வில்சனின் "விசுவாசம்".. வில்லங்க கடிதம்.. திமுகவுக்கு கிறிஸ்தவ நிதி?.. சுருக்னு கேட்டது யார் யாருங்க
சென்னை: திமுக எம்பி வில்சன், தன்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கும் உண்மையாக இல்லை... தான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் உண்மையாக இல்லை என்று இந்து முன்னணி கொந்தளித்துள்ளது.
சமீபத்தில் 2500 மத அடிப்படையிலான என்ஜிஓக்களின் FCRA உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது.. இதில், மொத்தம் 1600 கிறிஸ்தவ மற்றும் தேவாலய அடிப்படையிலான அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடிதம்: இது தொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை மறுசீரமைக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்றை தந்திருக்கிறார்.
அந்த கடிதத்தில், "உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, 2500க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான என்ஜிஓ-க்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1600 கிறிஸ்தவ மற்றும் தேவாலய அடிப்படையிலான அமைப்புகளாகும். இந்த ரத்து, வேண்டுமென்றே சிறுபான்மை மத அடிப்படையில் இயங்கும் என்ஜிஓ-க்களை குறிவைத்ததை போல இருக்கிறது. அதனால், இதுபோன்று உரிமங்கள் ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
ஜனநாயக கொள்கை: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010 மற்றும் அதன் விதிகளை சர்வதேச தரத்துடன் சீரமைத்து அவற்றை முழுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டும். இப்படி செய்வது, நமது தேசம் போற்றும் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்தும். மட்டுமல்லாது நமது சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் தொண்டு நடவடிக்கைகளுக்கு அரசு சாரா நிறுவனங்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் பாதுகாக்கும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், வில்சனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது இந்து முன்னணி.. அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இது தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்.
வில்சன்: அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: "திமுக எம்பி வில்சன், கிறிஸ்துவ மிஷனரிகளுக்கு வரும் வெளிநாட்டு நிதி உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதை, அவர் மக்கள் நலனுக்காக செய்யவில்லை. அவர் எழுதிய கடிதம், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக வரும் வெளிநாட்டு உதவியை கோருவதாகும். தமிழர்கள் தந்த எம்பி பதவி என்ற அங்கீகாரத்தை, வெட்கமின்றி இவருடைய மத விசுவாசத்துக்கு பயன்படுத்துகிறார்.
வெளிநாட்டில் நிதிக்கு உரிய கணக்கு காட்டாமல் இருக்கும் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது தெரிந்தும், இப்படி கடிதம் எழுதுகிறார். அரசின் உபயோகத்துக்கு இந்து கோவில் நிலங்களை அபகரிக்கும் தமிழக அரசு, மற்ற மதத்தின் ஆலய இடங்களை அப்படி அபகரிப்பதில்லையே ஏன்?
விசுவாசம்: எம்.பி.,யின் விசுவாசத்துக்கு, இரு காரணங்களில் ஒன்று, தேர்தல் நெருங்கும் நேரம், மத்திய அரசு, கிறிஸ்துவர்களுக்கு எதிராக இருக்கிறது என்ற தோற்றத்தை அழுத்தமாக பதிவு செய்யும் முயற்சியாகும். இரண்டாவது, திமுகவுக்கு தேர்தலில் செலவு செய்ய, அக்கட்சியினர் வெளிநாட்டில் பதுக்கியுள்ள நிதி, கிறிஸ்துவ நிறுவனங்கள் மூலம் சேவை நிதி என்ற பெயரில் தமிழகத்துக்குள் வருவது தடைபடுகிறது என்பது.
இதை உளவுத்துறை கண்டுபிடிக்க வேண்டும். வில்சன் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லை. வரும் தேர்தலில், இப்படிப்பட்டவர்கள் சார்ந்துள்ள கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications