தமிழ்நாட்டின் புதிய டிஜிபி இவரா? 8 பேர் லிஸ்ட் ரெடியாமே? தேர்தல் வேற வருதே.. எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31ம் தேதியோடு ஓய்வு பெறவிருக்கும் நிலையில், அந்த பொறுப்புக்கு அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல், நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
கடந்த, 2023 ஜூன் மாதம், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி யாக பொறுப்பேற்றார்.

இவர் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். இதனால், புதிய டிஜிபியை நியமனம் செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், சங்கர் ஜிவாலுக்கு 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் உண்மை இல்லை என்று , சங்கர் ஜிவால் தரப்பில் உடனடியாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
பட்டியல் தாமதம்
வழக்கமாக, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல், 3 மாதங்களுக்கு முன், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த மே மாதமே இந்த பட்டியல் யுபிஎஸ்சி க்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படியான எந்த பட்டியலையும் தமிழ்நாடு அரசு அனுப்பவில்லை என தெரிகிறது.
காரணம், இந்த பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டதாகவும், இதனால், பொறுப்பு டிஜிபியாக ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய டிஜிபி தேர்வு பட்டியலிலுள்ள , மூத்த ஐபிஎஸ், அதிகாரியின் ஆதரவாளர் தரப்பில், மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது இதை விசாரித்த நீதிமன்றமும், புதிய டிஜிபி நியமனத்தில் குளறுபடி ஏற்பட்டால் தலையிடும் நிலை ஏற்படும் என்று எச்சரித்திருந்தது..
யார் யாருக்கு வாய்ப்பு
இதையடுத்து, குளறுபடிக்கு வாய்ப்பு இல்லை என்றும், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை துவங்கி விட்டதாகவும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. பிறகு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், 11 பேர் அடங்கிய பட்டியல், டிஜிபி அலுவலகத்தில் இருந்து, முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த பட்டியலில், டிஜிபி ரேங்கில் பணிபுரிந்து வரும் மூத்த IPS அதிகாரிகளான தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், ஆவின் விஜிலன்ஸ் முதன்மை அதிகாரி ராஜீவ்குமார், தமிழக காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோட், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அபய்குமார் சிங், ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், சஞ்சய் மாத்தூர், காவல் துறை தலைமையிடத்து டிஜிபி, வினீத்தேவ் வாங்கடே, காவல் துறை நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கட்ராமன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
8 பேர் லிஸ்ட்
அதில், 3 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு, 8 பேர் அடங்கிய பட்டியல், மத்திய அரசுக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. அதில், 3 பேரை இறுதி செய்து, மாநில அரசுக்கு பட்டியல் திருப்பி அனுப்பி வைக்கப்படும். அதில் இருந்து ஒருவர் டிஜிபியாக நியமனம் செய்யப்படுவார்.
அந்த இறுதி பட்டியலில், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காரணம், இவர்கள் சீனியாரிட்டி அடிப்படையிலும், மத்திய அரசில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்கள் ஆவர்.
எப்படி தேர்வு நடைபெறும்?
தமிழக அரசு அனுப்பும் டிஜிபி அந்தஸ்தில் உள்ளவர்களின் பெயர்களை யுபிஎஸ்சி (UPSC) என்கிற மத்திய அரசு தேர்வாணயத்தின் குழு தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்..
அக்கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், மாநில தலைமைச் செயலாளர், மாநிலத்தின் தற்போதைய டிஜிபி, மத்திய போலீஸ் படையின் தலைவர்களில் ஒருவர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள். அதன்படி, அரசு அனுப்பும் லிஸ்ட்டிலிருந்து 3 பேர் இறுதி செய்யப்பட்டு அது மாநில அரசுக்கு அனுப்பப்படும். அதிலிருந்து ஒருவரை தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அரசு நியமனம் செய்யும்.
புதிய டிஜிபி யார்?
அந்தவகையில்., நீண்ட இழுபறிக்குபிறகு, பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு பிறகு, புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியல், நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால், மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்ல, விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்று பேரில் யாரை அரசு தேர்ந்தெடுக்கப்போகிறது என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.. மொத்தத்தில், தமிழகத்தின் புதிய டிஜிபி நியமனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
லிஸ்ட் வரலியா?
இதனிடையே புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடமிருந்து நேற்று ஆகஸ்ட் 22 ம்தேதி வரவில்லை என்றும் அது தொடர்புடைய எந்த ஆவணங்களும் யுபிஎஸ்சி வசம் இல்லை என்றும் மத்திய பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளதாம்..
அந்தவகையில் புதிய டிஜிபி தேர்வு இறுதி செய்யப்படாத நிலையில், அந்நடவடிக்கை மேலும் சில வாரங்களுக்கு தள்ளிப்போகலாம் அல்லது சங்கர் ஜிவால் ஓய்வுக்குபிறகு பொறுப்பு டிஜிபி நியமிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications