வருமான வரி விலக்கு.. யாருக்கு ரியல் லாபம்? மறைமுக வரியில் அது உறுதி.. ஆனந்த் சீனிவாசன் கருத்து!
சென்னை: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்குவோர் வரி கட்ட தேவையில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. ரூ.12 லட்சத்திற்கு அதிகமான ஆண்டு வருமானம் ஈட்டுவோர் மட்டுமே வருமான வரி கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மிடில் கிளாஸ் மக்கள் மிகப்பெரிய பயனை அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருமான வரி விலக்கு உச்ச வரம்பு புதிய வருமான வரி முறைக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்களிப்பு அளிப்பதாகவும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு வருமான வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் ஈட்டுவோர் மாதம் ரூ.6 ஆயிரம் வரை சேமிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் சந்தைகளில் மக்கள் அதிகளவில் செலவு செய்வார்கள் என்றும், மறைமுக வரி மூலமாக மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வருமான வரி குறைக்கப்பட்டதால், அந்த பணம் சந்தைக்கு வரும் என்று கணக்கிடப்படுகிறது.
இதுகுறித்து பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் ஏழரை கோடி மக்கள் தான் வரி ரிட்டர்ன்ஸ் என்பதை தாக்கல் செய்கிறார்கள். அதில் ஒரு பங்கு இருக்கும் மக்கள் தான் வருமான வரி கட்டுகிறார்கள். அதனால், என் கணக்குபடி 140 கோடியில், ஒரு 2 கோடி பேருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் இருக்கலாம்.
இதனால் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அந்த 2 கோடி பேருக்கு பயனளிக்கும். அந்த 2 கோடி மக்கள் பணத்தை சேமிப்பார்கள், சந்தையில் முதலீடு செய்வார்கள் என்றால், வாய்ப்பே கிடையாது. இந்த வருமான வரி உச்ச வரம்பு அதிகரிப்பால், மத்திய அரசுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இந்த ஒரு லட்சம் கோடி தள்ளுபடியை மறைமுக வரியில் குறைத்திருக்கலாம்.
அப்படி குறைத்திருந்தால், இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவியாக இருந்திருக்கும். ரிலையன்ஸ் பெட்ரோல் பங்குகளில் ஹேப்பி ஹவர்ஸ் என்று ஒரு திட்டம் மூலமாக பெட்ரோல் விலை ரூ.3 வரை குறைக்கப்படுகிறது. டீசல் விலை ரூ.8 வரை குறைக்கப்படுகிறது. ஒருவேளை மத்திய அரசு கலால் வரி மற்றும் செஸ் வரியை குறைத்திருந்தால், ஒவ்வொருவருக்கும் ரூ.12 வரை குறைந்திருக்கும்.
இதன் மூலமாக இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் பயனடைந்திருப்பார்கள். இதனால் ஒரு மாதத்திற்கு மிச்சமாகும் பணத்தின் அளவு சிறியது தான். அதனால் அதனை மக்கள் வங்கியில் வைத்து சேமிக்கப் போவதில்லை. நிச்சயம் சந்தைக்கு வந்து செலவு செய்யத்தான் போகிறார்கள். டீ, பிஸ்கட், சாப்பாடு, ஆயில், ஆடை என்று தான் செலவு செய்வார்கள்.
பட்ஜெட் தாக்கலுக்கு பின் நிர்மலா சீதாராமன் வரி வருவாய் உயரும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சியே 10 சதவிகிதம் வரை தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், மக்களின் பாக்கெட்டில் இருந்து தான் பணத்தை எடுக்கப் போகிறார்கள். மறைமுக வரியில் நிச்சயம் பணத்தை வாங்க போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications