Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்ட கிட்ட நெருங்கி.. கண்ணை உறுத்திய "நெருக்கம்".. தெலுங்கானாவை ஆள போவது இவரா? அப்ப ரெட்டி இல்லையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேசிஆரின் "ஹாட்ரிக்" கனவை தகர்த்துவிட்டு, தெலுங்கானாவில் முன்னேறி மேலெழும்பி வந்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.. இதையடுத்து, தெலுங்கானாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற ஆர்வம் இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது.
ஏற்கனவே எதிர்பார்த்ததை போலவே தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி உறுதியான வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.. தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சந்திரசேகர ராவ், பின்னடைவை சந்தித்து வருகிறார். அத்துடன், தான் போட்டியிட்ட 2 தொகுதியிலுமே மண்ணை கவ்வி உள்ளார்..

யார் இவர்: கேசிஆர் என்ற பிரம்மாண்டமான நபரை... 10 வருடம் மாநிலத்தை ஆண்ட தலைவரை.. தெலங்கானாவுக்கென அடையாளம் தந்தவரை... இன்று படுதோல்வியடைய செய்துள்ளது காங்கிரஸ்.. இதற்கெல்லாம் "மாஸ்டர் மைண்டாக" இருந்து உதவியவர் ரேவந்த் ரெட்டி என்றபோது, தேசத்தின் ஒட்டுமொத்த கவனமும் இவர் மீது குவிந்துள்ளது.

Who will be the next Chief Minister of Telangana and what are the Congress Strategies

கேசிஆருக்கு எதிராக களமாடி, 2 தொகுதிகளிலுமே கேசிஆரை மண்ணை கவ்வ செய்துள்ளார் இந்த ரேவந்த் ரெட்டி.. சில வருடங்களுக்கு முன்புவரை, காங்கிரஸ் என்னவோ தெலுங்கானாவில் வழக்கமான பாணியில்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், ரேவந்த் ரெட்டியை மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டபிறகுதான், புது மாற்றமும், புது தெம்பும், புது வேகமும், காங்கிரசுக்கு கிடைத்துவிட்டதாக கருதப்பட்டது.

அரசியல் பயணம்: ரெட்டியின் அரசியல் மிக சுவாரஸ்யமானது.. ஆரம்ப காலத்தில், பாஜக ஏபிவிபியில் கால் வைத்து, அங்கிருந்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி பக்கம் "எகிறி", அங்கிருந்து தெலுங்கு தேசம் பக்கம் "நகர்ந்து", அங்கிருந்து காங்கிரஸ் பக்கம் "தாவி" வந்தவர் இந்த ரெட்டி..

இத்தனை கட்சிகளிலும் ரவுண்டு அடித்துவிட்டு வந்தாலும், ரெட்டி மீது மிகுந்த நம்பிக்கையை, காங்கிரஸ் தலைமை வைத்திருக்கவே செய்கிறது. அதனால்தான், எம்எல்ஏவாகவும், கட்சியின் மாநில தலைவராகவும், எம்பியாகவும், காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்த்தி அழகு பார்த்தது டெல்லி மேலிடம். இப்போதும்கூட, மாநில முதல்வர் பொறுப்பை ரெட்டிக்கே வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், ரெட்டியை, முதல்வராக்க காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் விரும்பவில்லை என்கிறார்கள்.. இதற்கு 4 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

என்ன காரணம்: எப்போதுமே காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, கட்சியின் மூத்த தலைவர்களுக்கே, முதலமைச்சர் என்ற பொறுப்பு தரப்படும்.. அதுமட்டுமல்ல, முதல்வர் பதவிக்கென்ற சில மூத்த தலைவர்கள் லிஸ்ட்டில் இடம்பெறுவார்கள்.. ஆனால், ரெட்டியை பொறுத்தவரை, சமீபத்தில்தான் கட்சியில் சேர்ந்தவர்.. முதல்வர் பதவி கேட்டகிரியில் உள்ள தலைவர்களிலேயே, ஜூனியரும்கூட. எனவே, இவருக்கு முதல்வர் பதவியை வழங்குவதில் ஒருவித தயக்கம் உள்ளதாக தெரிகிறது.

இரண்டாவது காரணம், பல கட்சிகளுக்கு சென்றுவிட்டு, கடைசியாக காங்கிரசுக்கு வந்தவர் என்பதால், காங்கிரஸின் "முகம்" இவர்மீது முழுமையாக படரவில்லை.. மூன்றாவது காரணம், இவர் மாற்று கட்சியிலிருந்தபோது, கேசிஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர்.. இந்த நெருக்கம் இப்போதுவரை, சில காங்கிரஸ் தலைவர்களுக்கு உறுத்தலாகவே உள்ளது.

நான்காவது காரணம், காங்கிரஸ் தலைமையிடம் "நெருக்கத்தை" வலுவாக வைத்து கொள்பவர் என்ற விமர்சனம் ரெட்டி மீது எப்போதுமே உண்டு. தெலங்கானாவில் ராகுல் யாத்திரை மேற்கொண்டபோதுகூட, ரெட்டியின் நெருக்கமானது, மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியிருந்ததாம். அதனால்தான், ரெட்டியை முதல்வராக்குவதில் ஒருவித தயக்கம் இருப்பதாக கூறுகிறார்கள்.

யார் இவர்: ரெட்டிக்கு அடுத்தபடியாக, மல்லு பாட்டி விக்ரமார்காவுக்கு, முதல்வர் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். இவருக்கு இப்போது 63 வயதாகிறது.. தெலுங்கானா காங்கிரஸின் முக்கிய தலித் தலைவராக உள்ளவர்.. காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராகவும் பொறுப்பில் இருப்பவர்.. ஒருங்கிணைந்த ஆந்திரா இருந்தபோதே சீனியராக வலம்வந்தவர்.

எப்போதுமே, இந்திய மாநிலங்களில், தலித் ஓட்டுக்கள் காங்கிரசுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், தெலுங்கானாவை பொறுத்தவரை, கேசிஆர் மீது தலித்துக்களுக்கு நிறைய அதிருப்திகள் கிளம்பிவிட்டன. இந்த அதிருப்தி வாக்குகளை தன்பக்கம் திருப்பியது காங்கிரஸ்.

பிரச்சாரம்: "தெலுங்கானாவில் பாஜக வென்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரே முதல்வர் ஆக்கப்படுவார்" என்று, பிரச்சாரத்தில் உள்துறை அமித்ஷா அறிவித்திருந்தாலும்கூட, 2 சதவீதமே ஓட்டுக்களை வைத்து கொண்டு, இது சாத்தியமா? என்று காங்கிரஸ் கிண்டலடித்திருந்தது. அதேசமயம், இதுவரை ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட, முதல்வர் நாற்காலியில் அமரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அந்தவகையில், மல்லு பாட்டி விக்ரமார்கா முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதேபோல, காங்கிரஸின் மூத்த தலைவர் குண்டூர் ஜனாரெட்டிக்கு, முதல்வராவதற்கு நிறையவே சான்ஸ் உள்ளதாம்.. இவர் கட்சியின் சீனியராவார்.. கடந்த 2014-ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் குண்டூர் ஜனாரெட்டி.. 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர்.. எனவே, இவரை முதல்வராக்கலாம் என்று ஆதரவு தருகிறார்கள் கதர் தலைவர்கள்.

எம்எல்ஏக்கள்: எனினும், இந்த முறை தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.. தெலுங்கானாவின் சட்டமேலவை விதிப்படி, ஒருவர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அல்லது எந்த பொறுப்பிலும் அவர் இல்லாவிட்டாலும்கூட, எம்எல்ஏக்களின் ஆதரவை கொண்டே அந்நபரை முதல்வராக பதவியில் அமர வைக்கலாம்.

ஆனால், அடுத்த 6 மாதத்தில், அந்த நபர் மேலவை உறுப்பினராக (எம்எல்சி) வேண்டும் என்பது நடைமுறையாகும். வழக்கமாக ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்யும் நடைமுறைபோலவேதான், இந்த எம்எல்சிக்கும் எம்எல்ஏக்கள் அனைவரும் ஆதரவு தந்து ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அந்தவகையில், குண்டூர் ஜனாரெட்டிக்குதான், மாநில முதல்வராக நிறைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தலித் முகம்: எனினும், தலைமை என்ன முடிவெடுக்க போகிறது என்பது தெரியவில்லை.. மூத்த தலைவர் என்பதால், குண்டூர் ஜனாரெட்டியை முதல்வராக அமர வைக்குமா? அல்லது தலித்துகளின் முகமான மல்லு பாட்டி விக்ரமார்காவை முதல்வராக அமர வைக்குமா? அல்லது எந்தவொரு பெரிய சர்ச்சைகளிலும் சிக்காமல் தொண்டர்களின் முகமாகவே வலம்வரும் ரெட்டி ரேவந்த்தை முதல்வராக அமர வைக்குமா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+