தெய்வச்செயல்னு பேரு வெச்சிக்கிட்டு பண்றதுலாம் பாவச்செயல்.. திமுகவிலிருந்து ஏன் தூக்கல? அதிமுக சாடல்
ராணிப்பேட்டை: அரக்கோணம் பாலியல் சம்பவத்தில் புகாருக்கு உள்ளான திமுக பிரமுகர் தெய்வச்செயல், கட்சியில் இருந்து நீக்கப்படாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார். அரக்கோணம் பாலியல் சம்பவத்தை கண்டித்து அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், தெய்வச்செயல் என்று பெயர் வைத்து கொண்டு திமுக பிரமுகர் பாவச்செயலை செய்திருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக பிரமுகர் தெய்வச்செயல் என்பவர் மீது திருமண மோசடி மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெண்களை தாரைவார்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் மீது பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும், போலீசார் தரப்பில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவரிடம் ஸ்டேட்மெண்ட் பெற்று கொண்ட போலீசார், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க தாமதித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து அரக்கோணம் பாலியல் புகாரை விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிடம் 3 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கோரி இருக்கிறது.
அதேபோல் ராணிப்பேட்டை திமுக இளைஞரணி பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அரக்கோணம் பாலியல் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரியும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு முறையான அனுமதி அளிக்கப்படவில்லை.
அதனை மீறி 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து வளர்மதி பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை அதிமுக சிபிஐ வசம் ஒப்படைத்தது. அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட காரணத்தால்தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் அதிமுக ஆட்சி வந்தபின் அரக்கோணம் பாலியல் சம்பவம் தொடர்பாகவும் விசாரிக்கப்படும். இந்த பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பவரின் பெயர் தெய்வச்செயல். ஆனால் செய்வது எல்லாமே பாவச்செயல். அந்த பாவச்செயலை செய்தவர் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்த உடன், அவர் திமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
திமுகவிடம் ஒன்றை கேட்க விரும்புகிறேன்.. புகாருக்கு உள்ளான தெய்வச்செயலை பதவியில் இருந்து நீக்கிய நீங்கள், இன்னும் கட்சியில் இருந்து நீக்காமல் வைத்திருப்பது ஏன்? அப்போ கட்சியில் குற்றவாளிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இதனை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கிறாரா? கட்சியில் இருந்து நீக்காமல், பாதுகாப்பு அளித்து வருகிறது திமுக. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் திமுகவினர் கைது செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications