ஒன்னு கூடிட்டாங்க! ஒடிசாவை தமிழர் ஆள கூடாதா? கலிங்கத்துபரணி..அமித் ஷாவை போட்டு தாக்கும் திமுக-அதிமுக
சென்னை: ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருந்த நிலையில், திமுக - அதிமுக நிர்வாகிகள் ஒன்றாக சேர்ந்து அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். மேலும் தோல்வி பயத்தில் அமித் ஷா கடைசி நேரத்தில் இனவாத அரசியல் பேசி வருவதாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை சாவி தமிழகத்தில் இருக்கிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியனை மறைமுகமாக தாக்கி பிரதமர் நரேந்திர மோடி பேசிய நிலையில், தற்போது ஒடிசாவை ஒரு தமிழர் ஆள அனுமதிக்கலாமா? என மத்திய அமைச்சர் அமித் ஷா பிரச்சாரத்தின் போது கேள்வி எழுப்பினார்.

ஒடிசா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும் நிலையில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. அடுத்தடுத்து மூன்றாவது நான்காவது கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.
விகே பாண்டியன்: இதற்காக அங்கு பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இரண்டு வாரங்களில் மூன்று முறை அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார். பாஜக சார்பில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் அங்கே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசாவைப் பொறுத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முதலமைச்சர் நவீன் பட்நாயக்-க்கு நெருக்கமானவருமான விகே பாண்டியனை தான் அதிகம் விமர்சித்து வருகின்றனர் பாஜகவினர்.
அமித் ஷா விமர்சனம்: பூரி ஜெகநாதர் கோவிலில் பொக்கிஷ அறை சாவிகள் காணாமல் போய்விட்டது. அந்த சாவி தற்போது தமிழகத்தில் இருப்பதாக சிகே பாண்டியனை மறைமுகமாகக் குறிப்பிட்டு பிரதமர் பேசிய நிலையில், மீண்டும் விகே பாண்டியனை விமர்சித்து பேசினார் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா. நேற்று கெண்டுஜார் பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,"ஒடிசா மாநிலத்தை ஒரு தமிழர் ஆளலாமா மாநில அரசை ஒரு தமிழர் வழிநடத்தலாமா? என பேசினார்.

சிடிஆர் நிர்மல் குமார்: மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தோல்வி பயத்தில் அமித் ஷா தேர்தல் நேரத்தில் இனவாத அரசியல் பேசுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் அதிமுகவினரும் பாஜகவினரும் ஒன்றாக இணைந்து அமித் ஷாவை விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக நிர்வாகியான சிடிஆர் நிர்மல்குமார்,"தமிழ் பெண் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருக்கும்போது, ஒரு இந்தியர் இங்கிலாந்து ஆளும்போது, ஏன் ஒரு தமிழன் ஒடிசாவை ஆளக்கூடாதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜ் சத்யன்: இதே போல் அதிமுக ஐடி விங் செயலாளரான ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள பதிவில்,"உலகையே ஆண்ட தமிழர்கள், வங்கக்கடலையே ஏரியாகப் பயன்படுத்திய இனத்தில் ஒருவர், ஓடிசாவையும் ஆண்டால் தான் என்ன தவறு ? அமித் ஷா அவர்களே.. குஜராத்தில் இருந்து வந்த தாங்கள் இந்தியாவை ஆளும் போது, ஒரு தமிழர் ஓடிசாவை ஆண்டால் என்ன? இரட்டை நிலைப்பாட்டில் திமுகவும் பாஜகவும் வெவ்வேறு இல்லை என்பது மணிக்கு ஒருமுறை நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை என்றால் இத்தகைய கருத்துகளைப் பேசியிருப்பீர்களா? எங்கள் மதுரை மண்ணில் பிறந்து வளர்ந்த வி.கே. பாண்டியன் அவர்கள், ஏதோ இன்று நேற்று ஓடிசாவில் இறக்குமதி செய்யப்பட்டவர் அல்ல. 30 ஆண்டுகளாக ஓடிசாவில் வாழ்ந்து, பணிபுரிந்து, பல்வேறு சாதனைகளைப் புரிந்து, அம்மாநில வளர்ச்சியின் முக்கிய தளகர்த்தராக திகழ்பவர்." என பதிவிட்டுள்ளார்.

திமுக விமர்சனம்: இதேபோல திமுகவினர் பலரும்,"ஒரிசாவை தமிழன் ஆளலாமா? என்று பேசி மாநில உணர்வுகளை தூண்டி விட்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார் அமித் ஷா, அவருக்கு வரலாறு தெரியாது. இன்றைய ஒரிசா அன்றைய கலிங்கத்தை ஆண்ட சோழன் என்கிற தமிழன்.. அதற்கு சான்றாக இன்றளவும் கலிங்கத்துப்பரணி காவிய இலக்கணம் உள்ளது. அதுமட்டுமின்றி கீழை சாளுக்கியர்களாகிய ஒரிசா அரசனுக்கு சோழன் தன் மகளை மணமுடித்து இங்கு ஆண் வாரிசு இல்லாததால் தமிழகத்தையும் ஆண்டவர்கள் தான் அன்றைய கலிங்க தேசத்து குழோத்துங்க சோழன். தமிழனை கலிங்கன் ஆள்வதும் கலிங்கனை தமிழன் ஆள்வதும் எங்கள் சகோதரத்துவம்." என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications