தேர்தல் குறித்த அறிவே இல்லாதவர்களின் முழக்கம் “ஒரே நாடு ஒரே தேர்தல்” - அன்றே பாஜகவை விளாசிய திமுக!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்யலாம் என வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் கடும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ளன. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு சட்டசபையின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என்பது குறைக்கப்பட்டு மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்ள நேரிடும்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கூட இது தொடர்பாக கருத்து கேட்டிருந்தது. அப்போது திமுகவின் எதிர்ப்பு நிலைப்பாட்டை விளக்கி தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.
அத்துடன் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி, ஒரே நாடு ஒரே தேர்தல் முழக்கத்தை கடுமையாக விமர்சித்து தலையங்கம் எழுதியது. அந்த தலையங்கம்: பா.ஜ.க.வுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'ஒரே'தான்! எதற்கெடுத்தாலும் 'ஒரே' சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு!
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்வு, ஒரே தேர்தல் , ஒரே வரி, ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது 'ஒரே' மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது.
பாஜக அரசுகளும் கலைப்பா?: 'நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்' என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்?
கொல்லைப்புற பாதை: பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந்த வழியாகும். அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? ஐந்து ஆண்டுகள் கழித்து, நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தா? அதுவரை அந்த மாநிலத்தை ஆளப் போவது யார்? அந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடத்துவதற்காக, ஒருவேளை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை, பா.ஜ.க.வின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா?
தேர்தல் குறித்த அறிவே இல்லை: குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலையே இரண்டு கட்டங்களாகத்தான் நடத்தினார்கள். ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. ஒருமாநில சட்டமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத நாட்டில்தான் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் - நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தப் போகிறார்களாம்! உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதால் தனியாக செலவாகிறதே? அதனையும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டியதுதானே? பல்லாயிரம் கோடியை ஒவ்வொரு மாநில அரசும் சேர்ந்து செலவு செய்கிறதே? இதனை மிச்சம் பிடிக்க வேண்டாமா? இவர்களுக்கு தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது என்ற அறிவே இல்லை. தேர்தல் என்பது மக்களுக்காக நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படவில்லை. மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளைச் செலுத்துவதன் மூலமாக - அதன் அடையாளங்களாக உறுப்பினர்களைத் தேர்வு செய்து அனுப்புகிறார்கள். மக்களின் ஒற்றை வாக்குதான் அரசை வழிநடத்துகிறது என்பதைவிட, அந்த ஒற்றை வாக்கின் அடித்தளத்தில் ஆட்சியானது நிற்கிறது. இதுதான் தேர்தல் ஆகும்.
கூட்டாட்சிக்கு எதிரானது: தேர்தலை 'மக்களாட்சி'யின் மகத்துவமாகப் பார்க்காமல், 'செலவாக'ப் பார்க்கும் எண்ணமே தவறானது ஆகும். அதனால்தான் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது, நடைமுறை சாத்தியமற்றது' என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த முதலமைச்சரின் கடிதம் டெல்லியில் தேசிய சட்ட ஆணையத்தில் நேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த கடிதத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், சட்ட ஆணையத்தில் நேரில் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நடைமுறை சாத்தியமற்ற, சிக்கல் நிறைந்த கூட்டாட்சிக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பரிந்துரைக்கக்கூடாது' என்று முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். 6, 7, 9, 11, 12, 15 - ஆகிய நாடாளுமன்ற மக்களவையானது முன்கூட்டியே கலைக்கப்பட்டு இருக்கிறது என்பதை தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். மக்களவையாக இருந்தாலும், சட்டமன்றப் பேரவையாக இருந்தாலும் அதன் காலம் என்பது ஐந்து ஆண்டுகள். அதனை முன்கூட்டியே கலைக்க முடியாது என்பதையும் முதலமைச்சர் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
மாநிலங்களில் குழப்பம்: அரசியல் சட்டமானது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகும். சட்டப்பிரிவு 172 மற்றும் பிரிவு 83 ஆகியவை நாடாளுமன்றத்தின் கால அளவைக் குறிக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு இது விரோதமானது. இவை மக்களாட்சித் தத்துவத்துக்கு விரோதமானதாக அமையும். தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமானது ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஏற்றதும் அல்ல. ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற பேரவைக் காலமானது அதிகரிக்கப்பட வேண்டும், அல்லது குறைக்கப்பட வேண்டும். இதன் மூலமாக மாநிலங்களில் குழப்பமே ஏற்படும்.
இரண்டு தேர்தல்களின் தன்மையும் வேறுவேறு. தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவது நாடாளுமன்றத் தேர்தல். மாநில நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டியது சட்டமன்றத் தேர்தல். இரண்டையும் குழப்பிக் கொள்ள முடியாது. எல்லாம் தேர்வு தானே என்று அறிவியல் தேர்வையும், கணக்கையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்ல முடியுமா? நேரமும், பணமும் மிச்சம் ஆகுமே?!
தேர்தல் பாதுகாப்பு: "ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவதால் வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், சீட்டு வழங்கும் இயந்திரங்களிலும் பற்றாக்குறை ஏற்படும்" என்று தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் ஒரு முறை கூறினார். இந்தியா முழுமைக்குமான பாதுகாப்பு என்பதே சாத்தியமில்லை. பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலத்தில் இருந்து படைவீரர்கள் இங்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பாதுகாப்பு பணிக்கு வெளிமாநிலம் செல்கிறார்கள். அதனால்தான் இரண்டு மூன்று கட்டங்களாக மாநிலத் தேர்தலே நடத்தப்படுகிறது. இவை எதுவும் தெரியாமல் செய்யப்படும் உளறல்தான் 'ஒரே தேர்தல்' ஆகும். இவ்வாறு திமுகவின் முரசொலி நாளேடு தலையங்கம் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறையை விமர்சித்திருந்தது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications