பாஜக வைத்த ‘டெஸ்ட்’.. எடப்பாடி போட்ட 2 கண்டிஷன்கள்.. அண்ணாமலை அட்டாக் பின்னணி இதானா? சொல்வது கேசிபி!
அதிமுகவின் முழு பலம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதை தற்போது பாஜக உணர்ந்துள்ளதாம்.
சென்னை : பாஜக வைத்த டெஸ்ட்டில் எடப்பாடி பழனிசாமியின் பலவீனம் தெரிந்துவிட்டது, ஈபிஎஸ் போடும் 2 கண்டிஷன்களை பாஜக ஏற்கத் தயாராக இல்லை, அதன் காரணமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்வாறு பேசியிருக்கிறார் எனக் கூறுகிறார் அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி.
அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்றால் நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு காரணம் என்ன, பாஜகவின் வியூகம் என்ன என்பது பற்றி கே.சி.பழனிசாமி பேசியுள்ளார்.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை வெகுவாக அப்செட் ஆனார். ஈபிஎஸ் தரப்பு உடனான அண்ணாமலையின் மோதல் உச்ச கட்டத்திற்கு சென்ற நிலையில் இரு கட்சியில் இருந்தும் சீனியர்கள் சிலர் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவும், அதிமுகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களை வெல்ல விரும்பும் பாஜக தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே சரியானது என்று கருதுகிறது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட பெரிய கூட்டணியை அமைப்பதே திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கான வியூகம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது.

வெடித்த அண்ணாமலை
ஆனால், சமீபத்திய மோதல்களின் காரணமாக அதிமுகவுடனான கூட்டணியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விரும்பவில்லை என்பது அவரது பேச்சின் மூலம் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. நேற்று மாலை நடந்த பாஜக நிர்வாகிகள் அவசர கூட்டத்தில் பேசும்போது, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் மாநில தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வேன், பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக கட்சிப் பணிகளை தொடர்வேன் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைப் பற்ற வைத்துள்ளது.

பாஜக வைத்த டெஸ்ட்
இந்த விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கூறுகையில், "அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு இன்று எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாஜகவின் ஆதரவினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அபகரிக்கிறார் என தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. ஈரோடு கிழக்கு தேர்தலிலேயே எடப்பாடி பழனிசாமியின் பலத்தை சோதித்துப் பார்த்தது பாஜக. அது அதிமுகவின் முழு பலம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை என்பதை தற்போது பாஜக உணர்ந்துள்ளது.

எடப்பாடி போடும் 2 கண்டிஷன்கள்
எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு 2 கண்டிஷன்களை வைப்பார். 1. எடப்பாடி பழனிசாமி தேர்தலின்போது பாஜகவுக்கு குறைவான சீட்களையே கொடுப்பார்.
2. தன்னோடு முரண்பட்ட யாரையும் கூட்டணியில் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற கண்டிஷனையும் போடுவார் எடப்பாடி பழனிசாமி.
என்னதான் வட மாநிலங்களில் 300 சீட்கள் வந்துவிடும், தமிழ்நாடே பாஜகவுக்கு தேவை இல்லை என்ற கருத்து சொல்லப்பட்டாலும், 40 சீட் உள்ள தமிழ்நாட்டில் மிக மோசமாக ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை என்ற பார்வை அகில இந்திய அளவில் குறிப்பாக தென் மாநிலங்களிலாவது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பாஜக திட்டம்
அதனால் தான் இங்கு வலிமையான கூட்டணியை அமைப்பதற்கு பாஜக விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமி + அவரோடு முரண்படும் அனைவரையும் ஓரணியில் திரட்டி, மற்ற கூட்டணி கட்சிகளோடும் இணைந்து ஒரு மெகா கூட்டணியை அமைக்க விரும்புகிறது பாஜக. இதற்கு எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை. அதேசமயம், சமீபகாலமாக பாஜகவில் நிலவி வரும் குழப்பங்கள், கட்சி தாவல்கள், தன்னை விமர்சித்தவர் எடப்பாடியுடன் சேர்ந்தது, சீனியர்கள் அதிருப்தி போன்றவற்றால் அண்ணாமலையும் பலவீனமடைந்துள்ளார்.

அண்ணாமலைக்கு பதிலாக
இதன் காரணமாகவே, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதை இப்படியே கொண்டு சென்று, தேர்தல் சமயத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை அமைப்பார்கள். அந்த நேரத்தில் அண்ணாமலையும் அதனை ஏற்றுக்கொள்வார். அல்லது எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி கூட்டணி அமைப்பார்கள். அப்படி நடந்து அதனை அண்ணாமலை ஏற்காவிட்டால் அண்ணாமலைக்கு வேறு ஏதாவது பொறுப்பு கொடுத்து அனுப்பிவிட்டு வேறு ஒரு தலைவரைக் கொண்டு வருவார்கள்.

டைவர்ஷன் வியூகம்
ஒரு அகில இந்திய கட்சியின் மாநில தலைவர், தேசிய தலைமையின் ஒப்புதல் இல்லாமல் எல்லாம் இதுபோல பேச முடியாது. தங்களுக்கான வாய்ப்புகளை தயார் செய்து கையில் வைத்திருக்கிறார்கள். இறுதியில் எந்த முடிவு பலன் அளிக்குமோ அதைத் தேர்வு செய்வார்கள். அந்தவகையில் தான் அண்ணாமலை இந்த விஷயத்தைப் பேசியிருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விவகாரத்தை விவாதப் பொருளாக விடாமல் செய்ய இது ஒரு டைவர்ஷன் வியூகமாகக் கூட இருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications