1000 ரூபாய் எங்களுக்கும் கிடைக்குமே.. ரேஷன் கார்டு விஷயத்தில் சத்தம் இல்லாமல் நடக்கும் மாற்றம்!
சென்னை: 1000 ரூபாய் மாதம் மாதம் குடும்ப தலைவிகளுக்கு தரப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்ட நிலையில், அதற்கு இன்னமும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதிய ரேஷன் கார்டு கிடைத்தால் தங்களுக்கும் மாதம் ஆயிரம் உதவி தொகை என்ற எதிர்பார்ப்பால் கூட்டுக்குடும்பமாக ரேஷன் கார்டை பிரிக்காமல் வாழ்ந்த பலரும், பெயரை நீக்கி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தின் படி2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் இருந்தன. திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை சுமார் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாதம் ஆயிரம் உதவி தொகை குடும்ப தலைவகளுக்கு வழங்கப்படும் என்று ஆட்சிக்கு வரும் போதே திமுக அரசு அறிவித்திருந்தால், இதுவரை ரேஷன் கார்டு பெறாமல் இருந்த மக்கள் பலரும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தொடங்கினர்.
தற்போதைய நிலையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலரும் அரசின் திட்டத்தால் பயன் பெற உள்ளார்கள் இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது,
இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. அரசு அறிவித்துள்ள 1000 உதவி தொகை திட்டம் தொடங்க இன்னும் 3 மாதங்களே உள்ளதால் விண்ணப்பிக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தற்போதைய நிலையில் ஒரே வீட்டில் வசிப்பவர் தாய்-தந்தை பெயரில் ஒரு கார்டும், மகன்-மருமகள் பெயரில் ஒரு கார்டு கேட்டும் விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது. இத்தனை நாட்களாக கூட்டுக் குடும்பாக இருந்தவர்கள் பலரும் ரேஷன் கார்டில் பெயரை நீக்கி தனித்தனி கார்டு வாங்குவதற்காக தாசில்தார் அலுவலகங்களுக்கு சென்று வருகிறார்கள்.
இதையடுத்து அரசு அதிகாரிகளும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளனர். ரேஷன் கார்டு தனியாக பெற வேண்டும் எனில், தனித்தனி வீட்டில் இருக்க வேண்டும். சமயலறைகள் தனியாக இருக்க வேண்டும். அதற்கு கேஸ் சிலிண்டர்கள் தனியாக வேறு வேறு பெயரில் இருக்க வேண்டும்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஆண் அல்லது பெண் பெயரில் சிலிண்டர் இருக்க வேண்டும், அத்துடன் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்றால் பழைய கார்டில் இருந்து மணமகன், மணமகன் ஆகியோரி பெயரை நீக்கி விட்டு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது திருமண பத்திரிகைகளையும் இணைக்க வேண்டும். இவை அனைத்தையும் சரிபார்த்த பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்கிறார்கள். ஒரே நேரத்தில் பலரும் விண்ணப்பித்துள்ளார்கள்.
சிலர் தாய் தந்தையருக்கு தனி கார்டு கேட்டு தற்போது விண்ணப்பிப்பது நடக்கிறது. வயதானவர்கள், கூலி வேலை செய்கிறார்கள். அவர்கள் பெயரில் தனியாக ரேஷன் கார்டு இருந்தால் எளிதாக 1000 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எண்ணி, தனி ரேஷன் கார்டு வயதானவர்களின் பெயரில் விண்ணப்பிப்பது நடக்கிறது.
இதையடுத்து அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு சென்று தனி வீடு உள்ளதா அல்லது தனிதனி குடியிருப்புபோல் உள்ளதா, சமையல் அறைகள் தனியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து புதிய ரேஷன் கார்டு தருவது குறித்து முடிவு செய்கிறார்கள். இதனிடையே புதிய சமையல் எரிவாயு கணெக்சனுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications