற்போது செய்தி தொடர்பு பிரிவு இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
கவிஞர் - எழுத்தாளர்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும், பச்சை தேவதை ஆகிய கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் சல்மா. மேலும், இரண்டாம் ஜாமங்களின் கதை, மனாமியங்கள் ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார். சல்மா எழுதிய 'இரண்டாம் ஜாமங்களின் கதை', ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ஏசியன் புக்கர் ப்ரைஸ் எனப்படும் மேன் ஏசியன் லிட்டெரரி விருதுக்காக லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டு பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் விருது சல்மாவுக்கு வழங்கப்பட்டது.
பெண்கள் பிரச்சனைக்கு
திமுக மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டிருக்கும் கவிஞர் சல்மா, இதுகுறித்துப் பேசுகையில், "மகிழ்ச்சி திமுக தலைவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் பிரச்சனைக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications