தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் அறிவித்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் திடீரென்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகியதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் உறுதி செய்துள்ளார்.
ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் சென்னையில் இன்று தமாகவின் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதுபற்றி ஜிகே வாசன் கூறியதாவது:
''வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ரீதியாக வெல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்கு தற்போது என்ன தேவை? என்பதற்காக தான் இன்று கூட்டம் நடந்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளுடன் எந்த கருத்து வேறுபாட்டையும் வைத்தது கிடையாது. கூட்டணி கட்சிகளுடன் சண்டைகள் கிடையாது. சச்சரவுகள் கிடையாது.
இதற்கு காரணம் எந்த கட்சியாக இருந்தாலும், கூட்டணியாக இருந்தாலும் கூட அதில் பல சவால்கள் இருப்பதை நாங்கள் அறிவோம். கூடுதல் இடங்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். கேட்ட இடங்கள் கிடைக்காமல் போய் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழகத்தில் ஒரு கட்சி கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்ட கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.
பல்வேறு தொண்டர்கள், பொறுப்பாளர்களை தாண்டி கூட்டணி சவால்களை தாண்டி கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று இந்த தேர்தலில் பணியாற்றியதை நினைவுக்கூற விரும்புகிறேன். தற்போது பாஜக, அதிமுக அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளோடு எங்களுக்கு எந்த சண்டையும் கிடையாது. நட்பு கட்சியாகவே அவர்களுடன் செயல்பட்டு வருகிறோம் என்பதோடு, இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கூட்டத்தில் கருத்துகள் கூறப்பட்டது.
சுமார் 600 பேர் கலந்து கொண்ட இன்றைய கூட்டத்தில் சுமார் 450 பேர் தங்களின் கருத்துகளை எழுத்து பூர்வமாகவும், நேரடியாகவும் பதிவு செய்தனர். அவர்கள் அத்தனை பேரின் எண்ணமும், உள்ளாட்சி தேர்தல் வரும் வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பது தான். தனித்தன்மையோடு செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.
கூட்டணியில் பொறுப்பாளர்களுக்கான பொறுப்புகள் குறைவதாக கருதுகிறாரகள். கூட்டணியில் இயக்கத்தின் வளர்ச்சி தற்போது குறைவதாக கருதுகிறார்கள். தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. அப்போது தான் அனைத்து கட்சிகளுக்கும் வலு. தேர்தல் இல்லாத நேரத்தில் மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் தங்களது இயக்க பணிகளை பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். அதற்கு தனித்தன்மையோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
அதனடிப்படையில் என்டிஏ கூட்டணி மத்தியிலேயே பாஜக... மாநிலத்திலேயே அதிமுக.. மற்றும் ஒத்த கருத்துடைய கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நட்பு கட்சியாகவே விளங்குகிறது. வரும் காலத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தன்னை வலுப்படுத்தி கொள்வதற்கு நகரம் முதல் கிராமம் வரை எங்களின் பணியை தொடங்குவோம்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக கூட்டணியிலேயே இருந்ததால் எங்களின் வலு குறைந்ததாகவே கருதுகிறோம். காரணம், கூட்டணி கட்சிகள் அது சார்ந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தனித்தன்மையை நாங்கள் இழக்க விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம். அதுவரை எங்களின் கட்சியை வலுப்படுத்தும் முடிவை எடுக்க வேண்டும் என்று இந்த செயற்குழு எடுத்துள்ளது'' என்றார்.
அதாவது பாஜக கூட்டணியில் இருப்பதால் தேர்தல் சமயத்தில் குறைந்த சீட்டுகளில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதால் கட்சியை வளர்க்க முடியவில்லை என்று ஜிகே வாசன் நினைக்கிறார். இதனால் கூட்டணி கட்சிகளின் தயவில் தான் தமாக செயல்பட வேண்டி உள்ளது. இதனால் தேர்தல் இல்லாத சமயமான இப்போது கட்சியை வளர்க்கும் வகையில் கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications