கடுகடு முகத்தோடு போன ஓபிஎஸ்! பின்னாடியே போன 2 கார்.. உள்ளே 3 பேர்! இரவோடு இரவாக நடந்த அந்த சம்பவம்
சென்னை: அதிமுக கூட்டத்தில் நேற்று பெரிய மோதல் ஏற்பட்ட நிலையில்.. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடுகடுத்த முகத்தோடு வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அவர் வீட்டிற்கு போன பின் நடந்த சம்பவம்தான் தமிழ்நாடு அரசியல் உலகில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாக்களில் நாம் எதிர்பார்த்து காத்திருக்கும் சஸ்பென்ஸ்களை expected suspence என்று அழைப்பார்கள். அதாவது இப்படி ஒரு சஸ்பென்ஸ் வர போகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.. ஆனாலும் அந்த சஸ்பென்ஸ் வரும் போது.. உடல் மெய் சிலிர்க்கும்.. தியேட்டரில் விசில் பறக்கும்.
உதாரணமாக விக்ரம் படத்தில் விக்ரம் மாஸ்க்கை கழற்றும் இண்டர்வல் காட்சி! அப்படி ஒரு எதிர்பார்த்த சஸ்பென்ஸ்தான் நேற்று அதிமுக கூட்டத்தில் நடந்து இருக்கிறது. ஆம்.. இதுதான் நடக்க போகிறது என்று எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும் பல மசாலாக்களோடு சுவாரசியமாக நேற்று சில சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.

அதிமுக கூட்டம்
சென்னை அதிமுக ராயப்பேட்டை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. 23ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் குறித்து ஆலோசிக்கத்தான் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதை பற்றி விவாதிக்கவே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பைபாஸில் தாறுமாறாக ஓடும் பிரைவேட் பஸ் போல.. அதிமுக கூட்டம் திசை மாறி சென்று இருக்கிறது. எடப்பாடி ஆதரவாளர்கள்தான் முதலில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே ஒற்றை தலைமை என்று கோஷம் எழுப்பி உள்ளனர்.

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமை எடப்பாடி என்று கோஷம் எழுப்பி உள்ளனர். அதற்கு பதிலடியாக வெளியே ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷங்களை எழுப்பி உள்ளனர். இந்த கோஷம் உள்ளே மீட்டிங் ஹாலில் கேட்க.. உள்ளேயும் சாமி ஆடிய பூசாரியை பார்த்து சாமி ஆடும் பெண்கள் போல.. உள்ளேயும் கோஷம் பரவி இருக்கிறது. முதலில் எடப்பாடிக்கு ஆதரவான "மணியான" குழுதான் ஒற்றை தலைமை பற்றி வெளிப்படையாக பேச தொடங்கி உள்ளனர்.

ஒற்றை தலைமை
கட்சிக்கு ஒற்றை தலைமை அவசியம் தேவை. இல்லையென்றால் 2024 தேர்தலில் சமாளிக்க முடியாது. இப்போதே நாம் எதிர்க்கட்சி இல்லை என்று பலர் நாக்கு மேல் பல்லை போட்டு பேசுகிறார்கள். பாஜகவில், அதிமுகவில் இரண்டு தலைமை இருக்கிறதா? மதிமுக, பாமக கூட மாற்றத்திற்கு ரெடியாகிவிட்டது. ஆனால் நாம் மட்டும் இரண்டு டிரைவரை வைத்துக்கொண்டு நீண்ட தூரம் செல்ல முடியாது.. அதனால் எடப்பாடியை டிரைவர் சீட்டில் உட்கார வையுங்கள் என்று எடப்பாடி தரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து இருக்கிறது.

ஓபிஎஸ் கொதிப்பு
இதற்கு ஓபிஎஸ் தரப்பு சும்மா இருக்குமா.. ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்தான் அப்படி என்றால் தலைமை ஏற்க வேண்டும். ஜெயலலிதா நம்பியே ஒரே தலைவர் ஓபிஎஸ்தான். ஜெயலலிதா இல்லாத நேரங்களில் எல்லாம் கட்சியை காத்தது யார்? ஓபிஎஸ்! ஜெயலலிதா சிறைக்கு போனால் முதல்வர் ஆவது யார்? ஓபிஎஸ்! ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது ஆட்சியை கவனித்தது யார்? ஓபிஎஸ்! இரட்டை இலையை மீட்டது யார்? ஓபிஎஸ்! அப்போது அவர்தான் தலைமையும் ஏற்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு செக் வைத்து இருக்கிறது.

கார் போனது
கடைசி வரை கூட்டத்தில் இதனால் வேறு விஷயங்கள் எதையும் விவாதிக்க முடியாமல்.. கூட்டம் ஒருவழியாக முடிந்துள்ளது. கூட்டம் முடிந்து எல்லா தலைகளும் கடுகடுத்த முகத்தோடு வெளியேறி இருக்கின்றன. ஓபிஎஸ்ஸும் இறுகிய முகத்தோடு வெளியேறி இருக்கிறார். அவர் போன சில நிமிடங்களில் அவரின் வீட்டை நோக்கி 2 கார்கள் சென்றுள்ளன. அந்த காரில் மொத்தம் 3 அதிமுக நிர்வாகிகள் இருந்துள்ளனர்.

3 நிர்வாகிகள்
அந்த காரில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம்வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நீண்ட நேரம் இரவோடு இரவாக பேசி உள்ளனர். அதிமுக மீட்டிங்கில் நடந்த கலவரம் பற்றி பேசி உள்ளனர். இதில் ஆர்பி உதயகுமார்தான் எடப்பாடி - ஓபிஎஸ் இடையே தூதுவர் போல செயல்பட்டு வருகிறார். தேனியில் சசிகலா பிரச்சனை வந்த போது கூட உதயகுமார்தான். இதனால் அவர்கள் கூட்டத்தில் நடந்தது பற்றி பேசி உள்ளனர்.

இன்னொரு தலை
இன்னொரு தலையும் இந்த கூட்டத்தில் இருந்துள்ளார். அவர் பெயர் இன்னும் வெளியாகவில்லை. இதில் ஓபிஎஸ் ஒற்றை தலைமைக்கு வாய்ப்பே இல்லை. பொதுக்குழுவில் இதை எழுப்ப பார்த்தால் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவேன் என்று கடுப்பாக பேசியதாக கூறப்படுகிறது. அவரை சமாதானம் செய்யும் வகையில் இந்த கூட்டத்தில் சில கருத்துக்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஓபிஎஸ்ஸோ.. முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தேன்.. தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தேன்.. எதிர்க்கட்சி தலைவர் பதவியும் இல்லை. இப்போது இதையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக கூட்டத்தில் சொல்லி இருக்கிறாராம்!












Click it and Unblock the Notifications