ஓ பன்னீர்செல்வத்தின் கடைசி நம்பிக்கை இதுதான்.. வியூகத்தை முறியடிப்பாரா எடப்பாடி! பாஜக என்ன செய்யும்?
தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வரட்டும் என ஓ பன்னீர்செல்வத்தின் கடைசி நம்பிக்கையாக காத்திருக்கிறார். ஒரு வேளை இந்த நம்பிக்கையும் பொய்த்து போனால் என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஒரு பக்கம் அதிமுகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று வருகிறார். மறுபக்கம் ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கிவிட்டதாக நேற்று சூளுரைத்தார். தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு வரட்டும் என ஓ பன்னீர்செல்வத்தின் கடைசி நம்பிக்கையாக காத்திருக்கிறார். ஒரு வேளை இந்த நம்பிக்கையும் பொய்த்து போனால் என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் எடப்பாடி எப்படி எதிர்கொள்வார் என்ற கேள்வியும் எழுகிறது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சாதமாக மாறி மாறி தீர்ப்புகள் வந்துள்ளன. எனவே இறுதி தீர்ப்பு இந்த வழக்கில் யாருக்கு சாதகமாக வருகிறதோ அவர்கள் கை அதிமுகவில் ஓங்கி இருக்கும் என்ற நிலை உள்ளது. இந்த விவகாரத்தை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ பன்னீர்செல்வத்தை சசிகலா பதவியை ராஜினாமா செய்ய கூறியதாக கூறப்படுகிறது. இதனால் பதவியை ராஜினாமா செய்த ஓ பன்னீர்செல்வம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இரவு 8.50 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு நீண்டநேரம் தியானம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என கண்ணீர் மல்க கூறியதுடன் தாம் தர்ம யுத்தம் தொடங்கி உள்ளதாகவும் பிரகடனம் செய்தார். இதுதான் ஓபிஎஸ் நடத்திய முதல் தர்ம யுத்தம் ஆகும். அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

ஓபிஎஸ்க்கு போர்க்கொடி
ஆனால் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், ஓ பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அவரை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற முயன்றனர். வானகரத்தில் இதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜுலை 23ம் தேதி கூட்டப்பட்டது. அப்போது ஓ பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிதாக எந்த தீர்மானமும் நிறைவேற்ற அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார். அத்துடன் பொதுக்குழு கூட்டத்திலும் இபிஎஸ் உடன் ஒபிஎஸ் பங்கேற்றார். அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டவுடன் எழுந்த அமைச்சர் சி.வி.சண்முகம், "பொதுக்குழுவின் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்" என ஆவேசமாக அறிவித்தார். ஓபிஎஸ்ஸுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து ஆவேசமாக முழக்கமிட்டனர். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதாலும் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர மீண்டும் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 கூடும் என அறிவிக்கப்பட்டது.

தற்காலிக பொதுச்செயலாளர்
இதனிடையே அதிமுக பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார் ஓ.பன்னீர்செல்வம். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அதிமுகவில் ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவுக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீர்ப்பு வழங்கினார்.

பொதுக்குழு செல்லும்
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்ததது. இதை விசாரித்த நீதியரசர்கள் துரைசாமி & சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை ரத்து செய்து செப்டம்பர் 2 தீர்ப்பளித்தது. இதனால், ஜுலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது எடப்பாடி அணிக்கு சாதகமாக அமைந்தது.

ஓபிஎஸ் முறையீடு
இதனிடையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான பி.வைரமுத்துவும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தலை நடத்தவும் தடை விதித்தது. எனினும் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இரட்டை இலை
இதனிடையே ஜூலை 11ஆம் தேதி தன்னைத் தற்காலிக பொதுச் செயலாளராக அ.தி.மு.கவின் பொதுக் குழு தேர்வு செய்துவிட்டதால் இரட்டை இலைச் சின்னத்தைத் தங்களுக்கே ஒதுக்க வேண்டுமென எடப்பாடி கே. பழனிசாமி கோரினார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவில் வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டது. இதன்படியே பொதுக்குழுவில் தென்னரசு வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அதனை தேர்தல் ஆணையத்தில் அதிமுக சமர்பித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்று தனது வேட்பாளரையும் ஓபிஎஸ் வாபஸ் பெற்றார். இதையடுத்து அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு கிடைத்தது.

மதிக்கவில்லை
இதனிடையே எடப்பாடி இரட்டை இலை சின்னம்,அதிமுக கட்சி என அனைத்திலும் முழு கட்டுப்பாட்டில் கொண்டு சென்ற நிலையில், தற்போது பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்கிறார்கள். இதற்கிடையே பாஜக ஆலோசனை படி வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ பன்னீர்செல்வத்தை எடப்பாடி தரப்பு ஏற்கவில்லை. அவரை மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது தர்மயுத்தம் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

தகுதியை இழந்துவிட்டார்
நேற்று ஓ பன்னீர்செல்வம் இதுபற்றி பேசும் போது, அதிமுகவில் தலைமைப் பதவியை தொண்டர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை எம்ஜிஆர் உருவாக்கி இருந்தார். அதை ஜெயலலிதா கட்டிக்காத்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தொண்டர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டவிதிகளை மாற்றி தலைமைப் பதவிக்கு வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை. அதற்கான தகுதியை அவர் (எடப்பாடி பழனிசாமி) இழந்துவிட்டார். அவரின் இந்த செயலை எதிர்த்துதான் தர்மயுத்தம் 2.0 தொடங்கி உள்ளோம்.

நமக்கு சாதகமாகும்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து நமது வேட்பாளரை திரும்பப் பெற்போம். இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம் என்றும் அறிவித்தோம். ஆனால் அவர்கள் உரிய மரியாதை கொடுக்கவில்லை. மனதில் கொடூர புத்தியுடன், இந்த இயக்கத்தை தனது இரும்பு பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் (எடப்பாடி) நினைக்கின்றார். அதை அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் உறுதியாக உடைத்தெறிந்துவிடுவார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் வாக்கு கேட்டு செல்லும்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. மார்ச் 2-ம் தேதி வாக்குஎண்ணிக்கையின்போது அது தெரியவரும். அதுவரை நாம் பொறுமையாக இருப்போம். விரைவில் அதிமுக பொதுக்குழு தொடர்பானவழக்கின் தீர்ப்பு வர உள்ளது. அது நமக்கு சாதகமாக அமையும் " என ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

தீர்ப்பு எப்படி வரும்
ஓ பன்னீர்செல்வத்தின் கடைசி நம்பிக்கையாக அதிமுக பொதுக்குழு வழக்கு இருக்கிறது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பெரிதும் நம்பியிருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். இதில் ஒரு வேளை தீர்ப்பு ஓபிஎஸ்க்கு எதிராக வந்தால் அடுத்து என்ன செய்வார் என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கிறது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு தீர்ப்பு எதிராக வந்தால், எடப்பாடி ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த தீர்ப்பு தான் அதிமுகவின் தலைமையை தீர்மானிக்கும் என்பதால் அதுகுறித்து எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்புக்கு பின் பாஜக நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.












Click it and Unblock the Notifications