சென்னையின் 4வது ரயில் முனையம்.. உள்ளே வந்த பெரம்பூர்.. கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. என்ன காரணம்!
சென்னை: சென்னையில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 4ஆவது முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் இப்போது கடைசி நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது. வில்லிவாக்கத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் 4ஆவது முனையம் அமைக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரைச் சென்னை சென்ட்ரல் தான் மிகவும் முக்கியமான ரயில் முனையமாகப் பல காலமாக இருந்து வருகிறது. இங்கு நிலவும் கூட்ட நெரிசலைச் சமாளிக்க எழும்பூரில் 2ஆவது முனையமும், தாம்பரத்தில் 3ஆவது முனையமும் உருவாக்கப்பட்டது.

ரயில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேவையைச் சமாளிக்க 4ஆவது முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் இப்போது கடைசி நேரத்தில் மாற்றம் நடந்துள்ளது.
வில்லிவாக்கம் ரயில் முனையம்: சென்னையின் நான்காவது ரயில் முனையம் வில்லிவாக்கத்தில் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், அது இப்போது பெரம்பூருக்கு மாற்றப்படுகிறது. தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். வில்லிவாக்கத்தில் திட்டமிடப்பட்டு இருந்த நான்காவது முனையம் திடீரென பெரம்பலூருக்கு மாற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி அனைவருக்கும் எழும். இது குறித்தும் அவர் விளக்கமளித்துள்ளார்.
என்ன காரணம்: வில்லிவாக்கத்தில் ரயில்வே முனையம் அமைக்கும் அளவுக்குத் தேவையான நிலம் கிடைக்கவில்லை என்பதாலேயே இத்திட்டம் பெரம்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெரம்பூரில் போதுமான நிலம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இதற்கான இறுதி திட்டம் இப்போது தயார் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் இருந்து காணொலி வாயிலாகச் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அது 2024-25 நிதியாண்டில் ரூ.6,362 கோடியாக உயர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது உட்பட ரூ. 33,467 கோடி மதிப்பிலான வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்..
மேலும் பொதுமக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 2,500 புதிய ஜெனரல் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் வகையில் எதிர்காலத்தில் கூடுதலாக 5,000 பெட்டிகளைச் சேர்க்கவும் ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம்: பெரம்பூர் மற்றும் அம்பத்தூர் இடையே இரண்டு கூடுதல் பாதைகள் அமைக்கும் திட்டம் மேற்கொண்டு வருவதாகத் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்தார். இது முடிந்த உடன் சென்னையின் நான்காவது முனையத்திற்கான முன்மொழிவு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் ஆர் என் சிங் தெரிவித்தார். கிளாம்பாக்கம் ஸ்டேஷன் திட்டக் கட்டுமானத்தில் இருக்கும் கட்டுமான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அது அக்டோபர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆர் என் சிங் உறுதியளித்தார்.
தாம்பரம் ரயில் நிலையம்: சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரம் இப்போது மறுசீரமைக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாகவும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பிபிபி எனப்படும் அரசு- தனியார் இணைந்து தாம்பரம் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், இத்திட்டம் நிறைவடையக் கொஞ்சக் காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 40 இடங்களில் ரயில் மேல் பாலங்கள் அமைக்கும் பணியை முடித்துவிட்டதாகவும், ஆனால் மாநில அரசு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்களால் அவை அப்படியே நின்று இருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications