தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு ஏன்? காரணம் விளக்கி 7 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி எழுதிய கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சித்திரை முதல் நாளுக்கு பதில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கருணாநிதி முழங்கியதற்கான காரணத்தை, 2015-ம் ஆண்டு திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

பல வரலாற்று தகவல்களை உள்ளடக்கிய வகையில் அவர் அந்த கடிதத்தை தீட்டியிருக்கிறார்.

அந்தக் கடிதம் எழுதப்பட்டு 7 ஆண்டுகள் ஆகினும், அவர் மறைந்து நான்காண்டுகள் ஆகினும் அதன் விவரம் வருமாறு;

கருணாநிதி கடிதம்

கருணாநிதி கடிதம்

9-1-2015 அன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் நடைபெற்ற தேர்தலில் ஒரு மனதாக வெற்றி பெற்ற என்னையும், பேராசிரியரையும், பொருளாளரையும் பாராட்டிச் சிறப்புத் தீர்மானம் ஒன்றும், மத்திய அரசைக் கண்டித்து ஒரு தீர்மானமும், மாநில அரசைக் கண்டித்து மற்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதோடு, மூன்றாவதாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, ஏடுகளில் அந்தத் தீர்மானம் வெளி வந்திருப்பதைக் கண்டிருப்பாய். அந்தத் தீர்மானம் தான், பொங்கல் திருநாளை - தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர்கள் உள்ளம் தோறும் உவகைப் பெருக்குடன் இல்லந்தோறும் இன எழுச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதாகும்.

 37 ஆண்டுகள்

37 ஆண்டுகள்

23-1-2008 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் - தி.மு. கழக ஆட்சியில் - மேதகு ஆளுநரும், எனது இனிய நண்பருமான திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையில், தமிழர்களுக்கென்று ஒரு "தனி ஆண்டு" தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே "தமிழ் ஆண்டு" எனக் கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்று பெரும் புலவரும் தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில் முடிவெடுத்தார்கள் என்றும் அந்தக் கருத்தினை, 37 ஆண்டுகளுக்கு முன்பே, ஏற்றுக் கொண்டு, 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பிக்கப்படது.

3 முடிவுகள்

3 முடிவுகள்

மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தப் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவுகள் மூன்று :-

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது;

2. அதனையே தமிழாண்டு எனக் கொண்டாடுவது;

3. வழக்கத்தில் திருவள்ளுவர் காலம் கி.மு. 31ஐக் கூட்டினால் திருவள்ளுவராண்டு வரும் என்பதனை மேற்கொள்வது என்பனவாகும்.

தமிழர் மாநாடு

தமிழர் மாநாடு

அதன் பிறகு 1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி. இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் கூறியது.

 மறுமலர்ச்சி அத்தியாயம்

மறுமலர்ச்சி அத்தியாயம்

தி.மு. கழக அரசின் அறிவிப்புகண்டு, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ, "தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பொன்னம்பல அடிகளார்

பொன்னம்பல அடிகளார்

ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே அதாவது 24-1-2008 அன்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில், "தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும், விவசாய வாழ்வு சார்ந்தும் தைத்திங்கள் முதல் திருநாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்" என்று தெரிவித்திருந்தார்.

வைரமுத்து அறிக்கை

வைரமுத்து அறிக்கை

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், "தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடு கிறார்கள். எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு. தமிழர் களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடையாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துலகத்தின் அளவு கோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும்" என்று எழுதியிருந்தார்.

மலேசியா தமிழர்கள்

மலேசியா தமிழர்கள்

மலேசியா நாட்டில் தமிழர்கள் தற்போது தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகி றார்கள். டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், "முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்" என்று விளக்கியுள்ளார்.

பெரு மகிழ்ச்சி

பெரு மகிழ்ச்சி

தி.மு. கழக ஆட்சியில் செந்தமிழரெல்லாம் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்ளத்தக்க வகையில் செய்யப்பட்ட அறிவிப்பாக, ஆளுநர் பர்னாலா அவர்களின் அறிவிப்பு கருதப்பட்டு, தமிழ் மக்கள் எல்லாம் அந்த ஆண்டு பொங்கல் விழாவினை எப்போதும் இல்லாத வகையில் தமிழ்ப் புத்தாண் டாகக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அ.தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதாவுக்கு!

2011ஆம் ஆண்டு

2011ஆம் ஆண்டு

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக எப்படியெல்லாம் கழக ஆட்சியிலே கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்த முற்பட்டாரோ, அப்படியே தமிழின அடையாளத்தைக் காட்டும் இந்த அறிவிப்புக்கும் மூடு விழா நடத்திட ஏற்பாடுகளை அவசர அவசரமாகச் செய்தார். தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 23-8-2011 அன்று பேரவையில் கூறும்போது, "தமிழ்ப் புத்தாண்டை தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங் குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண் படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது" என்றார்.

என்ன தவறு?

என்ன தவறு?

தமிழக அரசின் அறிவிப்பு வந்த நேரத்திலேயே மிகச் சிறந்த தமிழ்க் கல்வெட்டு ஆய்வாளரும் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் அவர்கள், "இன்றைய பஞ்சாங்கங்களை வான நூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் - ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு?" என்றார்.

சட்ட மசோதா

சட்ட மசோதா

தி.மு. கழக ஆட்சியில் ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று 2008ஆம் ஆண்டு 'தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டுச் சட்ட முன் வடிவை' பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன். 1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ். ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என். நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை. சிவபுண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் அப்போது அங்கேயிருந்த மு. கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு. செல்வமும் அந்த மசோதாவினை வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.

அவசர அவசரமாக

அவசர அவசரமாக

இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக ஜெயலலிதா ஆட்சியிலே அது மாற்றப்பட்டு விட்டது. அவரது அந்த அறிவிப்பினை பா.ஜ.க. அப்போதே அவசர அவசரமாக வரவேற்றது.

தமிழ் உணர்வு

தமிழ் உணர்வு

அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவினால் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவை அவையிலே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்தன என்ற தகவலை செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து, அதுபற்றி கருத்துக் கேட்ட போது, "கம்யூனிஸ்ட்களின் தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்" என்று அப்போதே பதில் கூறினேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கையில், அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்து விடும் என்றும் தெரிவித்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மையாகக் கண்டித்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித் தார். அவர்களுடைய அந்தத் தமிழ் உணர்வுக்கு நான் அப்போதே நன்றி தெரிவித்திருக்கிறேன். இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே,
"நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே

அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணியாண்ட தமிழருக்கு

தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!"

என்று பாடியதையும் நினைவு கூற விரும்புகிறேன்''.

தை முதல் நாள்

தை முதல் நாள்

வெளிநாட்டிலே வாழும் தமிழர்கள் கூட இந்த உண்மையைப் புரிந்து கொண்டு; தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழர் களின் திருநாள், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் என்று உறுதி செய்து கொண்டு, கொண்டாடுகிறார்கள். எனவே அ.தி.மு.க. அரசு அதை ஒப்புக் கொள்கிறதோ இல்லையோ, அதைப் பற்றிக் கவலைப்படாமல், தைத் திங்கள் முதல் நாளை, தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டின் துவக்கமாகச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிட தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தை முதல் நாளே; தமிழர் புத்தாண்டுத் திருநாள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+