பழைய ஐஏஎஸ்ஸை இறக்கிய ஸ்டாலின்.. எடப்பாடி காதுக்கு போன தகவல்.. உடனே வந்த லீகல் டீம்.. நொறுங்குதே
சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை சமீபத்தில் நியமித்தது திமுக அரசு. அப்போதே இந்த நியமனம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் புலம்பினர். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளும் எடப்பாடியிடம் இது பற்றி சில விபரங்களைத் தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிமுகவின் சீனியர் வழக்கறிஞர்களிடம் இந்த நியமனம் குறித்து சீரியசாக விவாதித்தார் எடப்பாடி. இந்த நிலையில், நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடுப்பது என முடிவானது. அதனடிப்படையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை.

அந்த மனுவில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவர் பதவிக்கான நியமனம் தொடர்பாக முறையான விதிகள் இல்லை. ஆனால் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணாக சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் தற்போது இருக்கும் நிலையில், ஓய்வு பெற்ற டிஜிபியை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயல்.
மேலும், வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் திடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு அந்த இடத்தில் சுனில் குமாரை நியமித்துள்ளனர். ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற அதிகாரியை நியமித்திருப்பதால், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் மேற்கொள்ளப்படும் நியமனங்களில் முறைகேடுகள் எதுவும் நிகழும்பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சுனில்குமார் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கடந்த காலங்களில் செயல்பட்டவர். அதற்கு பிரதிபலனாகவே தற்போது அவருக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இடைக்கால நிவாரணமாக,
ஆணையத்தின் தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும்"என்று மனுவில் கேட்கப்பட்டுள்ளது.
இன்னொரு அதிகாரி: தமிழ்நாட்டில் முக்கியமான பொறுப்பு ஒன்றிற்கு அதிகாரி ஒருவரை நியமிக்க ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறாராம். ஆனால் இந்த விவகாரத்தில் எடப்பாடியும் தலையிட வேண்டி உள்ளதால் விவகாரம் சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறதாம்.
தமிழக லோக் ஆயுக்தா அமைப்பின் முழு நேர தலைவர் பதவி நீண்ட மாதங்களாக காலியாக இருக்கிறது. முழு நேர தலைவரை தேர்வு செய்வது குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தாத நிலையில், பொறுப்பு சேர்மனாக இருந்து வருகிறார் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினருமான ராஜாராம்.
இந்த அமைப்புக்கு முழு நேர தலைவர் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் மெல்ல சர்ச்சையாகி வருவதால், தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 16-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடத்த திமுக முடிவு செய்திருந்தது.
சிக்கல்: தலைவரை தேர்வு செய்வதற்கான கமிட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருக்கின்றனர். இந்த கமிட்டியின் கூட்டம் தான் 16-ந்தேதி நடப்பதாக இருந்தது. ஆனால், 16-ந்தேதி காலையில் இந்த கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான காரணத்தை அறிய கோட்டை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழலைத் தெரிவித்திருக்கிறார். அதனால் ஆலோசனைக் கூட்டத்தை தள்ளிவைக்க முதல்வர் கோரியதால், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு விட்டது " என்கிறார்கள்.
முழு நேர தலைவர் ஒருவரை தேர்வு செய்யப்படும் வரை இந்த அமைப்பின் பொறுப்பு சேர்மனாக ராஜாராமே தொடர்வார் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications