எடப்பாடி கேட்ட கேள்வி.. பதிலளிக்காமல் மவுனம் காத்த செல்லூர் ராஜூ? மா.செ. கூட்டத்தில் நடந்தது என்ன?
சென்னை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 4-வது நாளாக மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அப்போது செல்லூர் ராஜூவிடம் சில கேள்விகள் கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலான லோக்சபா தேர்தலில் அக்கட்சி படு தோல்வியை சந்தித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியை தழுவின.

லோக்சபா தேர்தலில் சரியான கூட்டணி இல்லாதது.. கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாதது என பல காரணங்கள் அதிமுக வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.
இந்த கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்து வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி கூட்டணி விவகாரம், ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோனை நடத்தப்பட்டு வருகிறது.
சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கடந்த 10 ஆம் தேதி முதல் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இன்று சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகளுடன் சென்னையில் எடப்பாடி ஆலோசனை மேற்கோண்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் மதுரை லோக்சபா தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருந்தது. இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது முன்னாள் அமைச்சரும் மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜூவிடம் எடப்பாடி சில கேள்விகளை கேட்டதாக சொல்லப்படுகிறது.
அதாவது, மதுரையில் பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து கொடுத்தோம். கேட்கப்பட்ட எல்லா திட்டங்களும் செய்து கொடுத்த போதிலும், ஏன் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை. 3 வது இடத்திற்கு ஏன் சென்றது என்பது குறித்து செல்லூர் ராஜூவிடம் எடப்பாடி கேட்டதாக சொல்லப்படுகிறது. எடப்பாடியின் இந்த கேள்விக்கு செல்லூர் ராஜூ மற்றும் மதுரையை சேர்ந்த பிற மாவட்ட நிர்வாகிகள் பதில் எதுவும் அளிக்காமல் மவுனம் காத்ததாகவும் கூறப்படுகிறது.
மதுரை லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சி போட்டியிட்டது. அதிமுகவில் சரவணன், பாஜக கூட்டணியில் ஸ்ரீனிவாசனும் போட்டியிட்டனர். இதில் சு.வெங்கடேசன் 4,30,323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 2 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்குகளும், அதிமுகவின் சரவணன் 2 லட்சத்து 04 ஆயிரத்து 804 வாக்குகளும் பெற்றனர்.
நாம் தமிழர் கட்சி 92 ஆயிரத்து 879 வாக்குகள் பெற்றது. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் தான் இன்று நடைபெற்ற மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட நிர்வாகிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications